அவர்கள்
புத்தக அலமாரியை
ஒவ்வொரு வாரமும்
ஒழுங்குபடுத்துகிறார்கள்
மாத இதழ்கள்
வார இதழ்கள்
நாளிதழ்கள்
சிறுவெளியீடுகள்
சிற்றிதழ்கள்
நாவல்கள், சிறுகதைகள்
கட்டுரைகள், கவிதைகள்
என
ஒவ்வொருவாரமும்
ஒழுங்குபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்
ஒரு முறை கூட
பெரும்காற்று வீசியதில்லை
புத்தகங்களை கலைக்குமளவுக்கு.
சிறுகுழந்தைகளும் இல்லை
கலைத்துப் போடுவதற்கு
நண்பர்களையோ எதிரிகளையோ
எவரையும் அனுமதிக்கமாட்டார்கள்
அதன் அருகில்
அவர்களே அறியாமல்
அவர்களுக்குள் பரவி
அவர்களை ஆட்டி வைக்கும் சர்வாதிகாரி
யாரென உணர முடியாமல்
ஒழுங்குபடுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்