Tuesday, June 21, 2011
மிதக்கும் பல்லி
ஒவ்வொரு இடத்துக்கும்
ஒவ்வொரு ஒப்பனையில்
பறந்து சென்றது
செயற்கைகோளின் துணையுடன்.
அதை
மரப்பல்லி , காட்டுப்பல்லி,பறக்கும்பல்லி
என்றனர் சிலர்
அது பெண் பல்லி என்பது
மட்டும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
பல்லிக்கு இறக்கை கட்டினால்
பறவையாகிவிடுமா?
பல்லி வளருமா? யாராவது வளர்ப்பார்களா?
பல்லி இழந்த வால் என்னவாகும்?
என விவாதித்தனர் சிலர்.
பல்லி எதிர்காலத்தில் வளர்ந்து
டைனோசர் ஆகி விடுமா என்றஞ்சியோர்
‘நீ பல்லியே அல்ல - கொசுதான்’
என போதித்தனர் அதன் காதில்.
பல்லி இனம் அழிந்து
ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டனவே
எனக்கூறிக் கொண்டே அதன் தலையை
நசுக்க வந்தோரிடம்
தன் தலையை கழற்றிவிட்டு விட்டு
பிரபஞ்சபத்தில் மிதக்கத் தொடங்கியது பல்லி
Friday, June 17, 2011
பிரம்மாக்கள்
அதிருஷ்டசாலிகள்.
குழந்தையில்லாமல்
தான் அப்பாவாக முடியாது
என்றறிந்த அப்பாக்கள்
அபூர்வமானவர்கள்.
குழந்தைகளை குழந்தைகளாக மட்டுமே
உணரத் தெரிந்த அப்பாக்கள் அறிவாளிகள்.
தான் என்னவாக இருக்கிறோம்
என்பதையே அறியாமல்
அம்மாவையும் குழந்தையையும்
படைத்தவர்கள் பிரம்மாக்கள்.
பிரம்மனின் வாரிசுகள்
பிரம்மனை அடைய
தவம் புரிந்து கொண்டிருக்கின்றனர்.
Wednesday, June 15, 2011
துகள்
கோள்களின் இயக்க விதிகளுக்கு அடங்காது
விலகி வந்த ஒரு துகள்
என் கையில் அகப்பட்டது.
அதை நான்
கருவாக்கி
பொருளாக்கி
உயிராகவும் மாற்றி விட்டேன்.
எனக்கான வட்ட பாதையை
சுழற்சியை,
சுழற்சியின் வேகத்தை,
சுயமாய் தீர்மானிக்கும் கர்வத்துடன்
நானே சுமந்து திரிகிறேன் புதிய உயிரை
யாரும் அறியாது.
என்னுள் இருக்கும் அதுவும்
புதிய பால்வெளியை,
வட்டப்பாதைகளை,
இயக்க விதிகளை
தேடிக் கொண்டே யிருக்கிறது
யுகயுகமாய்!
பன்றிகள்
அதன் தாய் என்னைத் தாக்க வந்தது.
‘பன்றிக்குட்டி அழகாய் இருக்கிறது
வீட்டிற்கு கொண்டு போகலாம்’
என்று அடம் பிடித்த தங்கையிடம்
‘அது மலத்தை தின்னும்’
எனக் கூறி மறுத்தேன்
மலத்தின் பொருள் அறியாது.
கல்லூரி பருவத்தில்
கால் வைக்க இடமின்றி
மலம் குவிந்து கிடந்ததாய்
உணர்ந்த போது மீண்டும்
பன்றிகளை நினைத்தேன்.
மூளைக்காய்ச்சலுக்கு காவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்
‘பன்றிகள் குளிப்பதற்காகவே சாக்கடையில்
இறங்குகின்றன’
‘மலம் என்பது மலம் மட்டுமல்ல’
‘மலத்தைத் தின்பது பன்றி மட்டுமல்ல’
என்றறிந்த போது
பன்றிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
கயமையின் நிழல்
அவனுடனேயே வாழ்வதை
அவனே அறிய
நேரமற்றிருந்தான்.
அவ்வப்போது அவன் கண்ணசைவிலும்
முகச்சுளிப்பிலும்
ஒவ்வொரு அடியிலும்
கைகுலுக்கல்களிலும் என
எல்லா நேரங்களிலும்
அவனை அது இம்சித்த காலம் மாறி
அவன் அதுவாகவும்
அது அவனாகவும்
மாறிய கணத்தில்
என் கண்களில் பட்டு விட்டது
அது அவனை விழுங்குமா?
அவன் அதைக் கொல்வானா?
என்று பதறும் நொடியில்
என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது
காலம்.
தொடரும் யுத்தம்
வெயிலோடு பெய்யும் மழை,
காலை நேர மூடுபனி,
சில் வண்டின் சத்தம்,
மென்தென்றல்,
பட்டாம்பூச்சி, பூக்கள்
நிறைந்த
உனக்கும் எனக்குமான புல்வெளியை
பறித்துக் கொண்டு,
உனக்கு
பட்டாம்பூச்சிகளின் சிறகில் ஆணி அடித்து
உள் உறுப்புகளை ஆராயும்
வரமளித்த வாழ்க்கை,
சதுரங்க விளையாட்டு மேடையை
பரிசளித்தது
எனக்கு.
அங்கு
சிப்பாய்கள் நேருக்கு நேராக மோதி மாண்டனர்
சில சமயம் யானைகள் சிப்பாய்களை நசுக்கின
குதிரைகள் யானைகளை கொன்றன
மிஞ்சிய அனைத்தையும்
சாணக்கிய பிஷப்புகள் விழுங்கினர்
சர்வ அதிகாரம் பெற்ற பிஷப்புகள் கூட
சாதுர்யம் இல்லாது மோதி அழிந்தனர்
ஆனால்
ராஜாவால் ராணியையும்
ராணியால் ராஜாவையும்
வீழ்த்தவே முடியாமல்
போரிட்டுக் கொண்டே இருக்கின்றனர்
வரலாறு அறிந்த காலம் முதல்.
பேசிக் கொண்டே இருக்கிறான்
காலையில் கண்விழிக்கும் போதே
பேச ஆரம்பித்து விடுகிறான்
கழிப்பறையில் இருக்கும் போது பேசுகிறான்
பல்துலக்குகையில் பேசுகிறான்
செய்தித்தாள் வாசித்துக் கொண்டே பேசுகிறான்
தேனீர் அருந்திக் கொண்டே பேசுகிறான்
டிபன் சாப்பிட்டுக் கொண்டே பேசுகிறான்
மனைவியிடம் பேசுகிறான்
அலுவலகத்தில்
உயரதிகாரியிடம் பேசுகிறான்
கடைநிலை சிப்பந்தியிடம் பேசுகிறான்
டீக்கடையில் பேசுகிறான்
டாஸ்மாக் பாரில் பேசுகிறான்
தெருமுனையில் நின்று கொண்டு பேசுகிறான்
தெருவில் நடந்து கொண்டே பேசுகிறான்
செல்போனில் பேசுகிறான்
சினிமா பார்த்துக் கொண்டே பேசுகிறான்
எதிரியுடன் பேசுகிறான்
நண்பனுடன் பேசுகிறான்
முதியோரிடம் பேசுகிறான்
ஆண்களிடம் பெண்களிடம் பேசுகிறான்
என்ன பேசுகிறான்
எதற்குப் பேசுகிறான்
என்று உணர விரும்பாமல்
பேசிக் கொண்டே இருக்கிறான்
அவர்கள்
கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்
Tuesday, June 14, 2011
புத்தக அலமாரி
புத்தக அலமாரியை
ஒவ்வொரு வாரமும்
ஒழுங்குபடுத்துகிறார்கள்
மாத இதழ்கள்
வார இதழ்கள்
நாளிதழ்கள்
சிறுவெளியீடுகள்
சிற்றிதழ்கள்
நாவல்கள், சிறுகதைகள்
கட்டுரைகள், கவிதைகள்
என
ஒவ்வொருவாரமும்
ஒழுங்குபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்
ஒரு முறை கூட
பெரும்காற்று வீசியதில்லை
புத்தகங்களை கலைக்குமளவுக்கு.
சிறுகுழந்தைகளும் இல்லை
கலைத்துப் போடுவதற்கு
நண்பர்களையோ எதிரிகளையோ
எவரையும் அனுமதிக்கமாட்டார்கள்
அதன் அருகில்
அவர்களே அறியாமல்
அவர்களுக்குள் பரவி
அவர்களை ஆட்டி வைக்கும் சர்வாதிகாரி
யாரென உணர முடியாமல்
ஒழுங்குபடுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்
Monday, June 13, 2011
பறவைக்காரி
கலைமகளின் துணையோடு
கற்பிக்கப்பட்ட
உலோக வனத்தில்
நெய்யப்பட்ட பறவைகளுக்காக
பூச்சிகளின் இரைச்சலையும்
மிருகங்களின் அலறல்களையும் தாண்டி
செவி மடுத்து, வாதிட்ட பறவைக்காரி
எடை பார்க்கும் எந்திரங்களின்
ஞானத்திற்கு புலப்படாத
இலைகளையும், பூக்களையும்
காற்றையும், இசையையும்
கொத்திக் கொண்டு
பறந்தேகினாள் பறவைகளோடு.
09.06.2011
Thursday, June 9, 2011
தீரா உரையாடல்
எல்லாவற்றையும்
புரிய வைக்க முடியாது
என்பதை அறிந்திருந்தும்
எல்லோரும்
ஏதோ ஒன்றை புரிய வைக்க
எல்லோரிடமும்
எல்லா நேரமும்
முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம்.
இட வல பயணம்
ஆண்கள் வரிசையின்
ஜன்னலோர இருக்கையில்
இடம் பிடித்தாள் இவள்.
வழக்கமாக சென்று வரும்
வழித்தடம்தான்
அன்று அனைத்துமே புதிதாக இருந்தது.
முதன் முதல் கண்ணாடி பார்த்து
வலம் இடம் புரியாத
குழந்தையைப் போல குழம்பினாள்.
வெளியே
மரங்கள் பின்னோக்கி ஓடாமல்
அவளை நோக்கி வருவதைப் போல இருந்தது.
அந்த இருக்கையிலிருந்து காண முடியாத
தன் நிறுத்தத்தை தவற விட்டு விடுவோமோ
என பதைபதைத்தாள்.
தினமும் அவள் ஏறி இறங்கும்
நிறுத்தம் கூட
அன்று இடம் மாறி இருப்பதாய் நினைத்தாள்.
இன்றும் அப்படித்தான்
நகரத் தொடங்கிய சொகுசுப் பேருந்தில்
பல கண்கள் துரத்த
ஓடி வந்து ஏறிய போது
இவளுக்கென எஞ்சியிருந்தது
நடத்துனரின் இருக்கை.
அமர்ந்து
ஆசுவாசப்படுத்தி தலை நிமிர்கையில்
மரங்களும், செடி கொடிகளும்,
கட்டிடங்களும், பாலங்களும்,
வாகனங்களும், நாய்களும்,
மனிதர்களும்
ஒரு தட்டையான சித்திரக் காட்சியாய்
ஜன்னல் சட்டகத்திற்குள்
ஓடிக் கொண்டிருந்தன/ர்
எதையோ நோக்கி.
அதன் பின்
முழுப் பேருந்தும்
ஒரு திசை நோக்கிப் பயணிக்க
அவள் மட்டும்
வேறு திசை நோக்கிபயணித்துக் கொண்டிருந்தாள்.
Saturday, June 4, 2011
மௌன பாலை
எது எதை
எவ்வப்பொழுது
எப்படியெப்படி
உரையாடுவதென்கிற
தியானிப்பில்
நம் உறவில்
விரிந்து கிடக்கிறது
பெருமௌன பாலை ஒன்று!
பல்லி
முளைத்த புதிய வால்
பிளாஸ்டிக்கால் ஆனது
தன் முதல் வாலை
இழந்த கணத்தை
அது அறிந்திருக்க வாய்ப்பில்லை
உயிரை இழக்காது
வாலை மட்டும் இழந்த
இயற்கையின் மகத்துவத்தையும்
அது அறிந்திருக்க வாய்ப்பில்லை
இன்று பிடித்து தின்ற
பூச்சியின் பெயரையோ
தன் உயிர் பறிக்க வந்த
பூச்சியையோ மனிதனையோ
அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை
வயிற்றினுள் முட்டை வைத்திருக்கும்
பல்லியை விரட்டிச் செல்லும்
அந்தப் பல்லி
தினமும் வேவு பார்க்கப்படுவதையும்
அது அறிந்திருக்க வாய்ப்பில்லை
அறிவே இல்லாத பல்லிகளும்
அறிவுக்கூரிய பல்லிகளும்
வெள்ளை மாளிகைகளில்
வசிப்பதையும்
வசிப்பவர்களையும்
நேசிக்கின்றன ஆராதிக்கின்றன.குட்டிப்புலி
ஞாபகம்
பின்னிரவு நேரத்தின்
தொலை தூர
இரயிலோசையென
கடந்து போய் விடுகிறது
காலம்,
வலி,
மகிழ்ச்சி,
வாழ்வு,
மரணம் என
அனைத்தும்
நம்மை
பரிதவிக்க விட்டு விட்டு.
சீட்டாட்டம்
உன்
ஆழ்மன சீட்டுகளை
என்னிடம்
கலைத்துப் போடுவது
இதோடு
90 ஆவது முறை
ஒவ்வொரு முறையும்
ஒரே கட்டை
ஓராயிரம் விதமாய்
கலைத்து
அடுக்கி
பிரித்து
போடுகிறாய்
எதை மெய்ப்பிக்க
இந்த ஆட்டம்?
