Friday, May 4, 2012

இந்திய புரட்சி என்பது கானல் நீர் வேட்டை - தியாகு

காஞ்சியில் நடைபெற்றக் கூட்டத்தில் இந்தக் கட்டுரையை தோழர். பாரதி வாசிக்கிறார்.

தோழர்களே!

சுதீப் சக்ரவர்த்தி எழுதி அ. இந்திராகாந்தியின் தமிழாக்கத்தில் வெளிவந்துள்ள ரெட்சன் – நக்சல் பகுதிகளில் ஒரு பயணம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நானூறுக்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த நூல் குறித்துப் பேசக் கிடைத்த வாய்ப்பிற்காக நன்றி.
எதிர்பாராத உடல் நலிவினால் நேரில் வரமுடியாததில் உங்களைக் காட்டிலும் எனக்குத்தான் அதிக வருத்தம்.
தோழர். தியாகு
ஏனென்றால் இந்நூலைப் படிக்கும் போது உங்களுக்கு ஏற்படும் உணர்வுக்கும் எனக்கு ஏற்படும் உணர்வுக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு.  இந்நூல் ஒரு வகையில் என் கடந்த காலத்தைப் பற்றியது.  சுதீப் சக்ரவர்த்தி படம் பிடித்துக் காட்டுகிற நக்சலிசம் அல்லது மாவோயிசம் எனப்படுகிற அந்தக் கருத்தியல் அல்லது இயக்கத்தினுடைய தோற்றத்தையும் தொடக்க கால வளர்ச்சியையும் வாசித்தவனாக அல்ல;  வாழ்ந்து பார்த்தவனாகவே என்னைக் கூறிக் கொள்ள முடியும்.  
சுதீப் சக்ரவர்த்தி சுவை மிகுந்த நெடுங்கதை அல்லது பயணக் கட்டுரைக்குரிய விறுவிறுப்பான இலக்கிய நடையில் இந்நூலை வரைந்துள்ளார்.  அந்தக் கதைத் தன்மையையும் விறுவிறுப்பையும் தமிழுக்குக் கொண்டு வருவதில் இந்திராகாந்தி பெருமளவுக்கு வெற்றி பெற்றுள்ளார்.  ஆங்கில மூலமும் சரி அதன் தமிழாக்கமும் சரி இன்னும் செறிவாகத் தொகுக்கப்பட்டிருந்தால் இந்நூலின் இலக்கியத் தரம் இன்னும்கூடுதலாய் இருக்கும் என்று என் பணிவான கருத்து.
ஆளும் வர்க்கங்களும் அவற்றின் ஊதுகுழல்களும் மக்களிடமிருந்து உண்மைகளை மறைக்கப் புரட்சிக்காரர்களைப் பூச்சாண்டிகளாகக் காட்டுவது புதிய செய்தியன்று.  நக்சலைட் என்பார்கள், தீவிரவாதி, அதிதீவிரவாதி, பயங்கரவாதி, தீ. கம்யூனிஸ்ட் என்று காலத்திற்கு காலம் பட்டங்கள் சூட்டிப் பயமுறுத்துவார்கள்.  தமிழ்நாட்டில் புலிப் பூச்சாண்டி காட்டுவது இன்றளவும் தொடர்கிறது.
உண்மையில் நக்சலைட்டுகள் அல்லது மாவோயிஸ்டுகள் என்பவர்கள் யார்?  கொலைகாரர்களா, கொள்ளைக்காரர்களா?  இரத்த வெறி கொண்டு அலைபவர்களா?  ஆயுதங்களைக் காட்டிச் சமூகத்தை மிரட்டிப் பணியவைக்கத் துடிப்பவர்களா?
எப்போதாவது யாராவது சிலர் அவர்களை அவர்கள் பணிசெய்யும் இடங்களுக்கே சென்று நேரில் சந்தித்து அவர்களது உணர்வுகளையும், பார்வைகளையும் நோக்கங்களையும் செயற்பாடுகளையும், அவர்களுக்கும் மக்களுக்குமான உணர்வுகளையும் அறிந்து வந்து உலகிற்குச் சொன்னால்தான் உண்டு.  அருந்ததிராய் அண்மையில் இதைச் செய்தார்.  அது நாடெங்கும் பெரிய விழிப்புணர்வைத் தோற்றுவித்தது.  அருந்ததிராய்க்கு முன்பே இன்னும் விரிவான அளவில் இதை ஒருவர் செய்திருக்கிறார்.  அவர்தான் சுதீப் சக்ரவர்த்தி!  அவர் நக்சல் பகுதிகள் எனப்படுகிற பகுதிகளில் முக்கியமான பலவற்றுக்கு நேரில் சென்று புரட்சியாளர்களையும் பொதுமக்களையும் ஏன் மாற்றுக் கருத்துடையவர்களையும் கூட சந்தித்துச் செய்திகளைத் திறனாய்வுடன் பதிவு செய்திருக்கிறார்.  இந்த நூலில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள விவாதங்களும் உரையாடல்களும் நம்மையும் விவாதிக்கத் தூண்டுகின்றன.
நக்சல் இயக்கத்தினுடைய இன்று வரையிலான வளர்ச்சியை நான்கு வெவ்வேறு கட்டங்களாகப் பிரித்துச் சொல்லி அதன் படிமலர்ச்சியை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது இந்நூல்.
மாவோயிஸ்டுகள் தலைமையிலான பழங்குடி மக்கள் போராட்டத்தின் புயல் மையமாக விளங்கும் தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியான சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து இந்த நூலின் பயணம் தொடங்குகிறது.  குறிப்பிட்டப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் வலுவாய் இருப்பதற்கு காரணம், வணிக கொள்ளையர்களிடமிருந்தும் தொழில் நிறுவனக் கொள்ளையர்களிடமிருந்தும் பழங்குடி மக்களை மாவோயிஸ்டுகள் பாதுகாத்ததுதான்.
“மாவோயிஸ்டுகள் அவர்களைப் பாதுகாக்கவில்லை எனில் வேறு யாரும் அதைச் செய்வதற்கில்லை” என்று அடித்துச் சொல்கிறார் சுதீப் சக்ரவர்த்தி!  இந்நூலாசிரியர் ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் நாம் மறந்து போய்விடக் கூடிய பல செய்திகளைக் கவனப்படுத்துகிறார்.  எடுத்துக்காட்டாக,  இப்போது இந்திய அரசில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்ராம் ரமேஷ் 2006 சூனில் “ஆந்திர அரசு நக்சலைட்டுகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்காகத்தான் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை உருவாக்கியுள்ளது” என்று கூறினாராம்.
சத்தீஸ்கரில் பழங்குடி மக்களுக்கெதிராக அரசும் பெருங்குழுமங்களும் தோற்றுவித்த அடியாள் படையாகிய சல்வாஜுடும் பற்றியும், அது செய்த கொடுமைகள் பற்றியும் மிக விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.  பழங்குடி மக்களை அடக்கி ஒடுக்குவதில் காங்கிரஸ், பா.ச.க., வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் எவ்விதக் கூச்சமும் இல்லாமல் அணி சேர்ந்து நிற்பதை அம்பலமாக்குகிறது இந்நூல்.  இந்த வகையில் சுதீப் சக்ரவர்த்தி சல்வாஜுடும் படையைச் சேர்ந்தவர்களையே சந்தித்து உரையாடி அவர்கள் சொல்வதை அப்படியே பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சுதீப் சக்ரவர்த்தி
இந்த நூலின் இரண்டாம் பகுதி நக்சல்பாரி இயக்கத்தின் தோற்றத்தையும் தொடக்கக் காலத்தையும் விரிவாக எடுத்துரைக்கிறது.  சாருமஜும்தாரின் எழுத்துக்கள் பேச்சுகளிலிருந்து கருத்துக்குரிய பல பகுதிகளை இந்நூலாசிரியர் மேற்கோளாய்த் தருகிறார்.  இப்போது பின்நோக்கிப் பார்க்கும் போது இந்தக் கருத்துக்களில் பலவும் பிழையானவையாக, ஏன் அபத்தமானவையாகக் கூட உணரப்படலாம்.  ஆனால் அந்தச் சூழலில் அந்த நேரத்தில் சாருமஜும்தாரின் சொற்கள் எத்தகைய உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டின என்பதை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியாது.  1969 தொடக்கத்தில் “இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும்“ என்ற தலைப்பில் வெளிவந்த சாருமஜும்தாரின் உரைதான் படிப்பையும் குடும்பத்தையும் துறந்து முழுநேரப் புரட்சிப் பணிக்கு நான் வருவதற்கு ஊக்கமளித்தது என்பதை மறப்பதற்கில்லை.  அழித்தொழிப்பு, அழித்தொழிப்பு மட்டுமே என்பதான அவரது அரசியற் செயல்வழி ஒரு மோசமான தவறாக அமைந்து விட்டது என்பதை ஏற்றுக் கொள்ளும் போதே பணம், பதவி என்ற ஆசைகளை மட்டுமல்ல உயிராசையையே உதறி எறிந்து விட்டு பல நூறு இளைஞர்கள் முழுநேரப் புரட்சிப் பணிக்கு வருவதற்கு தந்த ஊக்கத்திற்காகவே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
சாருவின் அழைப்பை ஏற்று குடும்பத்தையும் படிப்பையும் துறந்து புரட்சிப் பணிக்கு வந்த தமிழ்நாட்டின் முதல் மாணவன் என்ற முறையில் அடுத்த சில நாட்களில் திருச்சியில் தோழர் சாருமஜும்தாரை சந்தித்த போது ஒரு குழந்தைக்குரிய குதூகலத்தோடு அவர் என்னைத் தட்டிக் கொடுத்துப் பேசியதை இப்போதும் நினைவில் வைத்துள்ளேன்.
சாருமஜும்தார் நிறுவிய சிபிஐ (எம்.எல்) கட்சி அவர் காலத்திலேயே உடையத் தொடங்கியது.  பிறகு அது பலத் துண்டுகளாகச் சிதறியது.  மீண்டும் அது பட்டறிவின் அடிப்படையில் ஒருங்கிணைந்து ஒன்று பட்டு சில பேரமைப்புகளாகவும் சில சிறு குழுக்களாகவும் இன்றளவும் இயங்கிவருகிறது.  சுதீப் சக்ரவர்த்தி இந்தப் பலதரப்பட்டவர்களையும் தேடிச் சென்று அவர்களோடு உரையாடி அவர்களின் நிலைப்பாடுகளையும் அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளையும் நமக்காகப் பதிவு செய்கிறார்.
உழவர் ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றில் முன்சென்ற இயக்கங்களான 1946-51 தெலங்கானா போராட்டத்தையும் 1945-46 வங்காளத்தின் தேபதா இயக்கத்தையும் இந்நூலாசிரியர் நினைவுபடுத்துகிறார். நூலாசிரியரின் மாமனார் தீபங்கர் வழியாக அவர் பழைய நிகழ்வுகளை நமக்கு ஒரு கதையாகச் சொல்லிச் செல்கிறார்.  – “நாங்கள் என்ன விலை கொடுத்தாவது ஏழைகளுக்கு நியாயத்தைப் பெற்றுத் தர வேண்டுமென முடிவு செய்திருந்தோம்.  அதற்காக நாங்கள், குடும்பம், சொத்து, எங்கள் வாழ்க்கை என எல்லாவற்றையும் துறக்கத் தயாராகி இருந்தோம்”.
“நீங்கள் அது எல்லாவற்றையும் திரும்பச்  செய்வீர்களா?”
“ஆமாம்”
ஆம் ஒரு புரட்சிக்காரனுக்கு பணிக்காலம் பதவிக்காலம் என்று எதுவுமில்லை.  அவனுக்கு மரணம் மட்டுமே ஓய்வு தரும்.  இந்த உணர்வோடு ரத்தமும் சதையுமாக வாழ்கிற பலரை சுதீப் இந்த நூலில் பல இடங்களில் நமக்கு அறிமுகம் செய்கிறார்.
சுதீப் ஒரு பத்திரிகையாளர், இந்தியா டுடே இதழில் வேலை பார்த்தவர்.  இந்தியாவின் ஐம்பதாவது சுதந்திர ஆண்டு விழாவுக்காக ORG – மார்க் உடன் இணைந்து ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.  இந்தக் கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி” அடுத்த ஐம்பது வருடங்களில் இந்தியா ஒரே நாடாக இருக்குமா? இல்லை தனித்தனி நாடுகளாகப் பிரிந்திருக்குமா? ஒரே நாடாக இருக்கும என்று 41 சதவீத்ததினரும் பிரிந்து விடும் என்று 36 சதவீத்த்தினரும், தெரியாது, சொல்ல முடியாது என்று 23 சதவீத்ததினரும் பதிலளித்துள்ளனர்.  இது 1997 இல்!  இன்று 2010 இல் இதேபோல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால் இந்த விழுக்காடுகள் எப்படி மாறிப்போயிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.
சுதீப் மாவோயிஸ்டுகளைப் பிழையாப் பெருமைக் கொண்டவர்களாக, தேவதைகளாக, வண்ணந் தீட்டிக் காட்டவில்லை.  அவர்களின் குறைநிறைகளை விருப்பு வெறுப்பின்றி பதிவு செய்கிறார்.  சில நேரம் அவர்களின் சொற்களிலேயே இதைச் செய்கிறார்.  மாவோயிஸ்டுகளின் தவறுகள் என்று நாம் கருதக் கூடியவற்றை எடுத்துக் காட்டுகிறார்.  ஆனால் எந்தக் கட்டத்திலும் அவர்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறையை அவர் நியாயப்படுத்தவில்லை.  அவர் அரசின் பக்கம் நின்று இதைச் செய்யாமல் மக்களின் பக்கம் நின்று இதைச் செய்வதால் நம்பகத் தன்மை கூடுகிறது.  இந்தியாவின் பிற பகுதிகளில் தேசிய இனப் போராட்டங்களை அடக்குவதற்கு அரசு செய்யும் முயற்சிகளையும் அவற்றுக்கெதிரான போராட்டங்களையும் இடையிடையே பதிவு செய்கிறார்.  ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து மணிப்பூரைச் சேர்ந்த இரோம் ஷர்மிளா நடத்திவரும் நீண்ட பட்டினிப் போராட்டத்தை பதிவு செய்கிறார்.
இந்த நூலின் சுவாரஸ்யமான பகுதி இனிதான் தொடங்குகிறது.  இந்த நாட்டின் புரட்சிக்காரர்களுக்கும் வரலாற்று மாணவர்களுக்கும் ஒரு பெரிய ஆசை உண்டு.  நக்சல்பாரி என்ற அந்தச் சிற்றூரை – புரட்சிகர இயக்கத்துக்கு ஒரு புனைப்பெயர் தந்த அந்தக் கிராமத்தை ஒரு முறையாவது போய் பார்க்க வேண்டாமா – சுதீப் இதே ஆசையோடு நம்மையும் அழைத்துக் கொண்டு நக்சல்பாரிக்குப் பயணப்படும் போது இதயம் படபடக்கிறது.
காஞ்சிப்பட்டில் சரிகை சேர்த்தது போல் இந்நூலில் ஆங்காங்கே அழகான கவிதைவரிகள் பதிக்கப்பட்டுள்ளன. ஒன்றே ஒன்றையாவது எடுத்துக் காட்ட வேண்டும்.  1975 மே மாதம் 3 ஆம் நாள் ஹவுரா சிறையில் ஐந்து நக்சல்பாரிக் கைதிகள் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர்.  அவர்களில் ஒருவர் பிரவீர் ராய் சவுத்ரி – 22 வயது மாணவர்.  அவருடைய செல்லப் பெயர் பக்கி அல்லது பறவை!  அவர் கொல்லப்பட்ட செய்தி அறிந்து கல்கத்தா பிரெசிடென்சி சிறைச்சாலையில் இருந்த அவருடைய தோழர்கள் சிறை அறையின் சுவரில் ஒரு துண்டுக் கல்லைப் பயன்படுத்தி எழுதிய வரிகள் இவை:
“அமைதியாயிருங்கள்
என்னுடைய சகோதரன் இங்கு உறங்குகிறான்
வெளுத்த முகத்துடனும், வருத்தந் தோய்ந்த இதயத்துடனும்
அவனருகில் நிற்காதீர்கள்
அவன் சிரிப்பான்!
அவனது உடலை மலர்களால் மூடாதீர்கள்,
ஒரு மலருடன் மேலும் மலர்களைச் சேர்ப்பதில் என்ன பயன்?
உங்களால் முடியுமெனில்
அவனை உங்கள் இதயத்தில் புதையுங்கள்
நீங்கள் கேட்பீர்கள்
இதய  பறவையின் கிளுகிளுப்பு ஒலியை
தூங்கிக் கொண்டிருந்த உங்களது ஆன்மா விழித்துக் கொள்ளும்.
உங்களால் இயலுமெனில்
சில துளிக் கண்ணீரைச் சிந்துங்கள்
மேலும் –
உங்களது குருதி முழுவதையும்”.

நக்சல்பாரி புரட்சித் தலைவர்களில் சாரு மஜும்தாருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்கள் கனு சன்யாளும், ஜங்கல் சந்தாலும்!  இவர்களில் கனு சன்யாள் எழுதிய நக்சல்பாரிப் போராட்ட அறிக்கை எங்களுக்குப் பெரும் வழிகாட்டியாக அமைந்தது.  கிராமப் புற மக்களோடு பழகுவது எப்படி, அவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாம், என்ன எதிர்பார்க்கக் கூடாது, அவர்களை வென்றெடுக்க எப்படிப் பொறுமையாக உழைக்க வேண்டும் என்பதையெல்லாம் அந்த அறிக்கையில் தெளிவாகவும் விரிவாகவும் சொல்லியிருந்தார்.  கிராமங்களில் சென்று பணியாற்றுவதற்கு அந்த அறிக்கை எங்களை ஆயத்தப்படுத்தியது எனலாம்.  அந்தப் பழைய புரட்சியாளர் இப்போது எப்படி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் பலருக்கும் ஏற்படும்.  இந்நூல் நேரடியாக அவரிடமே நம்மை அழைத்துச் செல்கிறது.  அதே எளிமை, அதே உழைப்பு, பட்டறிவினால் பக்குவப்பட்ட தெளிந்த சிந்தனை… மற்றபடி அதே கனு சன்யாள்தான்.  சில மாதங்களுக்கு முன்பு கனு சன்யாள் இயற்கை எய்தியபோது, வாழ்க்கையில் நேரில் சந்திக்க விரும்பிய ஒருவரைச் சந்திக்கத் தவறிவிட்டோமே என்ற வருத்தம் மேலிட்டது.  இந்நூல் அந்த வருத்த்த்தைச் சற்றே தணித்து எனக்கு ஆறுதல் அளித்துள்ளது.
அரசியல் கொள்கை, கோட்பாடு, கருத்தியல் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.  பொதுவாழ்க்கையில் ஈடுபடுகிறவர்கள் எவ்வளவு எளிமையாக இருக்க வேண்டும், எவ்வளவு பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதற்காகவேனும் கனு சன்யாள் போன்றவர்களின் வாழ்க்கையை இளைஞர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.  பொறுக்கித் தின்பதே அரசியல் என்ற எண்ணத்தை மாற்றித் தன்னைத்தான் பொதுநலனுக்காக உருக்கிக் கொள்வதே அரசியல் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சாரு மஜும்தாரின் மிக நெருங்கிய தோழராக இருந்த போதிலும் தொடக்கத்திலிருந்தே அவரோடு கனு சன்யாள் கருத்து மாறுபாடு கொண்டிருந்தார் என்பது முக்கியச் செய்தி.
கனு சன்யாள் சீனத்துக்குச் சென்று தலைவர் மாவோவைச் சந்தித்தது பற்றிச் சொல்கிறார்:
“நாங்கள் 1969 இலிருந்து 1972 வரை தலைமறைவாக இருந்தோம்.  அந்த நேரத்தில் நான் சீனத்துக்குச் சென்று மாவோவைச் சந்தித்தேன். இந்திய நிலைமைகள் குறித்து அவருடன் உரையாடிய பிறகு, நான் அந்த வழி தவறானது என்ற முடிவுக்கு வந்தேன்,”
நாங்கள் அந்த நேரத்தில் “சீனத்தின் பாதை எமது பாதை! சீனத்தின் தலைவர் எமது தலைவர்!” என்று சாரு மஜும்தார் தந்த முழக்கத்தை முழங்கிக் கொண்டிருந்தோம்.  இது தவறான முழக்கம் என்பதை மாவோவே கனு சன்யாளிடம் சுட்டிக் காட்டியதாகப் பிற்காலத்தில் எங்களுக்கொரு செய்தி கிடைத்தது.  இந்த நூலில் “உங்களிடம் மக்கள் ஆதரவு இருந்தால் நீங்கள் வெளியில் யாரிடமிருந்தும் ஆதரவு பெறத் தேவையில்லை” என்று மாவோ தன்னிடம் கூறியதைக் கனு சன்யாள் பதிவு செய்கிறார்.  இது எல்லாப் புரட்சிகளுக்கும், எல்லா விடுதலைப் போராட்டங்களுக்கும் படிப்பினையாக இருக்க வேண்டிய அறிவுரை.
ரெட் சன் என்ற இந்நூலின் ஆங்கிலப் பெயரைச் சிவப்புச் சூரியன் என்றோ செங்கதிர் என்றோ தமிழாக்கம் செய்திருக்கலாம் ஏன் அப்படிச் செய்யவில்லை என்பதற்கு மொழிபெயர்ப்பாளர்தான் விளக்கம் தர வேண்டும். சீனத்தில் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அது பற்றி புகழ்பெற்ற எழுத்தாளர் எட்கர் ஸ்னோ “Red star over china” என்ற நூலை எழுதினார்.  அது “சீனத்தின் மீது சிவப்பு நட்சத்திரம்” என்ற பெயரில் தமிழ் நூலாகவும் வெளிவந்தது.  சீனப்புரட்சி பற்றி உலகம் அறிந்து கொள்ள அந்நூல் பெரிதும் பயன்பட்டது.  அதேபோல் இந்தியாவின் மாவோயிஸ் இயக்கம் பற்றி இந்நூல் அறியத் தருகிறது.
இந்நூலில் எனக்கு ஒரு முக்கிய குறை தென்படுகிறது.  மாவோயிஸ்டு இயக்கத்தின் வளர்ச்சிப் படிநிலைகளையும் உள்வேறுபாடுகளையும் அவற்றால் நேர்ந்த பிளவுகளையும் மறுசேர்க்கைகளையும் எடுத்துரைக்கும் போது இவை அனைத்துக்கும் தந்திரவுத்திச் சிக்கல்களையே காரணமாய் காட்டுகிறது.  நக்சல்பாரி இயக்கத்தின் சார்பில் சாருமஜும்தார் செய்த பிழை அழித்தொழிப்பு என்ற போராட்ட வடிவத்தில் மட்டுமில்லை.  இந்த வடிவத்தை நியாயப்படுத்துவதற்காக இந்தியச் சமூகம் பற்றிய பகுப்பாய்வையும் அரசு பற்றிய கணிப்பையும் அவர் தவறாகச் செய்தார்.  சீனத்தின் பாதை நமது பாதை என்ற முழக்கத்தை நியாயப்படுத்துவதற்காக புரட்சிக்கு முன் சீன சமுதாயம் இருந்த அதே நிலையில் இப்போதும் இந்தியச் சமூகம் இருப்பதாகக் கற்பித்துக் கொண்டார்.  சீனம் அரைக் காலனிய அரைப் பிரபுத்துவ நாடென்றும் இந்தியாவும் அரைக் காலனிய அரைப் பிரபுத்துவ நாடு சீன பெருமுதலாளிகள் தரகு முதலாளிகள் என்றால் இந்தியப் பெருமுதலாளிகளும் தரகு முதலாளிகளே!  எந்த அறிவியல் ஆய்வின் அடிப்படையிலும் அவர் இந்த முடிவுக்கு வரவில்லை.  சமூகப் பகுப்பாய்வின் அடிப்படையிலும் புரட்சியினது வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தின் அடிப்படையிலும் ஒரு மூலவுத்தியை வகுத்து அதிலிருந்து தந்திரவுத்திக்குச் செல்வதற்குப் பதிலாக ஒரு தந்திரவுத்தியை வகுத்து வைத்துக் கொண்டு அதற்கேற்றவாறு மூலஉத்தியை முன்மொழிந்த அகநிலைவாதத் தவற்றினை சாரு செய்தார்.
இரண்டாவதாகச் சீனப் புரட்சியைப் பார்த்தொழுகும் அவசரத் துடிப்பு இந்தியாவின் தனித்தன்மைகளை அவர் பார்க்கவிடாமல் செய்துவிட்டது.  பல்தேசியத் தன்மையும் வர்ண சாதி அமைப்பின் மேலாதிக்கமும் இந்தியத் துணைக் கண்டத்துக்குரிய தனித்தன்மைகளாகும்.  இந்த பல்தேசிய தன்மையை உள்வாங்கத் தவறியதால்தான் சீனத்தில் போலவே இந்தியாவிலும் நீண்ட பயணம் நிகழ்த்த முடியுமென அவர் கனவு கண்டார்.
சிபிஐ, சிபிஎம் கட்சிகளோடு ஒப்பிட்டால் மாவோயிஸ்டுகள் தங்கள் போராட்டப் பட்டறிவின் அடிப்படையில் தவறுகளைத் திருத்திக் கொண்டு முன் செல்வதில் எவ்வளவோ மேம்பட்டுத் திகழ்கிறார்கள்.  அவர்களின் மக்கள் பற்றும் புரட்சி நேயமுமே இதற்கு அடிப்படை.  இந்திய ஆளும் வர்க்கங்கள் சிபிஐ – சிபிஎம் கட்சிகளைத் தங்களின் அங்கமாகவே பார்க்கின்றன.  அதே போது மாவோயிஸ்டுகளைக் கண்டு அவர்கள் நடுங்குகிறார்கள்.  மாவோயிஸ்டுகள் தான் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று மன்மோகன் சிங் பேசியதை நாம் அறிவோம்.  ஆனால் அதே நேரத்தில் மாவோயிஸ்டுகளோ அவர்களை உளமார நேசிக்கிற நண்பனாகிய நாமோ எல்லாத் தவறுகளும் களையப்பட்டு விட்டன;  விரைவில் வெற்றிக் கொடி ஏற்ற வேண்டியதுதான் என்று அலட்சியமாக இருந்து விடுவோமானால் ஏமாந்துபோவோம்.
மாவோயிஸ்டுகள் பட்டறிவின் மூலம் படிப்பினைகள் பெற்று தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னேறியதால்தான் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளார்கள்.  வலிமைபொருந்திய பெருங்குழுமங்களுக்கும், அவற்றுக்கு குற்றேவல் செய்யும் இந்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் எதிராகப் பழங்குடி மக்களை அணி திரட்டிப் போராடுவது மட்டுமல்ல;  இந்தப் போராட்ட அணியில் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்வதிலும் அவர்கள் மகத்தான வெற்றி கண்டுள்ளார்கள்.  இந்தப் போராட்டங்கள் எதில் நிறைவுபெறும் என்ற சிக்கல்தான் முன்னுக்கு நிற்கிறது.  எங்கள் தமிழ்த் தேசம் ஏட்டில் பழங்குடி மக்கள் விடுதலை இந்தியாவுக்குள்ளா? இந்தியாவிலிருந்தா என்று வினாத்தொடுத்திருந்தோம்.
இந்தியப் புரட்சியில் நம்பிக்கை வைத்திருக்கும் வரை இந்தியாவுக்குள் என்றுதான் விடை சொல்ல முடியும்.
காசுமீர், வடகிழக்கு, தமிழீழம்… இந்தத் தேசிய இனப் போராட்டங்கள் மட்டுமல்ல தண்டகாரண்யப் பழங்குடி மக்களின் போராட்டமே வல்லாதிக்கம் தோற்றுவித்த இந்தியக் கட்டமைப்பை  உடைத்து நொறுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை நமக்கு உணர்த்தி நிற்கிறது.
இந்திய புரட்சி என்பது கானல் நீர் வேட்டை!  எவ்வளவு விரைந்து ஓடினாலும் அதைப் பிடிக்க முடியாது.
இதே போல் வர்ண சாதி அமைப்புக்கு எதிரான சமூக நீதிப் போராட்டத்திற்கு நேரடியாகவே அழுத்தம் தரப்பட வேண்டும்.  இது மக்கள் நலனுக்கானது, எனவே ஆதரிக்கிறோம் என்ற நிலைப்பாடு போதுமானதன்று.  ஆதரிப்பதன்று நாமே முன்னெடுத்து நடத்த வேண்டும் என்ற பார்வை தேவைப்படுகிறது.
சுதீப் சக்ரவர்த்தியின் பயணம் இந்த நூலில் அவர் தொட்டிருக்கும் எல்லையோடு முற்றுப் பெற்று விடக் கூடாது, அதற்கு மேலும் தொடர வேண்டும் என்பதற்காகவே இந்தத் திறனாய்வை முன்வைக்கிறேன்.
நூலாசிரியர் இந்தப் பயணத்தைத் தொடர்ந்தாலும் தொடராவிட்டாலும் நூலைப் படிக்கிற நாம் தொடர வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
அடைந்துள்ள வெற்றிகளிலிருந்து ஊக்கம் பெற்று தோல்விகளிலிருந்து பாடம் பெற்று புதிய இலக்குகளை நோக்கி முன்னேறிச் செல்வதற்கு இந்த நூல் நமக்கோர் உந்துதலாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு முடித்துக் கொள்கிறேன். 
நன்றி
வணக்கம்.

(காஞ்சிபுரம் இலக்கிய வட்டம் சார்பில் 05, செப்டம்பர் 2010ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரெட் சன் நூலுக்கான அறிமுகக் கூட்டத்திற்கு தோழர் தியாகு எழுதி கொடுத்தனுப்பிய விமர்சன கட்டுரை)