“வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இருப்பதற்கு லாயக்கானதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்...”
-ஆல்பற் காம்யூ
இவற்றை எழுத அமரும் போது, நான் குடியிருக்கும் வாடகை வீட்டிற்கு எதிரே ஒரு லாறியைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு எஞ்சினை அணைக்காமல் தன் முதலாளியிடம் கணக்குக் கொடுப்பதற்காகப் பக்கத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார் அந்த லாறியின் ஓட்டுநர்.எஞ்சின் ஓடிக் கொண்டே இருக்கிறது.
அந்த எஞ்சினிலிருந்து வரும் கார்பன் டை/ மோனோ ஆக்சைடுகளோடு இன்னும் கெட்ட காற்றுகள் என் அறைக்குள்ளே பெருவாரியாக வருகின்றன. எவ்வளவு டீசல் வீண்...? அணைத்து விட்டு உள்ளே போய் பேசிக் கொண்டு இருந்தால் என்ன...? இந்த நெடியேறும் புகை நாற்றத்தை எப்படிப் பொறுத்துக் கொண்டு படிப்பது, எழுதுவது...?
அந்த லாறியின் உரிமையாள இளைஞர்கள் இதுவரை ஒரு புன்முறுவலைக் கூட எனக்கு வழங்கியதுமில்லை, என் முறுவலை ஏற்றதுமில்லை, இந்திரா அலங்காரத்தின் கதையில் வரும் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல. என்னவென்று அவர்களிடம் சொல்வது, “வந்துட்டாய்ங்கெ... அதிசயமாச் சொல்ல...” என்று கிண்டல் செய்ய வாய்ப்பிருக்கிறது.
-ஆல்பற் காம்யூ
இவற்றை எழுத அமரும் போது, நான் குடியிருக்கும் வாடகை வீட்டிற்கு எதிரே ஒரு லாறியைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு எஞ்சினை அணைக்காமல் தன் முதலாளியிடம் கணக்குக் கொடுப்பதற்காகப் பக்கத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார் அந்த லாறியின் ஓட்டுநர்.எஞ்சின் ஓடிக் கொண்டே இருக்கிறது.
அந்த எஞ்சினிலிருந்து வரும் கார்பன் டை/ மோனோ ஆக்சைடுகளோடு இன்னும் கெட்ட காற்றுகள் என் அறைக்குள்ளே பெருவாரியாக வருகின்றன. எவ்வளவு டீசல் வீண்...? அணைத்து விட்டு உள்ளே போய் பேசிக் கொண்டு இருந்தால் என்ன...? இந்த நெடியேறும் புகை நாற்றத்தை எப்படிப் பொறுத்துக் கொண்டு படிப்பது, எழுதுவது...?
அந்த லாறியின் உரிமையாள இளைஞர்கள் இதுவரை ஒரு புன்முறுவலைக் கூட எனக்கு வழங்கியதுமில்லை, என் முறுவலை ஏற்றதுமில்லை, இந்திரா அலங்காரத்தின் கதையில் வரும் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல. என்னவென்று அவர்களிடம் சொல்வது, “வந்துட்டாய்ங்கெ... அதிசயமாச் சொல்ல...” என்று கிண்டல் செய்ய வாய்ப்பிருக்கிறது.
அந்த வீட்டுப் பெண்கள், மாலையானால் தெருவில் கொண்டு வந்து கொட்டும் பாலி எத்திலின் பைகளை என் வீட்டிற்கு எதிரேதான் எரிப்பார்கள். “அய்யோ டையாக்ஸின் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளிப்படும்... மண் குலையும்... காற்று தீயும்... புற்று வரும்”, என்று சொல்லிவிட முடியுமா? ஒரு பெரிய நகைச்சுவையைக் கேட்டதுபோல் சிரிப்பார்கள்.
இப்போது இந்தச் சிறிய அறையில் மூன்று நாற்றங்களுடன் நான் இருக்கிறேன். எரியும் டீசலின் நாற்றம், எரிந்தடங்கிய குப்பையில் ஒரு நெளியும் கீற்றென மேலெழும் வெண்புகையில் கலந்து வரும் பிளாஸ்டிக்/ பாலி எத்திலின் கரியும் நாற்றம், கொசுவிற்கென நானே கொளுத்தி வைத்திருக்கும் பாலிவினைல் களோரைடு கலந்த கொசுக் கொல்லித் திரவத்திலிருந்து வெளிப்படும் தலைவலிக்கும் நாற்றம்...
இப்போது என் படைப்பில் இந்த மூன்று நாற்றமும் கமழ்ந்தால் நல்லது... அல்லது எதிர்காலத்தில்... அல்லது எதிர்வரும் ஏதோ ஒரு சமயத்தில்... ஆனால் கமழ்ந்தாக வேண்டும். இல்லையேல் என் படைப்பு நேர்மை குறித்து எனக்கே சந்தேகம் வந்துவிடும்.
இதே கொள்கையுடன் இந்திரா அலங்காரம் இயங்குவதாக நான் உணர்கிறேன். இது பெரிது. இந்தப் படைப்பு நேர்மை ஓர் இளம் படைப்பாளிக்கு அமையப் பெற வேண்டும். அது அவரை வரலாற்றிற்கும், மக்களுக்கும் அடையாளப்படுத்தும்.
“இந்த கதையெல்லாம் எங்கிட்டே வேண்டாம்ப்பா”
“சும்மா கதைக்காதே...”
“நல்ல கதையால்ல இருக்கு...”
“இது என்னாப்பா/என்னடி புதுக்கதை...”
போன்ற வழக்குகள் புழக்கத்திலிருக்கின்றன.
இவையெல்லாம் எவற்றை உணர்த்தி நிற்கின்றன?
இட்டுக் கட்டி, எடுத்துச் சொல்லி, புனைந்து திரித்து, வலிந்து தெரிந்து, கற்றுக் கேட்டு வாழும் நம் மக்கள் கதைகளை உருவாக்கியதைத்தான்.
இப்போதும் கதைகள் உருவாக்கப்பட வேண்டுமா எனில் வேண்டாம் என்றோ, வேண்டும் என்றோ வழக்கொன்றை உருவாக்குவதல்ல... சிறுகதைக்குள் கதை தவிர்த்த ஒன்று இருக்கலாம்... கதையும் இருக்கலாம்...சிறுகதை என்ற வடிவம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் காலம் இதுவாக அமைகிறது என்று நம்புகிற சா. கந்தசாமி போன்றோரின் வரிசையில் நான், இந்திரா அலங்காரம் போன்றோரும் இருக்கிறோம் என்பதே இக்கதைகளை வாசிக்கும் போது எனக்குள் முகிழ்த்த மகிழ்ச்சியாகும்.
‘ஒரு படைப்பாளி ஒன்றாக மட்டுமே ஒரு காலத்திலும் இருக்க முடியாது; வால்ட் விட்மன் சொல்வது போல், படைப்பாளி என்பவர் பன்முகப்பட்டவர், ஓராயிரம் ஒரு கோடி என அதிகரித்துப் பல்கிப் பெருகிக் கிடப்பவர்... வேறு வேறாய்ச் சிதறிக் கிடப்பவர்’ - என்று க. பஞ்சாங்கம் குறிப்பிடுவதுபோல், இந்திரா அலங்காரம் இச்சிறுகதைகளுக்குள் பன்முகப் பரிமாணம் காட்டுகிறார்.
‘அணில்குட்டி’ என்ற சிறுகதையில் அவரின், ‘கணங்களைப் பிடிக்கும் முயற்சி’ இனிதே கைகூடி வந்துள்ளது. பிள்ளைகளின் உலகமும், அதனைக் கொண்டாடத் தவறுகிற பெற்றோர் மற்றும் உறவினர்களின் உலகமும் மிகப் பெரிய இடைவெளியில் இயங்குவதனை இக்கதை அனுபவப்படுத்துகிறது.
குறுகுறு நடை நடந்து, சிறுகை நீட்டி, கட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும், நெய்படு அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்கும் மக்களைக் கொண்டாட பெற்றோர்க்கும் நேரமில்லை. கல்வி நிறுவனங்களுக்கும் திட்டமில்லை. திருடப்படும் குழந்தைமையால் உடைபடும் ஆளுமை, வக்கிரங்களாகப் பூக்கும் பதின் பருவத்தைத் தான் பரிசாகத் தந்து கொண்டிருக்கிறது... தரப்போகிறது என்ற உண்¬யைக் கூற வரும் இவரின், ‘மயானத்தின் குழந்தை’ என்ற சிறுகதையை வாசிக்கும்போது வாசகர் ஒரு அதிர்வை உணர வாய்ப்பிருக்கிறது.
பரந்த புல்வெளியில்/வயல்வெளியில் கவிந்து தவழும் அமைதியின் ஊடாக மெள்ளப் பரவும் ஒரு பறவையின் கீதமென அனுபவங்களைச் சுமந்து, ஆண்டாள் சொன்னது போல் ‘கீசுகீசு’ என்று பேசுகின்றன இவரின் சிறுகதைகள். அதற்கேற்றாற் போல் வாசகரை உள்ளிழுக்கும் நறுக்கி வைத்தாற் போன்றதொரு எளிய நடையைக் கையகப்படுத்தியுள்ளார்.
‘கவனிக்கிற எவரும்’ படைப்பாளியாக மலர்ந்து விட முடியம், படைப்பாற்றல் நிறைந்த சமூகத்தால் கட்டமைக்கப்படும் ஒரு பண்பாட்டை, அறிவு வளத்தை எந்தச் சதியும் முற்றாக அழித்துவிட இயலாது. இந்திரா அலங்காரம் கவனிக்கிறார். எனவே மிகக் கூர்மையாக, ‘தருணங்களை’ அவரால் பதிவு செய்து வைக்க வாய்க்கிறது. ‘ஒண்ணு ரெண்டு மூணு’ என்ற சிறுகதையில் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு எதிராக இந்த வாழ்வின் சூழல் எத்தனை வன்மத்தோடு இயங்குகிறது என்பதனை அழகுபட விவரிக்கிறார். ஒரு அகவயப்பட்ட பார்வைக்கு, புறச்சூழல் எத்தனை முக்கியம் என்பதை இச்சிறுகதை ஒரு பேரனுபவமாக முன்வைக்கிறது. ‘சமூக இருப்பே சமூக உணர்வைத் தீர்மானிக்கிறது‘(social being determines social consciousness) என்று மார்க்ஸ் குறிப்பிட்டது என்றைக்குமான உண்மையாகத்தான் இருக்கிறது.
விரிந்த தன் குடும்பத்திற்காக ஒரு பேரினத்தின் அழிவைப் பார்த்துக் கொண்டு வாளாயிருந்த ஒரு கிழட்டு யாளியின் துரோக நாற்றத்தை ‘சூரிய கிரகணம்‘ என்ற சிறுகதையில் ஊடாடும் சொற்களின் வழி சுவாசிக்க முடிகிறது.
‘மெரினாவில் காரல் மார்க்ஸ்’, ‘மனதின் நாற்றம்’, ‘மயானத்தின் குழந்தை’,- போன்ற கதைகள் முக்கியமானவை.
ஒரு பெருந்தீங்கின் சல்லி வேர், இச்சமூகத்தின் ஒவ்வொரு சராசரி மனிதரின் வாழ்வுக் கணங்களிலும் ஊடுருவித் தொழிற்படுவதைக் ‘கவனிக்கும்’ நுட்பமான படைப்பாளியாக மிளிர்கிறார் இந்திரா அலங்காரம்.
“சொன்ன கதை... சொல்லாத கதை...எல்லாக் கதையுங்... எங்கதைதான்...”- என்று கதையின் முடிவில் தாத்தாக்களும் பாட்டிகளும், சொல்லிச் சிரித்து பிள்ளைகளிடம் விடைபெறுவது போல... இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் எலும்பும் சதையுமாக நின்று உரையாடி உயிர்ப்புடன் வாசிப்பினூடே நம்மில் கலந்தாடி விடைபெறுகின்றன. இதுவே இப்படைப்பாளியின் தனித்தன்மையாகவும் வெற்றியாகவும் அமைகிறது.
சிறந்த மொழிபெயர்ப்பாளரும், இடதுசாரி சிந்தனை வெளியில் தீவிரமாக இயங்கும் தோழருமாகிய இந்திரா அலங்காரம் அவர்களின் இவைபோன்ற முயற்சிகள் தொடரட்டும் என வாழ்த்துகிறேன்.
தோழமையுடன்
இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்.
3/16 - ‘நடேசம்’
அத்திவெட்டி - 614 613
9894252103.
(ஆழி பதிப்பக வெளியீடாக ஜனவரி 2013 சென்னை புத்தக கண்காட்சியில் வெளிவந்துள்ள எனது மெரீனாவில் கார்ல் மார்க்ஸ் என்ற சிறுகதை தொகுப்பிற்கு கவிஞர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் எழுதிய அணிந்துரை)
