Friday, May 25, 2012

வழக்கு எண் 18/9 : புகார்களும் புகழாரங்களும்


          12.5.2012 அன்று  பரிசல் செந்தில் நாதன் படப்பெட்டி இதழ் சார்பாக ஏற்பாடு செய்திருந்த வழக்கு எண் 18/9  படத் திறனாய்வுக் கூட்டத்திற்கு சென்றிருந்தோம். புக் பாய்ண்ட் புத்தக்கடை யின் அரங்கத்தில் நடைபெற்றது, புத்தகங்களுக்கு ஏசி போட்டவர்கள் அரங்கத்திற்கும் செய்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும். நான் போனபோது வளர்மதி பேச ஆரம்பித்தார். அந்த திரைபடத்தின் பார்வைக்கோணம் குறிப்பாக கேமரா கோணம் இவற்றை விளக்க பூதகதையொன்றை சொல்லிக் கொண்டிருந்தார். வகுப்பில் இருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது, வெக்கையான அந்த வகுப்பை தாங்கமுடியாமல் கீழே குளிரூட்டப்பட்ட புத்தகக் கடைக்கு சென்றுவிட்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் பேச ஆரம்பிக்கும் போது வந்த்தால், மற்றவர்கள் என்ன உரையாற்றினர் என்று தெரியவில்லை. 
பாலாஜி சத்திவேல் அந்த படத்தில் பணியாற்றியவர்களையும் நடித்த (இன்ஸ்பெக்டர், முறுக்கு வியாபாரி, நீதிமன்ற ஊழியர்)  நடிகர்களையும் பேச வைத்தார். அவர்கள் ஓரிரு வார்த்தைகள் பேசி முடித்தனர். அதன் பிறகு இயக்குனருடன் கலந்துரையாடல் தொடங்கியது. பலர் சுருக்கமாகப் பாராட்டினர். சிலர் சற்று நீளமாகப் பாராட்டினர். அங்கு வந்திருந்தவர்கள் யாருமே சாதாரண பார்வையாளர்கள் அல்ல. ஒரு சில கேள்விகள், விமர்சனங்கள், அறிவுரைகள் மீது எனக்கு முரணான கருத்துக்கள் உண்டு. அதைப் பதிவு செய்யவும், திரைப்படம் குறித்த எனது கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளவும்  இந்த பக்கம்.

ரோஸி என்ற பாத்திரம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரைக் குறிப்பிட்டுக் காட்டுவதாக இருந்தது. அதைத் தவிர்த்திருக்கலாம் என்றும் இடதுசாரிகள்தான் சமூகத்திற்கு எதிராக தங்கள் கோபத்தை காட்டுவார்களா மற்றவர்கள் காட்ட மாட்டார்களா என்றும் ஆதங்கப்பட்டனர்.  

ரோஸி என்கிற கதாபாத்திரம் ஏற்கனவே நல்லகுணம் கொண்டவளாக மனிதாபிமானம் உடையவளாக இருக்கும் போது அவள் திருந்தி பூ விற்பதாக ஏன் காட்டவேண்டும் என்றனர்.

  பெண் பற்றி சனாதன இந்து பார்வை உங்களுக்குள் இருப்பதால்தான் காதல் படத்தில் முதலிரவு முடியுமுன்பே நாயகியை நாயகனிடமிருந்து பிரித்தது போலவும், இந்த படத்தில் அந்த மிடில் கிளாஸ் கதையில் வரும் பெண் தனது ஆபாசப் படங்களை அவன் பார்க்குமுன்பே அதைஅழித்து விடுவது போலவும் கதையாக்கியுள்ளீர்கள் என்றார். (இந்தப் பார்வையாளர்களுக்கெல்லாம் ஈ படத்தில் வரும் உதிரி கதாநாயகன் தீவிரவாதியாக மாறும் போது தன் காதலியை துறந்து விட்டுப் போவார் அந்த அம்மணி காலில் விழுந்து கதறி அழும். உதிரி ஆண் புரட்சியாளரா ஆகுறாராம். காபரே டான்ஸ் ஆடுற பெண் புரட்சியாளராக ஆக மாட்டாங்களாம். இதுவும் பழைமைப் பார்வைதான். இதெல்லாம் தெரியாதே) 

இன்னொரு இளைஞர் அந்த படத்தில் வர்ற வேலு, தினேஷ் 2 பேருடைய குணமும் என்கிட்ட இருக்கு எனறார். அப்படியெல்லாம் இல்ல தப்பா புரிஞ்சுக்காதீங்க என்று இயக்குனர் சொன்னாலும் அந்த இளைஞன் விடாப்பிடியாக மறுத்தார். ஒரு வேளை தினேஷ் முகத்தில் ஜோதி ஆசிட் வீசுவது போல கதையில் இருந்திருந்தால், அந்த இளைஞர் அப்படி சொல்லியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். தமிழ் ரசிகர்கள் பெரும்பாலனவர்கள் சினிமாவில் வரும் பாத்திரங்களில் இருக்கும் தன்னுடைய குணத்தை அடையாளப் படுத்திக் கொள்ளும் அளவிற்கு அறிவும் பக்குவமும் அற்றவர்கள். சினிமா எந்த கதாபாத்திரத்தை நாயகனாக காட்டினாலும் தன்னை அக்கதாபாத்திரமாக மாற்றிக்கொள்ளும் அறிவிலிகள் என்பதைத்தான் அது எனக்கு உணர்த்தியது.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இயக்குனர் எனக்குள்ளும் பழைய கருத்தாக்கங்கள் ஒட்டி கொண்டு இருக்கலாம், எல்லாமே Trial and error என்றார். வெறுமே பொழுது போக்கில் மட்டுமே இருக்கும் ரசிகர்களின் கவனத்தை இந்தப் பக்கம் பாருங்க என்று திசைதிருப்பியிருக்கும் ஒரு சிறு முயற்சிதான்... நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்... என்றார்.

என்னைப் பொறுத்தவரைக்கும் ஆணையும் பெண்ணையும் பாலியல் கோணத்தில் மட்டுமே பார்ப்பது தான் சனாதனப் பார்வை. ஓடிப்போன காதலர்களிடையே உடல் ரீதியாக என்ன நிகழ்ந்திருக்கும் என்று எடுத்த எடுப்பிலேயே நினைக்க வைப்பதுதான் சனாதனப் பார்வை. 2வது திருமணம் நம் சமூகத்தில் பெரிய தியாகமாகப் பார்ககப் படுவதும் புரட்சிகரமாக நினைக்கப் படுவதும் கூட இதனால்தான். அழுக்குப்பிடித்த ஆணாதிக்க இந்து சனாதனப் பார்வையுள்ளவர்களுத்தான் ஒரு விதவையை, விவாகரத்துப் பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதுகூட பெரிய்யய புரட்சிகரச் செயல் எனப் படுகிறது.

. கூட்டத்தில் அனறு ஒரு இளைஞன், விஜய் மில்டனிடம் (ஒளிப்பதிவாளர்) அந்தப் படத்தில் மிடில் கிளாஸ் கதையில் வரும் கதாநாயகியின் கிளிவேஜ் தெரிவது போல கேமரா கோணம் இருந்தது அதை தவிர்த்திருக்கலாம் என்று சொன்னபோது  நாங்க அதைக் கவனிக்கலை காட்சியில் வேறு விசயங்களில் கவனம் செலுத்திவிட்டோம். இனிமேல் இதையும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்று பதில் கூறியது மகிழ்க்சியாக இருந்தது.

விபச்சாரம் என்பது ஆணாதிக்க சமூகத்தின் கண்டுபிடிப்புதான். எங்கெல்ஸ் தனது குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் வரலாற்றில் எப்படி பார்த்தாலும் ஆண் தனது கட்டற்ற பாலியல் வேட்கையிலிருந்து விலகி ஒரு ஒழுங்குக்குள் தன்னை கொண்டு செல்ல நினைத்திருக்க வாய்ப்பில்லை. அதைப் பெண்கள்தான் முதன் முதலாக முன்னெடுத்துச் செய்திருப்பார்கள் என கூறியிருப்பார். அந்த அடிப்படையில்தான் ரோஸி எனும் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார். விபச்சாரத் தொழிலை செய்வது இழிவானது  அல்ல என்ற கருத்து மதங்களோடும், ஆதிக்கத்தோடும், இங்கு சாதியோடும் தொடர்புடையது. சமூக வாழ்வின் நிர்பந்தம் தான் பெண்களை இந்த தொழிலுக்கு தள்ளுகிறது என்ற நியாயமான பார்வை இயக்குனரிடம் இருந்ததால்தான் அந்தப் பெண் தன்னை மாற்றிக் கொள்வது போல காட்டப் பட்டுள்ளது. 

ஆனால் அந்தப் பாத்திரத்திற்கு ரோஸி என்று ஒரு மதத்தின் பெயரைச்சுட்டிக் காட்டுவது போன்ற பெயரை தவிர்திருக்கலாம். அதுமட்டுமல்ல ஆபாச படங்களை செல்போனில் பார்த்த மாணவர்களை இன்ஸ்பெக்டர் கண்டிக்கும்போது ‘தூய இருதய ராஜின் மகன்தாண்டா நீயி‘ என்பார். பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதிலும் அரசியல் இருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் மதமாக கிறித்தவம் இருக்கிறதுதான். ஆனால்,இங்கு கிறித்தவம் சிறுபான்மை மதமாகத்தான் இருக்கிறது தினேஸ் காவல் நிலையத்திற்கு வரும்போது நல்ல பையனாக காட்டுவதற்காக அவனுக்கு நெற்றியில் திருநீறு வைக்கப்பட்டிருக்கும்.

இடது சாரிகள் தான் கோப்ப்படுவார்களா என்ற ஆதங்கத்திற்கு ஒரு பதில். யார் இல்லையென்று சொன்னது.  அதுதான் எல்லா படத்திலும் இடதுசாரியில்லாத கதாநாயகன் பல பெண்களோட ஆட்டம் போட்டுவிட்டு அப்புறம் திடீரென ஒரு கதாநாயகிய காதலித்து பிறகு கோபாவேசமா அநியாயத்தை எதிர்ப்பாரே. ஏன் போலிஸைக் கூட எதிர்ப்பார். ஆனால் என்ன போலிஸ்லயும் ஒரு நல்ல போலிஸ் கதாநாயகனுக்கு உதவி செய்வார். இயக்குனருக்குள்ளிருக்கும் இடதுசாரிச் சார்புதான் ஒரு பெண்ணைக் எதிர்ப்புக்குணமுள்ள கதாநாயகியாகச் சித்தரிக்க வைத்திருக்கிறது..அதுவும் போலீஸ் மீதான தாக்குதலாக. என்ன வழக்கம் போல போலீஸ் அராஜகத்தை காண்பிக்க கதாநாயகனை போலீஸ் அடிக்கும் காட்சி, இந்த காட்சி பல படங்களில் காட்டப் பட்டுவிட்டதாலும், நிஜசம்பவங்களே இதை விடக் கொடூரமாக தொலைக்காட்சிகளில் காட்டப்படுவதாலும் அது துருத்திக்கொண்டு தெரிகிறது. முக்கியமாக படத்தில் இன்ஸ்பெக்டரின்  கயமையோடு நல்லவன் போல நடிக்கும் குணத்தின் பாதிப்பு குறைந்து விடுவது போலத் தெரிகிறது. அந்தக காட்சி இல்லாவிட்டால் இன்ஸ்பெக்டரின் கதாபாத்திரத்தின் குணம் இன்னும் தூக்கலாக தெரிந்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அடிக்கடி ஒரு விசயம் காட்சிக்கு காட்சி காட்டப் பட்டால் அதன் வீரியம் குறைந்து விடும் என்ற உத்தியை  கதாநாயகியின் அமிலம் வீசப்பட்ட முகத்தை ரசிகர்களுக்கு காட்டுவதில் பயன் படுத்தியிருக்கிறார்.

இடதுசாரிகள் மட்டுமே போலீஸ் அநியாயத்தை எதிர்ப்பது இல்லைதான். அண்மையில் ஒரு ரவுடியின் மனைவியிடம் வாலாட்டிய போலீஸை வெட்டிக் கொன்று விட்டான் அந்த ரவுடி. அதன் காரணமாய் போலீஸ் வழக்கம்போல ரவுடியைப்போட்டுத் தள்ளிவிட மனைவியும் தற்கொலை செய்து கொள்ள அவர்களின் குழந்தை அனாதையாக மாறிய சம்பவம் தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது. கதாநாயகி சிவப்பு புத்தகத்தை படித்தவரின் மகளாக சித்தரிக்கப்ட்டிருப்பதன் மூலம்  தனக்கு நேரும் அநீதிக்கு இந்த அரசுதான் அதன் கருவியான போலீஸ்தான் காரணம் என்ற புரிதலில் ஆசிட் ஊற்றியவன் மீது ஆசிடை ஊற்றாமல் போலீசை தாக்குவதாகச் சித்தரிக்கப்ட்டுள்ளது.  ஆனால் அதே பாதிப்பில் தனது நடவடிக்கையைத் தீர்மானிப்பவளாய் கதாநாயகி தன் தாக்குதலை அந்த அரசியல்வாதிமீதோ அல்லது ஆசிட்டை ஊற்றியவன் மீதோதான் (வர்க்கப் பகைமையின் அடிப்படையில்) தாக்குதல் நடத்தியிருக்கவேண்டும். ஆனால் இங்கு கதாநாயகியிடம் காதல் வேலை செய்கிறது. தனக்காக தன்னை நேசித்தவன் அடிவாங்கியிருக்கிறான், போலீஸால் ஏமாற்றப்பட்டிருக்கிறான் என்பதன் தாக்கத்தின் விளைவாக அச்செயல் மாறி விடுகிறது.

 அப்புறம் நம் தமிழ் ரசிகர்களிடம் எப்படிக் குப்பை கொட்டுவது. ஆசிட் ஊற்றியவனைப் கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டும்.  ஆபாசப் படம் பார்த்த மாணவர்களை தோப்புக் கரணம் மட்டும் போடச் சொல்லி விட்டு விட்டுவிடவேண்டும். தன் காதலனை ஏமாற்றியதற்காக போலீஸைத் தாக்க வேண்டும். தாக்கப்பட்ட பின் போலீசிடம் அடிவாங்குவதையும் வழக்கமான் ஹீரோயிச படக் காட்சி போல காட்டப் பட வேண்டும். இறுதியில் கதாநாயகன் ஆசிட் தாக்குதலால் கோரமாகிப் போன முகத்தைப் பார்த்த பின்பும் உனக்காக..... என்று வசனம் வேண்டும். இறுதிக் காட்சியான சிறைச்சாலை காட்சி படத்தின் முதலில் வந்த யதார்த்தமான சிறைக்காட்சிபோல் யதார்த்தமாக இல்லாமல் செய்த்து ஓரளவிற்கு படத்தின் வெற்றிக்கு உதவியதாக கருதுகிறேன். இந்த படத்தில் அந்த பெண்  காதலன் இல்லாமல், காதல் இல்லாமல், கதாநாயகி பாத்திரம் இடதுசாரி வளர்ப்பில் வந்த பெண் என்ற உணர்வில் தன்னோடு சம்பந்தமில்லாத ஒரு பொது பிரச்சினைக்காக போராடுபவளாக அமைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் நம் ரசிகர்களுக்கு பிடித்திருக்காது. (சமுராய் படத்தில் கதாநாயகியின் நிலை அதுதான்.)   

இன்றைய தமிழ் திரையுல சூழலில் இந்த படம் வித்தியாசமான சிறந்த படம்தான் அதில் மாற்று பேச்சுக்கே இடமில்லை. படத்தின் கதைக்கரு, கதாபாத்திரங்கள், கதாபாத்திரங்களின் நல்ல கெட்ட குணங்கள், காதல் அனைத்துமே வர்க்க அடிப்படையில், ஆதிக்கத்துக்கும் அடக்குமுறைக்குமான முரண்களை தெளிவாக காண்பிப்பதாக அமைக்கப் பட்டிருப்பது மிக முக்கியமானது. வேலு பசியால் மயங்கிக் கிடக்கும்போது நாகரீக் கொழுந்துகள் குடிச்சிட்டு கிடக்கிறான் என்று  சொல்லிவிட்டு போகும் போது ரோஸி உதவி செய்வது, தினேஸ் ஆர்த்தி காதலுக்கும், வேலு ஜோதிகாதலுக்குமான வேறுபாடு, தினேஸ் அவனது நட்பும், வேலுவும் அவனது நட்பும், ரோஸி திருந்துவது, ஜெயலட்சுமி அதே வாழ்வைத் தொடருவது, காவல் துறையின் கயமை என எல்லாமே வர்க்க அரசியலை உள்ளடக்கியது

கல்லூரி படத்திலும் இந்த படத்திலும் ஒரு ஆட்சியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுத்துள்ளார். கல்லுரி படத்தில் உண்மைச் சம்பவத்தை அப்படியே எடுத்திருந்தார். ஆனால் படம் ஓடவில்லை. இந்தப் படத்தில் ஆசிட் வீச்சை வேறு வர்க்கத்திற்கு பொறுத்திப் பார்த்து புனைவாய் கதை சொல்லியிருக்கிறார். படம் நன்றாக ஓடுகிறது. ஆனால் இதில் இன்னும் சில விஷயங்களில் கவனம் செலுத்தியிருந்தால் மேலும் சிறப்பாக வந்திருக்குமே என்ற ஆதங்கத்திலிருந்து சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இப்படத்தின் கதாநாயகனின் அம்மா அப்பாவை கிராமச் சூழலில் காண்பிக்கும் காட்சி சின்ன பிள்ளைகள் பள்ளியில் செய்த நாடகக்கட்சி போலவே (கோபத்துடன் அருவாளை எடுத்து வெட்ட வருவது) இருந்தது. அக்காட்சி இச்சமூகத்தின் வலிமிக்க உண்மையைச் சொல்வது என்பதால் அவர்களிடம் இன்னும் கொஞ்சம் வேலை வாங்கியிருக்கலாம்.

.  அது போலவே ரோசி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்ணின் நடிப்பிலும் தேர்ச்சி இல்லை.  தாடிக்கார கடைக்காரர் சிறப்பாகச் செய்துள்ளார்.  கதாநாயகனை இன்னும் கொஞ்சம் வேலை வாங்கியிருக்கலாம்.  கறுப்பாக ஒல்லியாக இருந்தாலும் அவரது உடல் மொழி அடித்தட்டு வர்க்க இளைஞனின் உடல்மொழியாக சில இடங்களில் இல்லை. (உதாரணத்திற்கு முறுக்கு கம்பெனியில் இருந்து ஓடிவருகிற காட்சிகள்)  காதல் காட்சிகளில் சிறப்பாக செய்திருக்கிறார். அழிந்து போய் கொண்டிருக்கிற கூத்து கலையை நினைவுபடுத்தும் கதாநாயகனின் நண்பனின் கதாபாத்திரம். அந்த முடிவெட்டு அந்தப் பாத்திரத்துக்கு ஒத்துப்போகவில்லையோ என்று தோன்றுகிறது.

  மிடில் கிளாஸ் கதையில் வரும் தினேஸ ஆர்த்தி நன்றாகவே செய்துள்ளார்கள். (குறிப்பாக காரில் அந்த பெண் செல்போனில் உள்ள படங்களை பார்த்து வெளிப்படுத்தும் முக பாவனைகள்,செல்போனை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு மொட்டைமாடியில் ஆர்த்தியின் அழைப்புக்காக காத்திருந்து ஆர்த்தியின் அழைப்பு வந்த்தும் பேசுவது இவையிரண்டுமே குளோசப்பில் வரும் காட்சிகள்.)  முறுக்கு தொழில் அதிபர், அவரின் மனைவி, கதாநாயகியின் அம்மா, இன்ஸ்பெக்டர், அரசியல்வாதியின் கையாளாக இருக்கும் ஜெயலட்சுமி என எல்லா பாத்திரங்களும் வெளுத்து வாங்கியுள்ளனர். 

இயக்குனர் செல்போனில்  ஆடையை அவிழ்க்கும்  காட்சியைத் தவிர்த்திருக்கலாம். (இதைமட்டும் தணிக்கை குழு அனுமதித்து விடுகிறது.  கூட்டத்தில் கிளிவேஜ காட்சியை சுட்டிக்காட்டியவர்கள் இதை ஏன் சொல்லவில்லை என்று எனக்குப் புரியவில்லை.) அந்தக் காட்சி இல்லாமலேயே அந்த இடத்தில் சொல்ல வருகிற விசயம் தெளிவாகப் புரிநதுவிடும். செல்போனில் அவளது புகைப்படங்களை பார்த்துகொண்டிருக்கும் போதே  பார்வையாளர்களுக்கு விளங்குவதற்காக அவன் செல்போனில் சார்ஜ் போடுவதற்காக  அவள் உடை மாற்றும் அறையில் செல்லை விட்டு போகும் காட்சி மீண்டும் காட்டப் படுகிறது. அதன் பிறகும் எதற்கு அந்தக் காட்சி.

இறுதியில் ஜோதியின் பாத்திரப்படைப்பு. அதிகம் பேசாத, கொஞ்சிக் குலையாத, ஆடிப்பாடாத, இடுப்பைக்காட்டாத, சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாத, அதிக ஒப்பனை இல்லாத, அன்பும் பொறுப்பும்மிக்க ஒரு பெண் பாத்திரத்தை தமிழ் திரையில் பார்க்கும் போது இயக்குனர் மீது பெருமதிப்பு வருகிறது. இருந்தாலும் ஒரு குறை. இன்ஸ்பெக்டர் மீது ஆசிட் ஊற்றுவதற்கு முன்பு, அவள் எழுதிய கடிதத்தை படிக்கும் போது குரலில் உள்ள தொனி வழக்கமான தமிழ் கதாநாயகிகளுக்கு மட்டுமே பொருந்தும். அந்த தொனி இந்த பாத்திரத்தின் ஆளுமையை குறைத்து, குலைத்து விடுவது போல் எனக்கு தோன்றுகிறது. ஆனால் அதை நம் ரசிகர்கள் ஏற்பார்களா என்று கேட்டால் கடினம்தான். 

   இயக்குனர் ரசிகர்களின் மனத்தை நன்கு படித்துள்ளார். இவர்களை வழக்கமான பாணியிலிருந்து திசை திருப்புவது என்கிற செயலை நன்றாகவே செய்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் அதிக தொழில் நுட்பக் கருவிகளை பயன்படுத்தாமல் வெறுமே பொழுதை போக்குவதற்கான படமாக இல்லாமல், அதே நேரம் கதையின் வேகம் குறையாமல் பார்வையாளனை உட்கார வைப்பது எளிதான காரியமல்ல. அதில் நூறு சதம் அவரும் அவரது குழுவினரும் வெற்றி பெற்றுள்ளனர்.  இங்கு சுட்டிக்காட்டியுள்ள அற்பமான குறைகளை விட கூடுதலானவற்றை படைப்பாளி என்ற முறையில் இயக்குனர் உணர்ந்திருப்பார். அதனால் மற்றுமொரு தரமான படைப்பை நாமெல்லாம் மீண்டும் இந்த குழுவினரிடமிருந்து ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்.     

Friday, May 11, 2012

சூட்சுமமாக உணரப்படும் ஒத்திசைவு

      எழுத்து – அது கட்டுரையாகட்டும், இலக்கிய வடிவங்களான கதை, சிறுகதை, கவிதை எதுவாக இருந்தாலும் மனிதன் தான் சொல்ல நினைப்பதை முழுமையாக, தான் கற்பனை செய்த அதே சொற்களால் கூறிவிட முடிவதில்லை.  தன் மனதிற்குள் அழகழகான சொற்களால் வடிவமைக்கப்பட்ட வாக்கியங்கள் எழுத்தாக வெளிவரும் போது அதன் அழகில் பிசிறு இருப்பதாகவே படைப்பாளி உணர்கிறான்.  உலகில் எந்த ஒரு எழுத்தாளரும், இலக்கியவாதியும், தன் மனதில் ஓடிய அதே சொற்களாலேயே முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறேன் என்று கூறிக் கொள்ள முடியாது.  அப்படிக் கூறிக் கொண்டால் அங்கு படைப்பாளி மரணித்து விடுகிறான்.  இது மனித குலத்திற்கே உள்ள சவால்.  மனிதனின் சிறந்த எழுத்துக்களை நோக்கிய, வெறிபிடித்த பயணமது.  இந்த வெறிதான் கவிதை என்னும் இலக்கிய வடிவம் தோன்றுவதற்கான மூல காரணம்.  தன் எண்ணம் மற்றும் உணர்வை, காலத்தின் வேகத்தில் – அது சிறு விநாடியே ஆயினும் கூட – சிறிதும் மாறிவிடாது அதனை அவ்வாறே வெளிப்படுத்தும் முயற்சியில் குறைவான சொற்கள், பல்பொருள் பொதிந்த ஒரே சொல் என்ற உத்தியின் அவசியம் மனிதனுக்கு நிர்பந்திக்கப்படுகிறது.  இந்த நிர்பந்தத்தின் காரணமாக தன்னிச்சையாக உருவாகும் வடிவம் தான் கவிதை. அது அதற்கே உரிய அழகை கொண்டுள்ளது.
தான் வாழும் சூழலின் பாதிப்பின்றி எந்தக் கவிதையும் வெளிப்படுவதில்லை.  ஆதியிலிருந்து சூழல் மாற, மாற வெளிப்படுத்த நினைக்கும் விசயங்களும் அதன் அடிப்படையில் மாறிக் கொண்டே இருக்கிறது.  இயற்கை குறித்த பயம், அதை எதிர்த்த போராட்டம் என்பதன் தீவிரம் இன்று மாறியிருந்தாலும் கூட, சமூக அவலங்களும், கொடூரங்களும், மனிதனுக்கு மரண அடி கொடுக்கும் போது ஆறுதலாக மடி தேடும் மனது கவிதையை நாடுகிறது.
ஒரு மனிதன் தன்னை, தன் வலியை உணர்வதில், புரிந்து கொள்வதில் இரண்டு வகை உள்ளது.  தன் உணர்வை மட்டுமே மையமாகக் கொண்டு புரிந்து கொள்ளும் ‘தன்மையப் போக்கு‘.  மற்றொன்று, தான் வாழும் சமூக அரசியல் குடும்பச் சூழலில் சக மனிதர்களின் உணர்வுகளோடு தன்னைப் புரிந்து கொள்வது.  முதல் வகையைச் சேர்ந்தவர்களால் எழுதப்படும் கவிதைகள் அதற்கேயுரிய தன்மையுடன் வெளிப்படுகிறது.  அதனாலேயே ஹவியின் கவிதைகள் கவிதையின் மீது மோகம் கொண்ட ஆரம்ப வாசகனுக்குப் புரியாது.  அவர்களுக்குப் புரியாதது பற்றி கவலைப்படாமல் இருப்பது படைப்பிற்கும், படைப்பாளிக்கும் ஒரு சாபக்கேடு.
இந்நூலில் இடம்பெற்றுள்ள சில கவிதைகள் பூடகமாய் எந்தவொரு பிரச்சினைக்கும் எந்த நேரத்திலும் எவரொருவரும் அவரவர் புரிதல் மட்டத்திலிருந்து புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவை.  சில கவிதைகள் வாசகனுக்கும் கவிஞனுக்கும் இடையே உள்ள ஒத்த அலைவரிசையால் மட்டுமே சூட்சுமமாக புரிந்து கொள்ளக் கூடியவை.  இங்கு கவிஞனோடு ஒத்த அலைவரிசையில் இல்லாத வாசகனின் கதி கேள்விக்குறி.
ஒத்த அலைவரிசை இல்லாத பொழுது சூட்சுமப் பொருள் புரியாவிட்டாலும் வார்த்தைகள் வாக்கியங்கள் புரிய வேண்டும்.  இதற்காக கவிஞர் கவலைப்பட வேண்டும்.  தன் வாழ்வின் அடையாளமென மனித குலத்திற்கு விட்டுச் செல்லும் தன் கவிதை சிலருக்கு மட்டும்தான் புரியும் என்பதில் மனநிறைவடைய என்ன இருக்கிறது?
இந்த உலகில் சமூக உற்பத்தி முறை மனித உறவுகளைத் தீர்மானிக்கிறது.  இந்த தீர்மானிக்கப்பட்ட உறவுகளில் தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் புரிந்து கொள்வது, தன்னை அவர்களுக்குப் புரிய வைப்பது என்பது மனித குலத்திற்கு மட்டுமே உள்ள சிக்கல்.  இதையொட்டி எழும் மகிழ்ச்சியும், வலியும்தான் மனித வாழ்வை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் ஊக்கிகள்.  இந்த மையப் புள்ளியிலிருந்து கொண்டு தன் கவிதைக்கு வெளியே தான் கொண்டுள்ள அரசியல் புரிதலையும், ஹவி தன் கவிதை பரப்பிற்குள் கொண்டுவர எனது வாழ்த்துக்கள்.

ப்ரிய
இந்திராகாந்தி

(ஹவியின்  இசைக்குமிழி கவிதைத் தொகுப்பிற்கு நான் எழுதிய முன்னுரை. உயிர்மை வெனியீடாக 2010 ல் வெளிவந்த இத்தொகுப்பிற்கு ராஜமார்த்தாண்டன் விருது வழங்கப்பட்டது.)

Friday, May 4, 2012

இந்திய புரட்சி என்பது கானல் நீர் வேட்டை - தியாகு

காஞ்சியில் நடைபெற்றக் கூட்டத்தில் இந்தக் கட்டுரையை தோழர். பாரதி வாசிக்கிறார்.

தோழர்களே!

சுதீப் சக்ரவர்த்தி எழுதி அ. இந்திராகாந்தியின் தமிழாக்கத்தில் வெளிவந்துள்ள ரெட்சன் – நக்சல் பகுதிகளில் ஒரு பயணம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நானூறுக்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த நூல் குறித்துப் பேசக் கிடைத்த வாய்ப்பிற்காக நன்றி.
எதிர்பாராத உடல் நலிவினால் நேரில் வரமுடியாததில் உங்களைக் காட்டிலும் எனக்குத்தான் அதிக வருத்தம்.
தோழர். தியாகு
ஏனென்றால் இந்நூலைப் படிக்கும் போது உங்களுக்கு ஏற்படும் உணர்வுக்கும் எனக்கு ஏற்படும் உணர்வுக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு.  இந்நூல் ஒரு வகையில் என் கடந்த காலத்தைப் பற்றியது.  சுதீப் சக்ரவர்த்தி படம் பிடித்துக் காட்டுகிற நக்சலிசம் அல்லது மாவோயிசம் எனப்படுகிற அந்தக் கருத்தியல் அல்லது இயக்கத்தினுடைய தோற்றத்தையும் தொடக்க கால வளர்ச்சியையும் வாசித்தவனாக அல்ல;  வாழ்ந்து பார்த்தவனாகவே என்னைக் கூறிக் கொள்ள முடியும்.  
சுதீப் சக்ரவர்த்தி சுவை மிகுந்த நெடுங்கதை அல்லது பயணக் கட்டுரைக்குரிய விறுவிறுப்பான இலக்கிய நடையில் இந்நூலை வரைந்துள்ளார்.  அந்தக் கதைத் தன்மையையும் விறுவிறுப்பையும் தமிழுக்குக் கொண்டு வருவதில் இந்திராகாந்தி பெருமளவுக்கு வெற்றி பெற்றுள்ளார்.  ஆங்கில மூலமும் சரி அதன் தமிழாக்கமும் சரி இன்னும் செறிவாகத் தொகுக்கப்பட்டிருந்தால் இந்நூலின் இலக்கியத் தரம் இன்னும்கூடுதலாய் இருக்கும் என்று என் பணிவான கருத்து.
ஆளும் வர்க்கங்களும் அவற்றின் ஊதுகுழல்களும் மக்களிடமிருந்து உண்மைகளை மறைக்கப் புரட்சிக்காரர்களைப் பூச்சாண்டிகளாகக் காட்டுவது புதிய செய்தியன்று.  நக்சலைட் என்பார்கள், தீவிரவாதி, அதிதீவிரவாதி, பயங்கரவாதி, தீ. கம்யூனிஸ்ட் என்று காலத்திற்கு காலம் பட்டங்கள் சூட்டிப் பயமுறுத்துவார்கள்.  தமிழ்நாட்டில் புலிப் பூச்சாண்டி காட்டுவது இன்றளவும் தொடர்கிறது.
உண்மையில் நக்சலைட்டுகள் அல்லது மாவோயிஸ்டுகள் என்பவர்கள் யார்?  கொலைகாரர்களா, கொள்ளைக்காரர்களா?  இரத்த வெறி கொண்டு அலைபவர்களா?  ஆயுதங்களைக் காட்டிச் சமூகத்தை மிரட்டிப் பணியவைக்கத் துடிப்பவர்களா?
எப்போதாவது யாராவது சிலர் அவர்களை அவர்கள் பணிசெய்யும் இடங்களுக்கே சென்று நேரில் சந்தித்து அவர்களது உணர்வுகளையும், பார்வைகளையும் நோக்கங்களையும் செயற்பாடுகளையும், அவர்களுக்கும் மக்களுக்குமான உணர்வுகளையும் அறிந்து வந்து உலகிற்குச் சொன்னால்தான் உண்டு.  அருந்ததிராய் அண்மையில் இதைச் செய்தார்.  அது நாடெங்கும் பெரிய விழிப்புணர்வைத் தோற்றுவித்தது.  அருந்ததிராய்க்கு முன்பே இன்னும் விரிவான அளவில் இதை ஒருவர் செய்திருக்கிறார்.  அவர்தான் சுதீப் சக்ரவர்த்தி!  அவர் நக்சல் பகுதிகள் எனப்படுகிற பகுதிகளில் முக்கியமான பலவற்றுக்கு நேரில் சென்று புரட்சியாளர்களையும் பொதுமக்களையும் ஏன் மாற்றுக் கருத்துடையவர்களையும் கூட சந்தித்துச் செய்திகளைத் திறனாய்வுடன் பதிவு செய்திருக்கிறார்.  இந்த நூலில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள விவாதங்களும் உரையாடல்களும் நம்மையும் விவாதிக்கத் தூண்டுகின்றன.
நக்சல் இயக்கத்தினுடைய இன்று வரையிலான வளர்ச்சியை நான்கு வெவ்வேறு கட்டங்களாகப் பிரித்துச் சொல்லி அதன் படிமலர்ச்சியை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது இந்நூல்.
மாவோயிஸ்டுகள் தலைமையிலான பழங்குடி மக்கள் போராட்டத்தின் புயல் மையமாக விளங்கும் தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியான சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து இந்த நூலின் பயணம் தொடங்குகிறது.  குறிப்பிட்டப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் வலுவாய் இருப்பதற்கு காரணம், வணிக கொள்ளையர்களிடமிருந்தும் தொழில் நிறுவனக் கொள்ளையர்களிடமிருந்தும் பழங்குடி மக்களை மாவோயிஸ்டுகள் பாதுகாத்ததுதான்.
“மாவோயிஸ்டுகள் அவர்களைப் பாதுகாக்கவில்லை எனில் வேறு யாரும் அதைச் செய்வதற்கில்லை” என்று அடித்துச் சொல்கிறார் சுதீப் சக்ரவர்த்தி!  இந்நூலாசிரியர் ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் நாம் மறந்து போய்விடக் கூடிய பல செய்திகளைக் கவனப்படுத்துகிறார்.  எடுத்துக்காட்டாக,  இப்போது இந்திய அரசில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்ராம் ரமேஷ் 2006 சூனில் “ஆந்திர அரசு நக்சலைட்டுகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்காகத்தான் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை உருவாக்கியுள்ளது” என்று கூறினாராம்.
சத்தீஸ்கரில் பழங்குடி மக்களுக்கெதிராக அரசும் பெருங்குழுமங்களும் தோற்றுவித்த அடியாள் படையாகிய சல்வாஜுடும் பற்றியும், அது செய்த கொடுமைகள் பற்றியும் மிக விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.  பழங்குடி மக்களை அடக்கி ஒடுக்குவதில் காங்கிரஸ், பா.ச.க., வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் எவ்விதக் கூச்சமும் இல்லாமல் அணி சேர்ந்து நிற்பதை அம்பலமாக்குகிறது இந்நூல்.  இந்த வகையில் சுதீப் சக்ரவர்த்தி சல்வாஜுடும் படையைச் சேர்ந்தவர்களையே சந்தித்து உரையாடி அவர்கள் சொல்வதை அப்படியே பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சுதீப் சக்ரவர்த்தி
இந்த நூலின் இரண்டாம் பகுதி நக்சல்பாரி இயக்கத்தின் தோற்றத்தையும் தொடக்கக் காலத்தையும் விரிவாக எடுத்துரைக்கிறது.  சாருமஜும்தாரின் எழுத்துக்கள் பேச்சுகளிலிருந்து கருத்துக்குரிய பல பகுதிகளை இந்நூலாசிரியர் மேற்கோளாய்த் தருகிறார்.  இப்போது பின்நோக்கிப் பார்க்கும் போது இந்தக் கருத்துக்களில் பலவும் பிழையானவையாக, ஏன் அபத்தமானவையாகக் கூட உணரப்படலாம்.  ஆனால் அந்தச் சூழலில் அந்த நேரத்தில் சாருமஜும்தாரின் சொற்கள் எத்தகைய உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டின என்பதை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியாது.  1969 தொடக்கத்தில் “இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும்“ என்ற தலைப்பில் வெளிவந்த சாருமஜும்தாரின் உரைதான் படிப்பையும் குடும்பத்தையும் துறந்து முழுநேரப் புரட்சிப் பணிக்கு நான் வருவதற்கு ஊக்கமளித்தது என்பதை மறப்பதற்கில்லை.  அழித்தொழிப்பு, அழித்தொழிப்பு மட்டுமே என்பதான அவரது அரசியற் செயல்வழி ஒரு மோசமான தவறாக அமைந்து விட்டது என்பதை ஏற்றுக் கொள்ளும் போதே பணம், பதவி என்ற ஆசைகளை மட்டுமல்ல உயிராசையையே உதறி எறிந்து விட்டு பல நூறு இளைஞர்கள் முழுநேரப் புரட்சிப் பணிக்கு வருவதற்கு தந்த ஊக்கத்திற்காகவே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
சாருவின் அழைப்பை ஏற்று குடும்பத்தையும் படிப்பையும் துறந்து புரட்சிப் பணிக்கு வந்த தமிழ்நாட்டின் முதல் மாணவன் என்ற முறையில் அடுத்த சில நாட்களில் திருச்சியில் தோழர் சாருமஜும்தாரை சந்தித்த போது ஒரு குழந்தைக்குரிய குதூகலத்தோடு அவர் என்னைத் தட்டிக் கொடுத்துப் பேசியதை இப்போதும் நினைவில் வைத்துள்ளேன்.
சாருமஜும்தார் நிறுவிய சிபிஐ (எம்.எல்) கட்சி அவர் காலத்திலேயே உடையத் தொடங்கியது.  பிறகு அது பலத் துண்டுகளாகச் சிதறியது.  மீண்டும் அது பட்டறிவின் அடிப்படையில் ஒருங்கிணைந்து ஒன்று பட்டு சில பேரமைப்புகளாகவும் சில சிறு குழுக்களாகவும் இன்றளவும் இயங்கிவருகிறது.  சுதீப் சக்ரவர்த்தி இந்தப் பலதரப்பட்டவர்களையும் தேடிச் சென்று அவர்களோடு உரையாடி அவர்களின் நிலைப்பாடுகளையும் அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளையும் நமக்காகப் பதிவு செய்கிறார்.
உழவர் ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றில் முன்சென்ற இயக்கங்களான 1946-51 தெலங்கானா போராட்டத்தையும் 1945-46 வங்காளத்தின் தேபதா இயக்கத்தையும் இந்நூலாசிரியர் நினைவுபடுத்துகிறார். நூலாசிரியரின் மாமனார் தீபங்கர் வழியாக அவர் பழைய நிகழ்வுகளை நமக்கு ஒரு கதையாகச் சொல்லிச் செல்கிறார்.  – “நாங்கள் என்ன விலை கொடுத்தாவது ஏழைகளுக்கு நியாயத்தைப் பெற்றுத் தர வேண்டுமென முடிவு செய்திருந்தோம்.  அதற்காக நாங்கள், குடும்பம், சொத்து, எங்கள் வாழ்க்கை என எல்லாவற்றையும் துறக்கத் தயாராகி இருந்தோம்”.
“நீங்கள் அது எல்லாவற்றையும் திரும்பச்  செய்வீர்களா?”
“ஆமாம்”
ஆம் ஒரு புரட்சிக்காரனுக்கு பணிக்காலம் பதவிக்காலம் என்று எதுவுமில்லை.  அவனுக்கு மரணம் மட்டுமே ஓய்வு தரும்.  இந்த உணர்வோடு ரத்தமும் சதையுமாக வாழ்கிற பலரை சுதீப் இந்த நூலில் பல இடங்களில் நமக்கு அறிமுகம் செய்கிறார்.
சுதீப் ஒரு பத்திரிகையாளர், இந்தியா டுடே இதழில் வேலை பார்த்தவர்.  இந்தியாவின் ஐம்பதாவது சுதந்திர ஆண்டு விழாவுக்காக ORG – மார்க் உடன் இணைந்து ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.  இந்தக் கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி” அடுத்த ஐம்பது வருடங்களில் இந்தியா ஒரே நாடாக இருக்குமா? இல்லை தனித்தனி நாடுகளாகப் பிரிந்திருக்குமா? ஒரே நாடாக இருக்கும என்று 41 சதவீத்ததினரும் பிரிந்து விடும் என்று 36 சதவீத்த்தினரும், தெரியாது, சொல்ல முடியாது என்று 23 சதவீத்ததினரும் பதிலளித்துள்ளனர்.  இது 1997 இல்!  இன்று 2010 இல் இதேபோல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால் இந்த விழுக்காடுகள் எப்படி மாறிப்போயிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.
சுதீப் மாவோயிஸ்டுகளைப் பிழையாப் பெருமைக் கொண்டவர்களாக, தேவதைகளாக, வண்ணந் தீட்டிக் காட்டவில்லை.  அவர்களின் குறைநிறைகளை விருப்பு வெறுப்பின்றி பதிவு செய்கிறார்.  சில நேரம் அவர்களின் சொற்களிலேயே இதைச் செய்கிறார்.  மாவோயிஸ்டுகளின் தவறுகள் என்று நாம் கருதக் கூடியவற்றை எடுத்துக் காட்டுகிறார்.  ஆனால் எந்தக் கட்டத்திலும் அவர்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறையை அவர் நியாயப்படுத்தவில்லை.  அவர் அரசின் பக்கம் நின்று இதைச் செய்யாமல் மக்களின் பக்கம் நின்று இதைச் செய்வதால் நம்பகத் தன்மை கூடுகிறது.  இந்தியாவின் பிற பகுதிகளில் தேசிய இனப் போராட்டங்களை அடக்குவதற்கு அரசு செய்யும் முயற்சிகளையும் அவற்றுக்கெதிரான போராட்டங்களையும் இடையிடையே பதிவு செய்கிறார்.  ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து மணிப்பூரைச் சேர்ந்த இரோம் ஷர்மிளா நடத்திவரும் நீண்ட பட்டினிப் போராட்டத்தை பதிவு செய்கிறார்.
இந்த நூலின் சுவாரஸ்யமான பகுதி இனிதான் தொடங்குகிறது.  இந்த நாட்டின் புரட்சிக்காரர்களுக்கும் வரலாற்று மாணவர்களுக்கும் ஒரு பெரிய ஆசை உண்டு.  நக்சல்பாரி என்ற அந்தச் சிற்றூரை – புரட்சிகர இயக்கத்துக்கு ஒரு புனைப்பெயர் தந்த அந்தக் கிராமத்தை ஒரு முறையாவது போய் பார்க்க வேண்டாமா – சுதீப் இதே ஆசையோடு நம்மையும் அழைத்துக் கொண்டு நக்சல்பாரிக்குப் பயணப்படும் போது இதயம் படபடக்கிறது.
காஞ்சிப்பட்டில் சரிகை சேர்த்தது போல் இந்நூலில் ஆங்காங்கே அழகான கவிதைவரிகள் பதிக்கப்பட்டுள்ளன. ஒன்றே ஒன்றையாவது எடுத்துக் காட்ட வேண்டும்.  1975 மே மாதம் 3 ஆம் நாள் ஹவுரா சிறையில் ஐந்து நக்சல்பாரிக் கைதிகள் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர்.  அவர்களில் ஒருவர் பிரவீர் ராய் சவுத்ரி – 22 வயது மாணவர்.  அவருடைய செல்லப் பெயர் பக்கி அல்லது பறவை!  அவர் கொல்லப்பட்ட செய்தி அறிந்து கல்கத்தா பிரெசிடென்சி சிறைச்சாலையில் இருந்த அவருடைய தோழர்கள் சிறை அறையின் சுவரில் ஒரு துண்டுக் கல்லைப் பயன்படுத்தி எழுதிய வரிகள் இவை:
“அமைதியாயிருங்கள்
என்னுடைய சகோதரன் இங்கு உறங்குகிறான்
வெளுத்த முகத்துடனும், வருத்தந் தோய்ந்த இதயத்துடனும்
அவனருகில் நிற்காதீர்கள்
அவன் சிரிப்பான்!
அவனது உடலை மலர்களால் மூடாதீர்கள்,
ஒரு மலருடன் மேலும் மலர்களைச் சேர்ப்பதில் என்ன பயன்?
உங்களால் முடியுமெனில்
அவனை உங்கள் இதயத்தில் புதையுங்கள்
நீங்கள் கேட்பீர்கள்
இதய  பறவையின் கிளுகிளுப்பு ஒலியை
தூங்கிக் கொண்டிருந்த உங்களது ஆன்மா விழித்துக் கொள்ளும்.
உங்களால் இயலுமெனில்
சில துளிக் கண்ணீரைச் சிந்துங்கள்
மேலும் –
உங்களது குருதி முழுவதையும்”.

நக்சல்பாரி புரட்சித் தலைவர்களில் சாரு மஜும்தாருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்கள் கனு சன்யாளும், ஜங்கல் சந்தாலும்!  இவர்களில் கனு சன்யாள் எழுதிய நக்சல்பாரிப் போராட்ட அறிக்கை எங்களுக்குப் பெரும் வழிகாட்டியாக அமைந்தது.  கிராமப் புற மக்களோடு பழகுவது எப்படி, அவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாம், என்ன எதிர்பார்க்கக் கூடாது, அவர்களை வென்றெடுக்க எப்படிப் பொறுமையாக உழைக்க வேண்டும் என்பதையெல்லாம் அந்த அறிக்கையில் தெளிவாகவும் விரிவாகவும் சொல்லியிருந்தார்.  கிராமங்களில் சென்று பணியாற்றுவதற்கு அந்த அறிக்கை எங்களை ஆயத்தப்படுத்தியது எனலாம்.  அந்தப் பழைய புரட்சியாளர் இப்போது எப்படி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் பலருக்கும் ஏற்படும்.  இந்நூல் நேரடியாக அவரிடமே நம்மை அழைத்துச் செல்கிறது.  அதே எளிமை, அதே உழைப்பு, பட்டறிவினால் பக்குவப்பட்ட தெளிந்த சிந்தனை… மற்றபடி அதே கனு சன்யாள்தான்.  சில மாதங்களுக்கு முன்பு கனு சன்யாள் இயற்கை எய்தியபோது, வாழ்க்கையில் நேரில் சந்திக்க விரும்பிய ஒருவரைச் சந்திக்கத் தவறிவிட்டோமே என்ற வருத்தம் மேலிட்டது.  இந்நூல் அந்த வருத்த்த்தைச் சற்றே தணித்து எனக்கு ஆறுதல் அளித்துள்ளது.
அரசியல் கொள்கை, கோட்பாடு, கருத்தியல் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.  பொதுவாழ்க்கையில் ஈடுபடுகிறவர்கள் எவ்வளவு எளிமையாக இருக்க வேண்டும், எவ்வளவு பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதற்காகவேனும் கனு சன்யாள் போன்றவர்களின் வாழ்க்கையை இளைஞர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.  பொறுக்கித் தின்பதே அரசியல் என்ற எண்ணத்தை மாற்றித் தன்னைத்தான் பொதுநலனுக்காக உருக்கிக் கொள்வதே அரசியல் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சாரு மஜும்தாரின் மிக நெருங்கிய தோழராக இருந்த போதிலும் தொடக்கத்திலிருந்தே அவரோடு கனு சன்யாள் கருத்து மாறுபாடு கொண்டிருந்தார் என்பது முக்கியச் செய்தி.
கனு சன்யாள் சீனத்துக்குச் சென்று தலைவர் மாவோவைச் சந்தித்தது பற்றிச் சொல்கிறார்:
“நாங்கள் 1969 இலிருந்து 1972 வரை தலைமறைவாக இருந்தோம்.  அந்த நேரத்தில் நான் சீனத்துக்குச் சென்று மாவோவைச் சந்தித்தேன். இந்திய நிலைமைகள் குறித்து அவருடன் உரையாடிய பிறகு, நான் அந்த வழி தவறானது என்ற முடிவுக்கு வந்தேன்,”
நாங்கள் அந்த நேரத்தில் “சீனத்தின் பாதை எமது பாதை! சீனத்தின் தலைவர் எமது தலைவர்!” என்று சாரு மஜும்தார் தந்த முழக்கத்தை முழங்கிக் கொண்டிருந்தோம்.  இது தவறான முழக்கம் என்பதை மாவோவே கனு சன்யாளிடம் சுட்டிக் காட்டியதாகப் பிற்காலத்தில் எங்களுக்கொரு செய்தி கிடைத்தது.  இந்த நூலில் “உங்களிடம் மக்கள் ஆதரவு இருந்தால் நீங்கள் வெளியில் யாரிடமிருந்தும் ஆதரவு பெறத் தேவையில்லை” என்று மாவோ தன்னிடம் கூறியதைக் கனு சன்யாள் பதிவு செய்கிறார்.  இது எல்லாப் புரட்சிகளுக்கும், எல்லா விடுதலைப் போராட்டங்களுக்கும் படிப்பினையாக இருக்க வேண்டிய அறிவுரை.
ரெட் சன் என்ற இந்நூலின் ஆங்கிலப் பெயரைச் சிவப்புச் சூரியன் என்றோ செங்கதிர் என்றோ தமிழாக்கம் செய்திருக்கலாம் ஏன் அப்படிச் செய்யவில்லை என்பதற்கு மொழிபெயர்ப்பாளர்தான் விளக்கம் தர வேண்டும். சீனத்தில் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அது பற்றி புகழ்பெற்ற எழுத்தாளர் எட்கர் ஸ்னோ “Red star over china” என்ற நூலை எழுதினார்.  அது “சீனத்தின் மீது சிவப்பு நட்சத்திரம்” என்ற பெயரில் தமிழ் நூலாகவும் வெளிவந்தது.  சீனப்புரட்சி பற்றி உலகம் அறிந்து கொள்ள அந்நூல் பெரிதும் பயன்பட்டது.  அதேபோல் இந்தியாவின் மாவோயிஸ் இயக்கம் பற்றி இந்நூல் அறியத் தருகிறது.
இந்நூலில் எனக்கு ஒரு முக்கிய குறை தென்படுகிறது.  மாவோயிஸ்டு இயக்கத்தின் வளர்ச்சிப் படிநிலைகளையும் உள்வேறுபாடுகளையும் அவற்றால் நேர்ந்த பிளவுகளையும் மறுசேர்க்கைகளையும் எடுத்துரைக்கும் போது இவை அனைத்துக்கும் தந்திரவுத்திச் சிக்கல்களையே காரணமாய் காட்டுகிறது.  நக்சல்பாரி இயக்கத்தின் சார்பில் சாருமஜும்தார் செய்த பிழை அழித்தொழிப்பு என்ற போராட்ட வடிவத்தில் மட்டுமில்லை.  இந்த வடிவத்தை நியாயப்படுத்துவதற்காக இந்தியச் சமூகம் பற்றிய பகுப்பாய்வையும் அரசு பற்றிய கணிப்பையும் அவர் தவறாகச் செய்தார்.  சீனத்தின் பாதை நமது பாதை என்ற முழக்கத்தை நியாயப்படுத்துவதற்காக புரட்சிக்கு முன் சீன சமுதாயம் இருந்த அதே நிலையில் இப்போதும் இந்தியச் சமூகம் இருப்பதாகக் கற்பித்துக் கொண்டார்.  சீனம் அரைக் காலனிய அரைப் பிரபுத்துவ நாடென்றும் இந்தியாவும் அரைக் காலனிய அரைப் பிரபுத்துவ நாடு சீன பெருமுதலாளிகள் தரகு முதலாளிகள் என்றால் இந்தியப் பெருமுதலாளிகளும் தரகு முதலாளிகளே!  எந்த அறிவியல் ஆய்வின் அடிப்படையிலும் அவர் இந்த முடிவுக்கு வரவில்லை.  சமூகப் பகுப்பாய்வின் அடிப்படையிலும் புரட்சியினது வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தின் அடிப்படையிலும் ஒரு மூலவுத்தியை வகுத்து அதிலிருந்து தந்திரவுத்திக்குச் செல்வதற்குப் பதிலாக ஒரு தந்திரவுத்தியை வகுத்து வைத்துக் கொண்டு அதற்கேற்றவாறு மூலஉத்தியை முன்மொழிந்த அகநிலைவாதத் தவற்றினை சாரு செய்தார்.
இரண்டாவதாகச் சீனப் புரட்சியைப் பார்த்தொழுகும் அவசரத் துடிப்பு இந்தியாவின் தனித்தன்மைகளை அவர் பார்க்கவிடாமல் செய்துவிட்டது.  பல்தேசியத் தன்மையும் வர்ண சாதி அமைப்பின் மேலாதிக்கமும் இந்தியத் துணைக் கண்டத்துக்குரிய தனித்தன்மைகளாகும்.  இந்த பல்தேசிய தன்மையை உள்வாங்கத் தவறியதால்தான் சீனத்தில் போலவே இந்தியாவிலும் நீண்ட பயணம் நிகழ்த்த முடியுமென அவர் கனவு கண்டார்.
சிபிஐ, சிபிஎம் கட்சிகளோடு ஒப்பிட்டால் மாவோயிஸ்டுகள் தங்கள் போராட்டப் பட்டறிவின் அடிப்படையில் தவறுகளைத் திருத்திக் கொண்டு முன் செல்வதில் எவ்வளவோ மேம்பட்டுத் திகழ்கிறார்கள்.  அவர்களின் மக்கள் பற்றும் புரட்சி நேயமுமே இதற்கு அடிப்படை.  இந்திய ஆளும் வர்க்கங்கள் சிபிஐ – சிபிஎம் கட்சிகளைத் தங்களின் அங்கமாகவே பார்க்கின்றன.  அதே போது மாவோயிஸ்டுகளைக் கண்டு அவர்கள் நடுங்குகிறார்கள்.  மாவோயிஸ்டுகள் தான் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று மன்மோகன் சிங் பேசியதை நாம் அறிவோம்.  ஆனால் அதே நேரத்தில் மாவோயிஸ்டுகளோ அவர்களை உளமார நேசிக்கிற நண்பனாகிய நாமோ எல்லாத் தவறுகளும் களையப்பட்டு விட்டன;  விரைவில் வெற்றிக் கொடி ஏற்ற வேண்டியதுதான் என்று அலட்சியமாக இருந்து விடுவோமானால் ஏமாந்துபோவோம்.
மாவோயிஸ்டுகள் பட்டறிவின் மூலம் படிப்பினைகள் பெற்று தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னேறியதால்தான் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளார்கள்.  வலிமைபொருந்திய பெருங்குழுமங்களுக்கும், அவற்றுக்கு குற்றேவல் செய்யும் இந்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் எதிராகப் பழங்குடி மக்களை அணி திரட்டிப் போராடுவது மட்டுமல்ல;  இந்தப் போராட்ட அணியில் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்வதிலும் அவர்கள் மகத்தான வெற்றி கண்டுள்ளார்கள்.  இந்தப் போராட்டங்கள் எதில் நிறைவுபெறும் என்ற சிக்கல்தான் முன்னுக்கு நிற்கிறது.  எங்கள் தமிழ்த் தேசம் ஏட்டில் பழங்குடி மக்கள் விடுதலை இந்தியாவுக்குள்ளா? இந்தியாவிலிருந்தா என்று வினாத்தொடுத்திருந்தோம்.
இந்தியப் புரட்சியில் நம்பிக்கை வைத்திருக்கும் வரை இந்தியாவுக்குள் என்றுதான் விடை சொல்ல முடியும்.
காசுமீர், வடகிழக்கு, தமிழீழம்… இந்தத் தேசிய இனப் போராட்டங்கள் மட்டுமல்ல தண்டகாரண்யப் பழங்குடி மக்களின் போராட்டமே வல்லாதிக்கம் தோற்றுவித்த இந்தியக் கட்டமைப்பை  உடைத்து நொறுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை நமக்கு உணர்த்தி நிற்கிறது.
இந்திய புரட்சி என்பது கானல் நீர் வேட்டை!  எவ்வளவு விரைந்து ஓடினாலும் அதைப் பிடிக்க முடியாது.
இதே போல் வர்ண சாதி அமைப்புக்கு எதிரான சமூக நீதிப் போராட்டத்திற்கு நேரடியாகவே அழுத்தம் தரப்பட வேண்டும்.  இது மக்கள் நலனுக்கானது, எனவே ஆதரிக்கிறோம் என்ற நிலைப்பாடு போதுமானதன்று.  ஆதரிப்பதன்று நாமே முன்னெடுத்து நடத்த வேண்டும் என்ற பார்வை தேவைப்படுகிறது.
சுதீப் சக்ரவர்த்தியின் பயணம் இந்த நூலில் அவர் தொட்டிருக்கும் எல்லையோடு முற்றுப் பெற்று விடக் கூடாது, அதற்கு மேலும் தொடர வேண்டும் என்பதற்காகவே இந்தத் திறனாய்வை முன்வைக்கிறேன்.
நூலாசிரியர் இந்தப் பயணத்தைத் தொடர்ந்தாலும் தொடராவிட்டாலும் நூலைப் படிக்கிற நாம் தொடர வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
அடைந்துள்ள வெற்றிகளிலிருந்து ஊக்கம் பெற்று தோல்விகளிலிருந்து பாடம் பெற்று புதிய இலக்குகளை நோக்கி முன்னேறிச் செல்வதற்கு இந்த நூல் நமக்கோர் உந்துதலாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு முடித்துக் கொள்கிறேன். 
நன்றி
வணக்கம்.

(காஞ்சிபுரம் இலக்கிய வட்டம் சார்பில் 05, செப்டம்பர் 2010ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரெட் சன் நூலுக்கான அறிமுகக் கூட்டத்திற்கு தோழர் தியாகு எழுதி கொடுத்தனுப்பிய விமர்சன கட்டுரை)

Wednesday, April 25, 2012

பூமிக் குழந்தையின் கதைகள் : சமயவேல்


 இந்திமொழிப் புனைகதைப் பரப்பில் நிறைய இளம்பெண்கள் புதினங்கள், சிறுகதைகள் எழுதிக் குவிக்கிறார்கள், அனால் அவை ஆபாசமாக, மிகவெளிப்படையாக, சுயசரிதைப்பாங்கில் இருப்பதாக இந்திப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் விபூதி நாராயண் ரை ஒரு பொதுவிழாவில் பேசியதற்கு அந்தப் படைப்பாளிகள் எழுப்பிய கண்டனம் ஜனாதிபதிவரை போனதாக ஒரு செய்தி படித்தேன். தமிழிலும் கவிதைப் பரப்பில் இயங்கிவரும் பல தோழியர்களிடம் புனைகதைகள் எழுதுமாறு வேண்டிக் கொண்டேன். ஆண்-மைய தமிழ் வாழ்வின் எல்லாப் பக்கங்களையும், குறிப்பாகப் பெண்களின் உள்மன விகாசங்களை, அவர்களால் மட்டுமே எழுத முடிகிற எல்லாவற்றையும் எழுத வேண்டிய கடமை பெண் படைப்பாளிகளுக்கு இருக்கிறது என்று கூறிக்கொண்டு வருகிறேன். இந்தவகையில் இந்திராவின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஒரு சிறிய தொடக்கம் எனலாம். அரசியல் பிரக்ஞை, சாதிய எதிருணர்வு, பகுத்தறிவு நோக்கு எல்லாம் கொண்டதொரு பெண்ணின் சொந்தப் பார்வையில் எழுதப்பட்ட கதைகளைப் படிப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. இத்தொகுப்பின் கதைகளின் பின்னாலும் கதைவரிகளின் ஊடாகவும் இயங்கும் படைப்பாளியின் மனவோட்டங்கள் நாம் முற்றிலும் எதிர்பாராதவைகளாக இருக்கின்றன. பெண்ணியம் என்ற சொல் கூட அவசியமில்லை. உறவுகளில், நிகழ்வுகளில், அன்றாட வாழ்வில் இவர் பார்க்கிற தவறான எதையும் தப்பவிடாமல் கவனிக்கிற கூர்மையான நோக்கும், அது சார்ந்த அறச் சீற்றமும், உடனடி எதிருணர்வும், அதே நேரத்தில் மானுடம் சார்ந்த மெல்லுணர்வுகளும் கொண்ட வித்தியாசமான படைப்பாளியாக இருக்கிறார் இந்திரா.

                      பெண்கள் மென்மையானவர்கள் என்கிறார்கள். உடல் சார்ந்த ஸ்பரிச மென்மை அல்ல, மனதின் மென்மை என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கலாம்தானே? படைப்பாளிகளின் ஆதார உணர்ச்சியான இந்த மென்மையை இரண்டு சிறுகதைகளில் நாம் சந்திக்கிறோம். 'கறுப்புக் கோழி' கதையில் வளர்த்த கோழியை அறுக்க முடியாத அளவிற்கு மென்மனதுக்காரர்களாக இவரும் இவரது அண்ணனும் அமைகிறார்கள். கதையின் கடைசிப் பத்தியில், கொல்வதற்கு லாயக்கற்ற மென்மனதைக் கோழியிலிருந்து, ஆடு, மாடு, மனிதன் என்று நீட்டித்து, கொல்லுதல் பற்றிய ஒரு தீர்க்கமான இறுதிக்கருத்தை அடைய முடியாமல் அச்சமுறும் அவரோடு சேர்ந்து நாமும் திகைத்து நிற்கிறோம். உறைய மறுக்கிற ஒரு சொட்டுக் குருதி போல கதை நின்றுவிடுகிறது.

                      இந்த மென்மனது 'அணில் குட்டி' கதையில் அதன் முழுப்பரிமாணத்தில் இயங்குகிறது. குழந்தைகளைக் கண்டு பேய்கள் கூட அன்பு காட்டும். ஆனால் இந்த நவீன மனிதர்கள் அப்படி இல்லை. அவர்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற பெயரில் அவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறைக்கு அளவே இல்லை. மூத்தவள் சிறியவள் என்னும் இரண்டு குழந்தைகளைப் பற்றிய இந்தக் கதையில் அப்பா, தாத்தா, அம்மா, பாட்டி என எல்லோருமே தங்கள் இயல்பான நடவடிக்கைகள் மூலமே, அந்த மூத்த குழந்தையை ஏமாற்றி இழிவு செய்து காயப்படுத்துகிறார்கள். அப்பா சொன்னபடி பிங்கோ வாங்கிவராமல் ஏமாற்றுகிறார். தாத்தாவோ செருப்புப் போடப் போன குழந்தையை ஏமாற்றி நிற்க வைத்துவிடுகிறார். ஆனால் குழந்தைமை என்பது இயற்கையின் ஒரு கூறு. மனித வளர்ச்சிப் பருவங்களில் துள்ளலும் குதியாட்டமும் கொண்ட குழந்தைப்பருவம் அந்தக் காயம்பட்ட குழந்தைக்கு ஒரு அணில் குட்டியைக் காட்டித் தருகிறது. அணில் குட்டி இயற்கையின் அன்பளிப்பு. அது எல்லாவகைச் சுதந்திரத்தோடும் ஆனந்தமாக விளையாடிபடி, இந்தப் புண்பட்ட குழந்தைக்கும் விளையாட்டுக் காட்டி அதை மீட்டுகிறது. குழந்தையின் கண்களில் அணில்குட்டி படுவதைப் போலவே தான் இந்தக் குழந்தை மற்றும் அணில் குட்டி இருவருமே இந்திராவின் கண்களில் படுகிறார்கள். மென்மனதின் அடியில் படைப்பின் சாரம் தங்குகிறது. .

                     சாதியம் பற்றிய கவனங்களை இரண்டு கதைகளில் முழுமையாகவும் பிற கதைகளில் ஓரிரு இடங்களிலும் காண்கிறோம். 'மனதின் நாற்றம்' என்னும் கதை வாடகை வீட்டில் இருப்பவர்களின் துயரங்களைச் சொல்கிற கதை எனினும் கதையின் கடைசி வரியில் வருகிற சாதிய நூல் சட்டென நம் கழுத்தைச் சுற்றுகிறது. அந்த சாக்கடை நாற்றங்களைவிடக் கொடிய நாற்றத்தை அந்த ஒரு வரி மூலம் கதை முழுமைக்கும் பூசிவிடுகிறார். 'மெரீனாவில் காரல் மார்க்ஸ்' என்ற கதையில் சாதியம் ஜ் வர்க்கம், இடதுசாரி அரசியல் எனும் விவாதம் ஓர் அற்புதமான எள்ளலாகக் கதையாகிவிடுகிறது. 'தோழர் சமூகம் வேறயா சாதி வேறயா, என்ன?' வாய்விட்டுச் சிரிக்க வைக்கிற குறும்பு வரிகள். கடைசியில் பெருசை மெரீனாவில் பருத்திப்பால் விற்க வைத்ததோடல்லாமல் 'அவர் என்ன சாதியோ' என்ற பகடியுடன் கதை முடிகிறது. பொலிட்பீரோக்களில் பல ஆண்டுகளாக நடந்த விவாதத்தை இந்தச் சிறிய கதைக்குள் முடித்து வைக்கிறார் தோழர் இந்திரா. மாய எதார்த்தவாதம் இந்தக் கதையில் தற்செயலாக ஒரு கருவியென செயல்பட்டிருப்பதைப் படைப்பாளிகள் கவனிக்க வேண்டும்.

           இது போன்று மேலும் இரு மாய விநோதக் கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. 'பல்லி விழுந்த பலன்'  சுத்த சங்கீதம் போன்று ஒரு சுத்த கதை. பல்லி, நாய்க்குட்டி, மண்புழு என்று வடிவம் மாறும் உயிரினுடனான மனித உரையாடல் அதே ஆச்சர்யங்களுடனும் அதே பதற்றத்துடனும் அதே பயங்களுடனும் தொடர்கிறது. சுழலும் விநோதங்களுடன் சுழலும் வரிகளுக்குள் கதையைப் படிக்க மட்டும் செய்தால் போதும். கதை என்ன சொல்ல வருகிறது என்று யாரும் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். இது சுத்த சங்கீதம் போன்று, ஒரு சுத்த கதை. 'அது பல்லி விழும் பலன் அடிப்படையில் கண்ணிமைக்கும் நேரத்தில் நாய்க்குட்டியாக மாறிவிட்டது.'
           இதே மாதிரி இன்னொரு பகுத்தறிவுக் கதை சூரிய கிரகணம். பகுத்தறிவுக் கட்சியின் பேரன்களின் குடும்ப அரசியலை மென்மையாக எள்ளல் செய்யும் அரசியல் கதையாக மாறிவிடுகிறது. பகடியும் தீவிரமும் சரிசமாய்க் கலக்கும் எழுத்தில், ஒரு கீற்றை புதுமைப்பித்தனிடமிருந்து இவரும் பெற்றிருக்கிறார் என்பதை இத்தொகுப்பின் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

            இவரது மனவோட்டத்தில் இவர் எப்படியெல்லாம் மிகச் சரியாக சிந்திக்கிறார், வாழ்வை எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதைக் காட்டிக் கொடுக்கும் கதையாக  'ஒன்னு...ரெண்டு...மூணு...' என்னும், இந்திரா சவாசனம் செய்ய முயற்சிக்கும் கதையைக் கூறலாம். இவரது வாழ்வை ஒரு சவாசனமாக மாறவிடாமல் செய்வதற்காகத்தான் இவர் கதையே எழுதுகிறார் என்று எண்ணுகிறேன்.
            'மயானத்தின் குழந்தை' (தலைப்பே இவ்வளவு கொடுமையாக இருக்கிறது) என்பதுவும் மாயவிநோத வகைக் கதைதான். இந்தக் கதையின் ஒவ்வொரு வரியும் நமது நடப்பு வாழ்க்கை பற்றிய கூர்மையான விமர்சனம். ஒரு குழந்தை பிறக்கும்பொழுது அதனுடன் இருக்கும் பரிசுத்தமான வெள்ளை மனசோடு இந்த உலகுக்குள் நுழையவே முடியாத பெருந்துக்கத்தை இந்தக் கதை முழுவதும் விளையாட்டாக எழுதி நிரூபிக்கிறார். குழந்தை கேட்கும் கேள்விகளும், கிடைக்கும் பதில்களினால் அது அடையும் கோபங்களும் ஆச்சர்யங்களும் பதற்றங்களும் இந்திராவினுடையவைதான். அவை நம் எல்லோருடையதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் இந்திராவின் ஆசையாக இருக்க வேண்டும். திட்டமிடாமலேயே சமகால வாழ்வின் பல முகங்களையும் அநாயசமாக தொட்டுச் செல்லும் மிகச்சிறந்த கதையாக இது அமைந்துவிடுகிறது. பூமியின் குழந்தை என்பது இவருக்கு மயானத்தின் குழந்தையாம். 

           சமகாலப் படைப்பாளிகளுக்கிடையிலான உறவுகள், முக்கியமாக, கூட்டம் கூடுதல் பற்றி இரண்டு கதைகள் இருக்கின்றன. பிரம்மாண்டமான வரியுடன் தொடங்கும் 'அவன் அவள் மற்றும் அவர்' என்னும் கதை நாம் எல்லோரும் அறிந்த 10 முதல் 20 நபர்கள் கொண்ட கன கச்சிதமான இலக்கியக் கூட்டத்தில் ஒரு படைப்பாளித் தம்பதியர் கலந்து கொள்வது பற்றியது. ஒரு சாதரணக் கதைபோல் இருந்தாலும் மூத்த எழுத்தாளர் ஒருவர் அந்தப் பென்ணை அசூயையாகப் பார்ப்பதையும் புறக்கணிப்பதையும் யார்தான் பொறுக்க முடியும்? இத்தினியூண்டு கூட்டத்தில்கூட சில ஆஆளுமைகள் தங்களுக்குப் பிடிக்காத சக படைப்பாளிகளையும் இளம் வாசகர்களையும் கண்டுக்காமல் புறக்கணித்துச் செல்லும் லாவகங்களை ரசித்திருக்கிறேன். ஆனால் பக்கம் பக்கம் நிற்கிற கணவன் மனைவியரில் ஒருவரிடம் மட்டும் உரையாடும் முன், புன்னகையுடன் ஒரு மன்னிக்கவும் கூறிவிட்டு உரையாடலாம்தான். சமநிலையில் நிற்கும் பெண்களுடனான பொதுவிடக் கலாச்சாரம் நாம் அறியாதது. பெண்களே அற்ற பொதுவெளிகளில் மட்டுமே உலவத்தெரிந்த ஆண்தமிழர்கள் நாம்.

                 இதைவிடவும் காரமான கதை 'பொய்யாலானது'. இந்தக் கதையில் சித்தரிக்கப்படும் கூட்டத்திற்கு நானும் போயிருந்தேன். முன்னுரை விவகாரம் இவரைப் பெரிதும் காயப்படுத்தியிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. சமகாலத் தமிழ்ப் படைப்புலகில் ஒரு கணிசமான இடத்தைப் பெற்றிருக்கும் பெண் படைப்பாளிகளிடம் ஆண் படைப்பாளிகள் நடந்துகொள்ளும் விதம் பற்றி பெரும் கவலையும் உளைச்சலும் கொள்ளச் செய்யும் கதை இது. அதுவும் நட்பையும் தாண்டிய நெருக்கமான படைப்பாளிகள், குறிப்பாகக், காதலர்கள் அல்லது தம்பதிகள் தங்களது படைப்புத்தளம் உறவுத்தளம் இரண்டும் உராய்வு கொள்கிற நுட்பமான தருணங்களை எதிர்கொள்வது பற்றிய பதிவுகளோ முன்னுதாரணங்களோ நம்மிடம் இல்லை. திரைப்படத்துறையின் சில புகழ்பெற்ற ஆளுமைத்தம்பதிகள் பற்றிய பெருங்கதைகளை மட்டுமே நமக்குத் தெரியும். தீவிரப் படைப்பாளிகளில் ஒருவரும் தங்களது துணையுடனான ஆனந்தங்களை, கீறல்களை, வலிகளைப், போராட்டங்களை வெளிப்படையாக எழுத முடிந்ததில்லை. பூடகமான கதைகளையும் கவிதைகளையும் நாம் நிறையப் படித்திருக்கிறோம். நம் காலம் மிகுதியும் போலியானதென அறியும் பொழுது பெருந்துக்கமாக இருக்கிறது.

             தொடர்ந்து இந்திரா கதைகள் எழுத வேண்டும். இன்னும் ஆழமான அனுபவங்களை எழுத வேண்டும். பெண் எழுத்தாளர்களின் அச்சமற்ற, சுதந்திரமான சொந்த எழுத்துக்கள் நிறைய வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாழ்த்துக்களுடன்,


சமயவேல்
15-12-2011

***

(விரைவில் ஆழி பதிப்பக வெளியீடாக வெளிவர இருக்கும் எனது சிறுகதை தொகுப்பிற்கு கவிஞர் சமயவேல் எழுதிய முன்னுரை)


Saturday, April 7, 2012

நீட்சே வாழ்வும் தத்துவமும் ஓர் அறிமுகம் மொழிபெயர்ப்பு நூலுக்கான முன்னுரை


மேற்கத்திய தத்துவ வரலாற்றை பதிவு செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் வில் ட்யூரண்ட் ஆவார். இவர் எழுதிய `தத்துவத்தின் கதை` (The Story of Philosophy) எனும் நூல் பல முறை பதிப்பிக்கப்பட்டு இலட்சக் கணக்கான பிரதிகள் உலகெங்கிலும் விற்பனையாகி உள்ளன, இன்றும் விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றன, இதற்கு முக்கிய காரணம் பல நாடுகளில் உள்ள தத்துவ ஆர்வலர்கள் தத்துவ வரலாற்றை எளிதில் புரிந்து கொள்ள உதவும் நூலாக இதைக் கருதுவதே ஆகும். சுமார் ஐநூற்று ஐம்பது பக்கங்கள் கொண்ட இந்நூலில் நாற்பத்தி ஏழு பக்கங்களில் இருத்தலியலாளர் நியெட்ஸே குறித்து எழுதப்பட்டுள்ளது, மிகவும் ஆழமாக ஆனால் அழகாக, எளிமையாக எழுதியுள்ளார் வில் ட்யூரண்ட். அதை அதன் அழகியல்தன்மையும், தத்துவ அம்சங்களும் சற்றும் பிசகாமல் இந்நூலில் மொழி பெயர்த்தளித்துள்ளார் இந்திரா காந்தி.

மேற்கத்திய தத்துவ வரலாற்றைப் புரட்டும் போது, அதில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு விதமான சிந்தனைப் போக்கு கோலோச்சுவதைக் காணமுடிகின்றது. வாழ்வின் அர்த்தத்திற்கான தேடல் என்பதை சாக்ரடீஸ் காலம் முதற் கொண்டு தத்துவ வரலாற்றாளர்கள் வகைப்படுத்தியுள்ள போதிலும், அதை மிகவும் பிரதானமாகக் கொண்டு தங்களின் தத்துவப் போக்கை உருவாக்கியவர்கள் இருத்தலியலாளர்கள். இவர்களின் முன்னோடி நியெட்ஸே ஆவார். ஏசுவின் பிறப்பிற்கு சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின் மேற்குலகில் அறிவு தீர்க்கமாக செயல்படத் தொடங்கியது. ``சந்தேகப்படு எல்லாவற்றையும்! சந்தேகப்படுபவரைத் தவிர`` எனும் டேக்கார்ட்டின் அறைகூவல் மேற்குலகின் அறிவியல் வளர்ச்சிக்குக் கட்டியம் கூறியது. சந்தேகப்படு எனக் கூறியது எல்லாவற்றையும் விசாரணைக்குட்படுத்துவது, முறைப்படி ஆராய்வது எனும் பொருளிலே கூறப்பட்டதாகும்! கடவுளின் இருப்பை விசாரணைக் குட்படுத்தும் எந்த ஒரு செயலும் மிகவும் கடுமையான தண்டனைக் குட்படுத்தப்பட்ட காலம் அது. எனவே டேக்கார்ட்ஸ் கடவுளின் இருப்பை ஒருபுறம் தக்க விவாதங்களோடு நிரூபித்துவிட்டு, பிற விசாரணைகளை மேற்கொண்டு தத்துவ வரலாற்றை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தினார் எனலாம். ஆனால் கடவுளின் இருப்பையும், தொழில் நுட்பங்களின் அபரித வளர்ச்சியையும் இரு மோசமான விஷயங்களாக இருத்தலியலாளர்கள் பலரும், பின் நவீனத்துவவாதிகளும் நோக்கினார்கள். நவீனத்துவம் எல்லா அறிவு சார்ந்த செயல்பாடுகளையும், ஒட்டு மொத்த, ஒரு தர்க்க ரீதியான அறிவியல் கட்டமைப்பிற்குள் அடைத்து, சாதனை அல்லது சோதனை எனும் நோக்கில் இட்டுச் செல்கிறது. விளைவு... மனித நேயம் என்பதும், தனிமனித மாண்பு, சமுக நீதி போன்ற மதிப்பீடுகள் அறிவியலினால் கபளீகரம் செய்யப்படுகின்றன. `வெற்றிஎன்பதே அதன் ஒரே இலக்காகிவிட்ட நிலையில் சாதாரணர்கள் அந்த வெற்றியினால் நசுக்கப்படுகிறார்கள் என்பதே இவர்களின் பார்வை!

தனிமனிதனின் இருப்பு பலத்த நெருக்கடிக்குள்ளாகியதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் நியெட்ஸே. யூத-கிறிஸ்துவ சமய மதிப்பீடுகள் எவ்வாறு மானுட வாழ்வை பீடித்து வாழ்வை சீக்கு பிடிக்க வைக்கின்றன என்பதை விளக்கி அவற்றிலிருந்து மானுட இருப்பை விடுதலை செய்வதே வாழ்வின் முக்கிய நோக்காக கொண்டார் எனலாம். அதற்காக அறம் அற்ற வாழ்வை முன் மொழியவில்லை. மாற்றாக மதிப்பீடுகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றார். இதனடிப்படையில் கடவுளின் இறப்பை உலகிற்கு மிகவும் துணிச்சலாக அக்காலக் கட்டத்தில் பிரகடனப்படுத்தினார். நியெட்ஸேவின் ஜராதுஷ்ட்ரன் ஒரு அதீத மனிதன் (Superman) புதிய மதிப்பீடுகளை உருவாக்குபவன். அவன் தலைவனுக்குரிய மதிப்பீடுகளைக் கொண்டவன். புதியதோர் உலகு செய்பவன். மானுடம் சிறக்கச் செய்பவன். அம்மாதிரியான ஜராதுஷ்டிரர்கள் தலைமை பண்பு கொண்டவர்கள். அதே சமயம் அடிமை மதிப்பீடுகளைக் கொண்ட சமயங்களும், கடவுள்களும் தங்கள் சொல்படி விமர்சனமின்றி அப்படியே ஒட்டி ஒழுகும் அடிமைகளை உருவாக்கியுள்ளன. அடிமைகள் புதியன படைப்பதில்லை! போட்ட பாதையில் பாதுகாப்பாக பயணிப்பவர்கள்! தலைவர்கள் புதிய உலகிற்காக, மதிப்பீடுகளுக்காக வாழ்க்கையை துச்சமாக மதிப்பவர்கள். அடிமைகளின் அளவுகோலின்படி நன்மை (goodness) என்பது அடக்க ஒடுக்கமானது, கருணையானது, கட்டுப்பாடானது, நழுவக் கூடியது. அதேசமயம் தீமை (evil) என்பது சுயநலம், கொடூரம், வளம், வேகம் கொண்டது. நியெட்ஸே `நன்மை` என்பது மக்களை அடிமைகளாகவே வைத்திருப்பதற்காக உண்டாக்கப்பட்ட மதிப்பீடுகள். இதன் மூலம் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு கூட்டம் என கருதினார். `நல்லவர்கள்` என்பவர்கள் `அடிமைகள்` என்ற கருத்து நியெட்ஸேவின் தத்துவ அதிரடி எனலாம். அவர்கள் சமுகத்தின் `தீமைகள்` எனவும் பிரகடனம் செய்தார்.

அதிகாரத்திற்கான விருப்பாற்றல்` எனும் கருத்தையே நியெட்ஸேவின் தத்துவம் அடிநாதமாகக் கொண்டது. அதிகாரத்தை பெறுவது என்பதை அவர் வலியுறுத்தினார். அது அடக்குமுறைக்கான அதிகாரம் அல்ல! விடுதலைக்கான அதிகாரம்! பழைய மதிப்பீடுகளை து£க்கி எறிவதற்கான அதிகாரம்.

நியெட்ஸேவின் தத்துவப் போக்கு பலரை பலவிதமாக ஈர்த்தது. பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வலதுசாரி ஜெர்மானிய போர்வீரர்களுக்கு முதலாம் உலகப் போரின் போது நியெட்ஸேவின் Ôஜராதுஷ்ட்ரா இவ்வாறாகப் பேசினான்` எனும் நூல் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. சில இடதுசாரிகள் நியெட்ஸேவின் வாரிசுகள் எனவும் அழைக்கப்பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் பல அரசியல் தலைவர்கள் நியெட்ஸே தான் தங்களை மிகவும் ஈர்த்த தத்துவவாதி எனவும் பிரகடனப்படுத்தியுள்ளனர். நியெட்ஸேவின் எந்த ஒரு நூலையும் வாசித்திராத ஹிட்லர் நியெட்ஸேவின் தத்துவ ஈர்ப்பினால்தான் சர்வாதிகாரியானான் என்ற கருத்தும் நிலவுகிறது. முஸோலினி, ருஸ்வெல்ட் போன்றோர் நியெட்ஸேவினால் மிகவும் ஈர்க்கப்பட்டவர்கள்.

நியெட்ஸேவின் மானுட விடுதலைக்கான அறைகூவல்கள் மற்றும் அடிப்படையை உடைக்கும் தத்துவ விசாரங்களே பின்னர் இருத்தலியலாளர்கள் கேம்யூ, சார்த்தர், ஹைடெக்கர் போன்றோர் தங்கள் தத்துவங்களைப் படைக்க அடிப்படையாக இருந்தன. இருத்தலியம் மேற்குலகின் வாழ்வியல் உலகை விசாரணைக்குட்படுத்தி சலசலக்க வைத்தபின், அதிரடியாய் தோன்றிய பின் நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படை அஸ்திவாரமாக நியெட்ஸேவின் தத்துவம் அமைந்தது. பின் நவீனத்துவவாதிகளான ஃபூக்கோ, டெரிடா, டெல்யூஸ் போன்ற பலரின் தத்துவப் பங்களிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தவர் நியெட்ஸே!

நியெட்ஸே பலவீனமானவர். மனச்சிக்கல் நிறைந்தவர். அவர் அதிகாரமே வாழ்வு எனும் கற்பனா வாதங்களை பறக்கவிட இயலாதவர்` என்றெல்லாம் ரஸ்ஸல் உட்பட பலர் கூறியதுண்டு. நியெட்ஸே காலத்தின் பிரசுரிக்கப்படாத, பிரபலமாகாத அவரின் படைப்புக்கள் பின்னர் சுனாமியாக பாய்ந்து மேற்குலக தத்துவப் போக்கினைப் புரட்டிப் போட்டு, இன்றுவரை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது எனலாம். நியெட்ஸேவின் தத்துவ வீரியம் தனிமனித சுதந்திரம் குறித்தது, அது சமுக விடுதலைக்கு உதவாது எனும் இடதுசாரி கருத்தாக்கங்கள் கூட மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்பதை நியெட்ஸேவின் படைப்புகளை ஆழ்ந்து வாசிக்கும் போது தெரியும். சில படைப்புகளே நியெட்ஸே பற்றி தமிழில் வெளிவந்துள்ள போதிலும், மிகவும் ஆதாரப்பூர்வமான எழுத்துக்களாக அறியப்பட்ட வில் ட்யூரண்டின் படைப்பிலிருந்து நியெட்ஸேவை தமிழுலகிற்கு மறுபடியும் அறிமுகப்படுத்தும் பணியை இந்திரா காந்தி செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. எனது மாணவி அவர் என்று சொல்லிக் கொள்ள பெருமைப்பட இந்நூல் மேலும் வழிவகை செய்துள்ளது. அவருக்கு என் பாராட்டுதல்கள்! நன்றிகள்!

முனைவர். இரா. முரளி.

துறைத்தலைவர், தத்துவத்துறை,

மதுரைக் கல்லுரி, மதுரை.