Friday, June 5, 2015

கருப்பாகும் சிகப்பு

இங்கு காவிக்கு எதிராகப் போராடுகிறோமென்று…. சிவப்பெல்லாம் கருப்பாகிக் கொண்டிருக்கிறது.
திமுக சொல்ல வேண்டிய அநீதி வென்றது,,,, நீதி செத்துப்போன நாள் என்ற வசனங்களை எல்லாம் தோழர்கள் சொல்லும் அளவிற்கு சென்று விட்டார்கள்.
அதே நேரத்தில்தான் 13 தோழர்கள் மீதான வழக்கிலிருந்து விடுதலையானார்களே.
மாவோயிஸ்டாக இருப்பதில் குற்றமில்லை என்றதே கேரள நீதிமன்றம். அதற்கு சனநாயகத்தின் வெற்றி என்று, பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்களா, என்ன?

ஜெயல்லிதா, வழக்கில் வெற்றிபெற்றதை, நீதி தோற்றுப் போனது என்று சொல்பவர்கள், ஒன்று நீதிமன்றத்தின் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்திருக்கும் அப்பாவி குடிமகனாக, நடுத்தரவர்க்க நியாயவானாக இருக்க வேண்டும். அல்லது  ஆளும் கட்சி என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் அதை எதிர்த்து கருத்துச் சொல்லி தன் இருப்பைக் காட்டிக் கொள்கிற எதிர்கட்சியாக இருக்க வேண்டும்.

இந்த வகைகளில் ஒன்றா இடதுசாரிகள்நீதிமன்றம், போலீஸ், ராணுவம் எல்லாம் அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கான இந்திரங்கள் என்பது கம்யூனிச பாலபாடம், அதைக் கூடவா மறந்து விட்டனர் தோழர்கள்.?

இப்பொழுது பெரியார், பெரியாரிய புகழ்பாடல்….

என்றைக்கும் மார்க்சியமும் பெரியாரியமும் ஒன்றல்ல.
பெரியாரியம் சாதி ஒழிப்பைக் கோரும். சமூக நீதி பேசும்கடவுளை மறுக்கும். பார்ப்பன சாதிக்கு நிகராக மற்ற சாதிகளும் ஆக்கப் பட வேண்டும் என்றும் கோரும். ஆனால், சாதிக்குள் இருக்கும் வர்க்க ஏற்ற தாழ்வில் கை வைக்காது.
ஏனெனில் பெரியாரியம் பொதுவுடமைத் தத்துவம் அல்ல. தனிச்சொத்துக்கு எதிரானதுமல்ல. சீர்திருத்த வாதம். அவ்வளவே.
அதற்கான முக்கியத்துவத்தை அந்த அளவிற்கு மட்டுமே அளிக்க வேண்டும்,

அதோடு, திராவிட அரசியலுக்கு எதிராக இன்று தமிழ்தேசிய அரசியல் வேகத்துடன் கிளம்பியிருப்பதன் அவசியம் என்னவென்பதை ஆராய வேண்டும்.
ஆரியத்திற்கு எதிராக திராவிடம் எழுந்தபோது கண்டு கொள்ளாமல் விட்ட அதே தவறை இன்று இடதுசாரிகள் செய்கிறார்கள்.
.
திராவிடத்திற்கு எதிராக எழுந்துள்ள தமிழ்தேசிய அரசியலை புறந்தள்ளுகிறார்கள்.
சென்ற தேர்தலில், மேற்கு வங்கம், கேரளா தவிர்த்து பிஜேபி தோல்வியை சந்தித்த இடம் தமிழ்நாடுதான். காரணம் தமிழினப் படுகொலையும், அதன் பாதிப்பால் எழுந்த தமிழின உணர்வும்தான்.
இந்த உணர்ச்சியை ஓட்டுக்காக நன்றாகப் பயன்படுத்தி கொண்டது அதிமுக  என்று சொல்லலாம்.
இந்த உணர்வு சமூகத்தில் இருப்பதால்தானே அதைப் பயன்படுத்த முடிகிறது.
இடதுசாரிகள் அந்த உணர்வுக்கு மதிப்பளிப்பதுமில்லை, அதற்கு முக்கியத்துவம் அளிப்பதுமில்லை.
இடதுசாரிகளால் ஒதுக்கப்படுவதால் மட்டும் ஒரு சமூகத்தின் உணர்வு நிலை இல்லை என்றாகி விடாது…. இல்லாமலும் போய்விடாது.


மார்க்சியர்கள் பெரியாரியம் இங்கு எந்த அளவிற்கு தன் பங்கை ஆற்றியிருக்கிறது என்பதை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மறுப்பில்லை.

பெரியாரியத்தை திராவிட அரசியலை ஆரோக்கியமாக விமர்சிக்காமல், அதுவே இச்சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான சர்வரோக நிவாரணி என்பது தவறானதொரு அணுகுமுறையே.