Wednesday, June 3, 2015

தமிழ் இன அழிப்பு நினைவு நாள்



தமிழ் இன அழிப்பு நாளை நினைவு கூரும்பொழுது  பெரியவர்கள்,குழந்தைகள் ரத்தமும் சதையுமாய் சிதறிக் கிடக்கும் புகைப்படங்களை, பெண்கள் ஆடைகுலைந்த கிடக்கும்  புகைப்படங்களை போடுவதில் எனக்கு  உடன்பாடு இல்லை. அதைச் சொன்னால் பெரிய விளக்கம் கொடுக்கிறார்கள்.


அந்தப் படங்களை சில விநாடிகள் உற்றுப் பார்க்க வேண்டுமாம். அப்பொழுதுதான், அவதியுறும் மனித இனத்திற்கு உழைக்க வேண்டும், பேரினவாதத்திற்கு எதிராய் போராட வேண்டும் என்ற உணர்வு தோன்றுமாம்.


இது போன்ற அறிவு. உணர்வு மட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் வீட்டில் அந்தப் புகைப்படங்களை பிரேம் செய்து மாட்டிவைத்துக் கொண்டு அதை தினமும் உற்று உற்றுப் பாருங்கள். அப்பொழுதுதான் உங்களது போராட்ட உணர்வு நிலைத்து நீடிக்கும். இல்லாவிட்டால் மேமாதத்தின் ஒரு வாரத்தோடு அந்த போராட்ட உணர்வு மடிந்துவிடும்.


நண்பர்களேஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.! உங்களைப் போலவே எல்லாரது உணர்வு நிலையும் இருக்காது.

இது போன்ற படங்கள் எல்லாம் சகஜம்தான்என்கிற, உணர்வு மரத்த மனநிலையைக் கூட பார்க்கிறவர்களுக்கு உருவாக்க கூடும், சினிமாவில் வரும் ஒரு வன்முறைக் காட்சியை பார்த்துவிட்டுக் கடந்து போவது போன்ற மனநிலையைக் கூட அது உருவாக்கலாம்.


தமிழ் இனஅழிப்பு என்ற ஒன்று, நடத்தப்பட்டதையே மறைக்கும் அரசியல் சதிக்கு எதிராக இந்தப் புகைப்படங்களை வெளியிடுவது என்பது வேறு….

அதிலும் கூட நமக்கு விமர்சனம் இருக்கிறது. இந்தப் படங்களை யாரிடம் போட்டுக் காட்டி நியாயம் கோரப் போகிறோம்?

ஒரு இன அழிப்பு நடக்கப் போகிறது என்று தெரிந்த பின்னும் அமைதிகாத்த ஐநாவிடமா, இல்லை தத்தமது நாடுகளில் தங்கள் அரசை எதிர்க்கும் போரளிகளை சத்தமின்றி கொன்றுகுவிக்கும் மேற்குலக நாடுகளிடமா? இன அழிப்பிற்கு ஆயுதம் கொடுத்த இந்தியாவிடமா?

இவர்களால், எதையெதையோ கற்பனை செய்து கொள்ளும் மூளைக்கு குடியிருப்புகளில், கோவில்களில், பள்ளிகளில், மருத்துவமனைகளில், பதுங்குகுழிகளில் எவ்வித ஆயுதமுமின்றி இருந்த மக்கள் மீது கொத்துக் குண்டு வீசிக் கொன்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதா?
சரி. இதை விட்டு விடுவோம்.

இன அழிப்பு என்ற ஒன்று நடந்த்தை உலகிற்கு வெளிப்படுத்த இந்த புகைப்படங்களை, காணொளிகளை வெளியிடுவதற்கும்

நினைவு நாளன்று,வருடா வருடம் இந்தப் புகைப்படங்களை பதிவிடுவதற்கும் வித்தியாசமுள்ளது.

என் சந்தேகம் என்னவென்றால், அந்தப் புகைப்படத்திலிருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களது  சகோதரியாகவோ, சகோதரனாகவோ, குழந்தையாகவோ, தாய் தந்தையாகவோ, நண்பனாகவோ, தோழியாகவோ இருந்தால் இவர்களது மனநிலை என்னவாக இருக்கும்


இப்படி 2 , 3 விநாடி உற்றுப் பார்க்க வேண்டும் என்ற நினைக்கத் தோன்றுமா? உற்றுப் பார்க்கத்தான் முடியுமா? அவ்வாறு உற்றுப் பார்க்கும் போதுதான் எதிர்ப்பு அரசியல் உணர்வு தோன்றுமா?


 இங்கு விசயம் என்னவென்றால்…..அந்தப் புகைப்படத்திலிருக்கும் மனித உடல்களைவெறுமனே உடல்களாக மட்டுமே கருதுகிறார்கள். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்று கருதுவதில்லை

.
அந்த மனிதர்களுக்கு என்று பிரத்யோக குணம், ஆளுமை, மாண்பு, மரியாதை  எல்லாம் இருந்திருக்கும்.
அதை துச்சமென கருதி, கொத்துக் குண்டுகளில் பொசுக்கியும், துப்பாக்கிக் குண்டுகளுக்கும், தங்கள் வக்கிரங்களுக்கும் இரையாக்கி,  குப்பைபோல் போட்டிருக்கும் புகைப்படத்தை  2,3 விநாடி உற்றுப் பார்த்தால்தான் நமக்கெல்லாம் போராட்ட உணர்வு வருமென்றால்,

 
அப்படிப்பட்ட ஒரு உணர்வுகெட்ட, அறிவுகெட்ட போராட்ட உணர்வு வராமலே போகட்டும்.


இதை தமிழர்களுக்கு மட்டும் நான் சொல்லவில்லை. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு ஓடுக்கப்பட்ட மனிதருக்கும், ஆண் பெண் குழ்ந்தை என்கிற வித்தியாசமின்றிப் பொருந்தும். ஆப்கான் பாலஸ்தீனம்,வியட்நாம் என்று உலகளவிலும், பரமக்குடி துப்பாக்கிச்சூடு, தாமிரபரணி படுகொலைகள், ஆந்திராவில் மரம் வெட்ட போன தமிழர்களைச் சுட்டுக் கொன்றது வரை பொருந்தும்.

அதனால், யாருக்காக, யாருடைய சந்ததியினருக்காக வருத்தப்படுகிறோமோ, போராட நினைக்கிறோமோ  அவர்களை, அவர்களது ஆளுமையை நாமும அவமதிக்க வேண்டாம் என்பதே நம் நோக்கமாக இருக்கட்டும்.