Sunday, February 3, 2013

மதச்சார்பின்மையென்ற பெயரில் ‘விஸ்வரூபம்‘ எடுக்கும் படைப்புச் சுதந்திரம்

கமலின் ரசிகர்கள் ‘ஆப்கான் தீவிரவாதிகள் பற்றி கதையெடுத்தால் இங்குள்ள முஸ்லீம்கள் ஏன் கொதிக்கிறார்கள்‘ என்று ஒரு அறிவுப் பூர்வமான கேள்வியை எழுப்புகிறார்கள்.  விஸ்வரூபத்தில் ஆப்கான் தீவிரவாதிகளை அவர்களுடைய நாட்டோடு ம்ட்டும் இணைத்து கதையெடுக்கப் பட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்த்த் தீவிரவாதி தமிழ்நாட்டிலுள்ள மதுரைக்கும் கோவைக்கும் வந்து தங்கியிருந்த போது தமிழ் கற்றுக் கொண்டதாக கூறும் காட்சி உள்ளதாம்.

இந்த வசனம், காட்சி இங்குள்ள இஸ்லாமியர்களையும் ஆப்கான் தீவிரவாதிகளுடன் நேரடித் தொடர்புடையவர்களாகப் பார்க்கும் எண்ணத்தை திரைப்படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தாதா? ஏற்கனவே அர்ஜுன், விஜய காந்த் வகையறாக்களின் தேசபக்திக்கு இஸ்லாமியர்கள் பயன் படுத்தப்பட்டார்கள். துப்பாக்கி பட்த்தில் சாதாரண இஸ்லாமியரைக்கூட ஸ்லீப்பர் செல் என்று சந்தேகிக்க வைத்துவிடும் அபாயம் இருந்ததைப் போலவே இதிலும அபாயம் உள்ளது. டெல்லி மும்பை என்று கூறப்பட்டிருந்தால் கூட அதன் தன்மை வேறானதாக இருந்திருக்கும். ஆனாலும அதையும் கூட நாம ஏற்றுக் கொள்ள முடியர்து.
இது கட்டாயம் இங்குள்ள இஸ்லாமியச் சகோதரர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற மனநிலையை ஏற்படுத்தும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. கமல் ஒரு வேளை தீவிரவாத எதிர்ப்பு என அமெரிக்கா கூறிக் கொண்டிருக்கும், இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதி என்கிற கருத்துக்குப் பலியாகி, அதை சொந்த மண்ணுக்குரிய அடையாளத்தோடு எடுக்க முயற்சித்த்தில் இந்த தவறு நிகழ்ந்திருக்கலாம்.

பல நேரங்களில் பொது போக்கிலிருந்து மாறி புது விசயங்களை தொழில் நுட்பங்களை கையிலெடுக்க நினைக்கும் கமல் இஸ்லாமியர் குறித்த தீவிரவாதம் குறித்த அமெரிக்க கருத்துக்கு பலியாகி விட்டது வருத்த்த்திற்குரியதுதான்.
.
ஏதோ ஒரு உள்ளுணர்வில் தான் கமல் இஸ்லாமிய அமைப்பினருக்கு படத்தை ரிலீஸாகும் முன்பே திரையிட்டுக் காட்டியிருக்கிறார். அந்த அளவிற்கு இஸ்லாமிய சகோதரர்களுக்கு மரியாதை அளித்த கமல், அவர்களது கோரிக்கையைப் பரிசீலித்து, அவர்களோடு ஆலோசித்து நீக்க வேண்டியவற்றை நீக்கியிருக்கலாம். கமல் ஒரு படைப்பாளி என்கிற அளவிலேதான் இதை அவரிடம் எதிர்பார்க்கிறோம்.

ஆனால் சில அறிவுஜீவிகளின் ’கருத்துச் சுதந்திரம்’  என்று வழிநடத்தலுக்கு பலியாகிப் போனார் கமல்.

கமல் அன்பே சிவம் என்ற படம் எடுத்ததால் அவரது மற்ற குறைகளை தோழமை உணர்வு கொண்ட இடதுசாரிகள் விமர்சிக்க மாட்டார்கள். பெரியாரிஸ்டுகள் கமல் தன்னைப் பகுத்தறிவு வாதி என்று சொன்னதால் விமர்சிக்க மாட்டார்கள். மகளிர் மட்டும் படத்தில் ‘கறவை மாடு...’ என்ற பாடல் வைத்திருந்தார். பெண்ணை ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகளுக்காக இவர்கள் யாருமே கமலை விமர்சித்த்தில்லை. கமலே எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறது ஒரு தந்தையாக இனிமேல் சில மாதிரி நடிக்க மாட்டேன் என்று தானாகவே தான் தன்னை மாற்றிக் கொண்டார். ஹேராம் படத்திலும, உன்னைப் போல் ஒருவன் படத்திலும இஸ்லாமியர்களை சித்தரித்திருந்த்தை யாரும் பெரிதாக விமர்சிக்கவில்லை. ஏன் பம்பாய் படத்தில் கூட இஸ்லாமியர்கள் ஊர்வலம் வரும் போது மட்டும் ஒரு கலவர பீதியை ஏற்படுத்தும் விதமாக காட்சி அமைக்கப் பட்டிருக்கும். ஆனால் இந்துக்கள் ஊர்வலம் போகும் போது அமைதியாக பாதுகாப்பு உணர்வு இருப்பது போன்று காட்சி அமைக்கப் பட்டிருக்கும். அந்தப் படத்தை பாராட்டித் தள்ளினார்கள். இஸ்லாமியர்கள் பற்றிய தவறான சித்தரிப்புகள் வரும்போதெல்லாம் இஸ்லாமியர்கள் மட்டுமே போராடியுள்ளனர். அதை விமர்சித்த அறிவுஜீவிகள். சமூக மாற்ற சிந்தனையாளர்கள் மிக மிக சிறுபான்மையினரே.

ஒரு கலைஞனை நல்ல விசயங்களுக்குப் பாராட்டி தோளோடு தோள் நிற்பதைப் போலவே சமூக நலனுக்கு எதிரான கருத்துக்களைக் கூறும் போது தோழமை உணர்வோடு விமர்சிக்கவும் தயாராக இருக்க வேண்டும. எந்த ஒரு படைப்பாளியும் கலைஞனும் தன் படைப்பு குறித்து வரும எதிர் விமர்சனங்களுக்காக மனம் உடைய மாட்டார். சிலர் எதிர் விமர்சனங்களைக் கண்டு, முதலில் எரிச்சலோ சோர்வோ அடைந்தாலும கூட சிறிது காலம் கழித்து தன்னை சுய விமர்சனம் செய்து அதை மாற்றிக் கொள்வார். இது சிறந்த படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்குமே உரிய இயல்பு. ஆனால் என்ன இசம் பேசினாலும தனி நபர் துதிபாடலுக்கு பழகிப் போன நமது விமர்சகர்கள் கமலை போற்றிப் பாடியே மிக சிறந்த போர்குணமிக்க படைப்பாளியாக, மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கும் கலைஞனாக இப்பொழுது இருப்பதை விட இன்னும் சிறப்பாக பரிணமித்திருக்க வேண்டியதைத்  தடுத்து விட்டார்கள் என்றே சொல்ல்லாம்.

அதனால்தான் இப்பொழுது அ.மார்க்ஸ சொன்னது போல இவர்கள் ’கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்’ என்று ஓதிக் கொண்டிருக்கிறார்கள்.
கருத்துச் சுதந்திரம் என்று குரலெழுப்பும் படைப்பாளிகள் எல்லோரும் இந்திய திரைப்படத் தணிக்கை குழுவின் விதிகளுக்கு உட்பட்டுத்தானே படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். கருத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் என்று இந்திய திரைத்ப்படத் தணிக்கை குழு வேண்டாம் என்று சொல்வார்களா? மதச்சார்பற்ற நாடு என்று கூறிக் கொள்ளும் இந்த நாட்டில் தான் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து படங்கள் வெளிவருகிறது. அதை தணிக்கை குழு தானே அனுமதிக்கிறது?

இந்தத் தணிக்கை குழு மட்டும முழுமுழுக்க படைப்பாளிகளின் படைப்புச் சுதந்திரத்தை அங்கீகரிக்கிறதா என்ன? காற்றுக்கென்ன வேலி, படத்துக்கு நடந்த்து என்ன என்று தெரியாதா?
இந்தத் தணிக்கை குழுதானே பள்ளி மாணவ மாணவிகள் காதலித்து முத்தம் கொடுக்கும் காட்சியையும் , ஐட்டம் பாட்டிற்கும் . தொப்புளைக் காட்டி ஆடுவதற்கும். பெண்களை. தலித்துகளை, இஸ்லாமியர்களை கேவலமாகச் சித்தரிப்பதற்கும் அனுமதிக்கிறது.  இது தான் கருத்து சுத்ந்திரத்தின் லச்சணம்.

நான் மதமற்றவன் என்று கூறி கமல் தன்னை ஒரு பிரபஞ்சக் கலைஞனாக கூறிக் கொள்வது சமூகத்தில் நிலவும் மத, சாதி, இன வேறுபாடுகளை கடந்த மனிதனாக மனிதாபிமானம் மிக்க பகுத்தறிவு மிக்க கலைஞனாக  தன்னை காட்டிக் கொள்வதற்காக இருக்க வேண்டும்.  அதை விடுத்து அமெரிக்காவால் இட்டுக கட்டப்பட்ட பொய்யான, ‘தீவிரவாத எதிர்ப்பு‘ என்ற போலியான, உலக சமூக்ங்கள் அனைத்திற்கும் கேடு விளைவிக்க்க் கூடிய கருத்தை படமாக எடுத்து, உலக அளவில் படத்தை விற்பதற்கு மட்டும் மத்மற்ற கலைஞன் என்ற அடையாளத்தை பயன்படுத்தக் கூடாது.

  டிடிஎச்சில் படத்தை வெளியிடும் போது வந்த எதிர்ப்புகள் வால்மார்ட்டிற்கு வந்த எதிர்ப்பைப் போன்றது தான்.  அதை வெறுமனே புதுமையான அணுகுமுறை என்று மட்டுமே அறிவுஜீவிகள் கூறித் திரிந்தனர்.  அதனை புதுமை என்று மட்டுமே பார்க்க முடியாது.  டிடிஎச் வியாபார முறை புதிதானது எனில் அந்த முறையின் மூலம் தமிழ்நாட்டில் நடக்கும் சாதிய வன்முறைகளை இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு நடக்கும் காவி தீவிரவாத்த்தை படமாக எடுத்து மார்க்கெட் செய்ய போராடலாம். நம் நாட்டிற்கு, இன்த்திற்கு பெருமை சேர்க்கும் விசயங்களை படமாக எடுத்து உலக அரங்கிற்கு காண்பிக்கலாம்.

     அதை விட்டு டிடிஎச் சில் வெளியிடுவதற்காக, சர்வதேச தன்மை வாய்ந்த்தாக இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக கற்பித்து (இது அமெரிக்காவின் கருத்து, உலக மக்களின் கருத்தல்ல) படம் எடுத்து உலக சந்தைக்கு கொண்டு போக வேண்டுமா?  சில்ரன் ஆஃப் ஹெவன் போன்ற படங்கள் எல்லாம் உலக அளவில் பிரசித்தி பெற்ற படங்கள் தான்.

     அமெரிக்க ஹாலிவுட் படங்களைப் போல் படமெடுப்பதுதான் ஒரு கலைஞனின் லட்சியமா?  அதுதான் ஒரு சிறந்த கலைக்கான அளவீடா?  சர்வ தேச தரம் என்பது நன்றாய் விற்று கல்லாக் கட்டுவது இல்லை.  அப்படிப் பார்த்தால், உலகத்தில் போதைப் பொருள் கடத்தல் தான் அதிக லாபம் தரக்கூடியது.  மனிதர்களை மத போதையில் வைத்து அவர்களுக்குள் போரை உருவாக்குவதற்காக, அதற்கு ஒரு கருத்தியலை ’ஆஃப்கான் தீவிரவாதம்’ என்று உருவாக்கிக் வைத்துள்ளது அமெரிக்கா.

    அந்த கருத்தியல் தான் இன்று நன்றாக விற்பனையாகும் பண்டம்.  அதற்கு ஒரு தேசபக்தி போர்வை வேறு.  தேசபக்தி என்றாலே அண்டை நாடுடன் சண்டை போட்டு சாவதிலும, தீவிரவாதிகளை ஒழிப்பதிலும் மட்டும் தான் உள்ளதா? நாட்டின அனைத்து வளங்களையும், மனிதர்களையும்,   மனித விழுமியங்களையும், பண்பாட்டையும், அறத்தையும் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் தேசபக்திதான்.

     தீவிரவாத ஒழிப்பு என்ற அந்த பண்டத்தை ஒரு கலைஞனாக படைப்பாக்கம் செய்து கமல் விற்பனை செய்ய் பார்க்கிறார்.  இது என்னுடைய பொருள் அதை எங்கு எப்படி விற்பனை செய்ய வேண்டும் என்கிற உரிமை எனக்கு மட்டுமே உள்ளது என்கிற கமலின் குரல் நியாயமானது. ஆனால் இது போல் தமிழ் நாட்டில் ஒரு விவசாயி பேச முடியுமா? இவர்களின் வலியை படைப்பாளியாக கலைஞனாக கமலால் புரிந்து கொள்ள் முடியாதா? புரிந்து கொள்ள்த் தான் வேண்டும்.  அது தான் ஒரு படைப்பாளிக்கு, கலைஞனுக்கு அழகு.

   நடைமுறையில் இருக்கும் பிற்போக்கு கருத்துக்கள் மீது கேள்வி எழுப்பவனாக, விமர்சிப்பவனாக இருப்ப்வன் ஒரு சிறந்த கலைஞனாக, படைப்பாளியாக அடையாளம் காணப்படுவான்.  கமல் இந்த வகை என்றுதான் கமல் ரசிகர்களும் நம்புகிறார்கள். அதனால் தான் அமெரிக்காவின் பொய்க்கதையான இஸ்லாமிய தீவிரவாத்த்தை படமாக எடுக்கவும் நம் தலைவர் ஏதோ புது கருத்தை சொல்வதாக நம்புகிறார்கள்.

    ஆனால் கமல் சொல்வது ஹாலிவுட் சொல்லி புளித்து போன கட்டுக்கதையான இஸ்லாமிய தீவிரவாதம் தான்.  அமெரிக்காவின் இந்த கருத்துக்கு பின்னே எண்ணெய் வளங்களை சூறையாடும் அவர்களின் கேவலமான ஆதிக்க அரசியல் இருக்கிறது என் நோம் சோம்ஸ்கி போன்ற அரசியல் பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த அரசியலுக்கு கமலும் பலியாகியுள்ளார் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. அதனால் அவரது போர் மற்றும் பயங்கரவாத்த்திற்கு எதிரான உலக மனிதாபிமான கருத்தும பலியாகி விட்டது.

    தமிழ் நாட்டில் இடது சாரிகள், அறிவுஜீவிகள், பகுத்தறிவாளர்கள், அமெரிக்காவின் இந்த கருத்தையும்.  இதன் பின்னணியில் தங்கள் வாழ்வாதாரத்தை, சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இஸ்லாமிய நாடுகளில் உருவான ஆயுத தாக்குதலையும் எவ்வாறு அணுகுவது என்பது பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.  இவர்களும் இஸ்லாமிய தீவிரவாதம், ஆப்கானிய தீவிரவாதம் என்ற அதே அமெரிக்க பல்லவியை பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  இஸ்லாமியர்கள் மட்டுமே இதற்காக எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதன் வெளிப்பாடுதான் இன்று இஸ்லாமியர்கள் இந்த படத்தை எதிர்க்கும் போது கருத்து சுதந்திரம் என்று இவர்களைக் கூப்பாடு போட வைக்கிறது.

     இவர்களே இந்த தவறு செய்யும் போது ஒரு வெகுஜன கலைஞன் தன் தொழிலில் முழு உத்வேகத்தோடு இயஙகும் கமல் போன்ற கலைஞன் இந்த தவறை செய்வதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

தவறு செய்வது கலைஞனது இயல்புதான். ஆனால் அது தவறென உணர்ந்தால் படைப்பாளிகள் எவ்வித ஈகோவுமின்றி திருத்தத் தயாராயிருப்பதுதான் சிறந்த மாற்றுக் கருத்துக்களை அங்கீகரிக்கும் புதுமைகளை வரவேற்கும் படைப்பாளிக்கு அழகு.

திரைப்படம் தடைசெய்யப்பட்டவுடன் தமிழ்நாட்டை விட்டுப் போவேன் என்று கோபமாகவோ வருத்தமாகவோ கூற முடிகிறது. காரணம் அதற்கான வாய்ப்பு வசதிகள் இருக்கிறது. ஒரு வேளை வெளியேறுவது என்பதை நினைத்தே பார்க்க முடியாத நிலைமை கமலுக்கு இருந்திருந்தால் கடைசி வரை இங்கிருந்து தானே போராடியிருப்பார்.

அது போலத்தான் தங்கள் அன்றாட வாழ்க்கைக்காக, சுதந்திரத்திற்காக வேறு வழியின்றி அவர்கள் ஆயுதமேந்தியுள்ளனர். தங்கள் சொந்த மண்ணை மீட்க , தங்கள் சந்த்திகளாவது சுதந்திரமாய் வாழட்டும் என்று உயிரை விடுகிறார்கள். இதன் உண்மையான வலியை உணர்ந்து ஏராளமான ஈரான் படங்கள் வந்துள்ளன. போராடுபவர்களைப் பாராட்டாவிட்டால் போகிறது. என்னவோ பொழுது போக்காக குண்டு வைத்து அப்பாவி மக்களின் உயிரை குடிப்பவர்க்ள், அதற்காக தங்கள் உயிரைக் கூட மாய்த்துக் கொள்பவர்கள் என்கிற ரீதியில் சித்தரிக்கப் படுகிறார்கள் அமெரிக்கர்களால். இந்தக் கருத்தியலுக்குப் பலியான நாமும அதை வழி மொழிகிறோம். இன்றும் சரியான காரணமின்றி இஸ்லமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக சிறையிலடைபட்டு கிடக்கும் நமது இஸ்லாமியச் சகோதர்ர்கள் நம் நாட்டில் பலர் இருக்கிறார்கள்.

அதனால், எனக்கு மதம் இல்லை, சாதி இல்லை என்று கூறுகிற கமல் இஸ்லாமியர்களையும், நபிகள் நாயகத்தையும் தரகுறைவாகப் பேசும் தன் ரசிகர்களைக் கண்டிக்க வேண்டும். சரியாக வழிநடத்த வேண்டும. இஸ்லாமியர்கள் எனது சகோதரர்கள் எனக்கூறும் கமல், இஸ்லாமிய அமைப்பினரின் நிலைப்பாட்டிற்கு எதிராக நின்று, விஸ்வரூபம் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்துத்துவ கட்சிகளை ’’இதில் தலையிட வேண்டாம் இது எனக்கும், எனது சகோதரர்களுக்குமான பிரச்சினை, இதை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்கிறோம்’’ என்று சொல்லியிருக்க வேண்டும்.

உண்மையிலேயே தீவிரவாத்த்தை எதிர்த்துப் படமெடுக்க நினைத்தால். அடுத்த படமாக மாலேகான் குண்டு  வெடிப்பில் இந்து மதத் தீவிரவாதிகளின் கைவரிசையை அடிப்படையாக்க் கொண்ட படம் எடுக்க வேண்டும். (இதற்கும் எல்லா ஆவணங்களும் இருக்கின்றன.) அப்பொழுது மட்டுமே கமல் பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததும், தான் ஒரு பெரியாரிஸ்டு என்று கூறியதும், நான் மதமற்றவன் என்று கூறி கொண்டதற்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும்..

ஒரு நல்ல  கலைஞன் சராசரிகளை விட சக மனிதர்களின் உணர்வுக்கு அதிக மதிப்பளிப்பவனாக இருப்பான். இதைதான் இப்பொழுது பேச்சுவார்த்தைக்குத் தயாராகியிருக்கும் கமல் நிரூபித்திருக்கிறார்.

இந்த கட்டுரையை எழுதி முடிக்கும் தறுவாயில், ஒரு கலைஞன் என்ற முறையில் இஸ்லாமியரின் உணர்வுக்கு மதிப்பளித்து சில காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்ட படைப்பாளி கமலுக்கு மதச்சார்பற்றவர்களின் சார்பாகவும்., இஸ்லாமியச் சகோதரர்களின் சார்பாகவும் நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

டெல்லி போராட்டங்கள் : சில பார்வைகள்

டெல்லிச் சம்பவத்தைக் கண்டித்துப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அருந்ததி ராய் பிபிசி க்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். இந்தப் போராட்டம் நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் என்றும், இது அடித்தட்டுமக்களுக்கு பயனளிக்காது என்றும், இது போன்ற வன்முறைகள் வட கிழக்கு மாநிலங்கள், ஜம்முக் காஷ்மீர், போன்ற மாநிலங்களில் ராணுவத்தாலும் காவல் துறையினராலும் நிகழ்த்தப்படுகிறது  என்றும் கூறியிருக்கிறார். அவர் கூறும் மற்ற காரணங்கள் நியாயமானதாகப் பட்டாலும், இந்த டெல்லிச் சம்பவத்திற்கு மட்டும் எதற்கு இந்தளவுக் கூப்பாடு என்று கூறியது மிகவும் கண்டனத்திற்குரியது.

           இந்தியாவில் நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்த அவருக்கு, அவரும் ஒரு பெண் என்ற வகையில், டெல்லி மாணவிக்கு ஏற்பட்ட நிலை ஏற்பட்டால், (இது நமது விருப்பமல்ல) அப்பொழுது எனக்காகப் போராடவேண்டாம், அந்தப் போராட்டத்தால் லட்சபோலட்ச உழைக்கு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும், இது நிலப்பிரபுத்துவத்தின் வழமையான கொடுமைதான் என்று எப்படி வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும் அது அவரது சுதந்திரம், அவரது அரசியல் நிலைப்பாடு.

               ஆனால் டெல்லியில் நடந்தது என்ன? அந்த மாணவி நடு இரவிலோ, பின்னிரவிலோ வெளியில் சுற்றவில்லை. ஒன்பது மணிக்குத்தான் அதுவும்  பேருந்து நிறுத்தத்தில்தான் நின்றிருக்கிறாள்.  தன்னந்தனியாக அல்ல. தன் நண்பருடன்தான் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்திருக்கிறாள். அப்பொழுதுதான் இது நிகழ்ந்துள்ளது. அடுத்த முக்கியமான விசயம் இச்சம்பவம் நாட்டின் தலைநகரத்தில் நடந்துள்ளது. போலீஸ் ஸ்டேசன் கூட இல்லாத சாதிக்கொடுமைகளும், கட்டப்பஞ்சாயத்துகளும் நடந்து கொண்டிருக்கும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையிலுள்ள கிராமத்தில் நடந்தது அல்ல இச்சம்பவம்.

           எங்க அப்பன் பாட்டன் காலத்திலிருந்தே வாழ்கிறோம். பூரணகும்ப மரியாதையோடு சாதியை கட்டி காப்பாற்றி வருகிறோம் என்ற மனோபாவம் பெருநகரங்களில் குறைந்துள்ளது. படிப்பு, பணி நிமித்தமாக பல இன, சாதி, மத்த்தினரும் நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அடிப்படையில் வாழும் சூழலுள்ள நகரம் அது. குறிப்பாக உலகமயமாக்கலுக்கு பிறகு, ஐடி தொழில்நுட்பம் சார்ந்த பணி, படிப்பு காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளது.

          மாறிவரும் உலகமயமாக்கலின் காரணமாக பெண்கள் படிப்பதும், வேலைக்குச் செல்வதும், அதிகரித்திருக்கும் சூழலில் நடுத்தர வர்க்கம் தங்கள் வீட்டு பெண்களை முன்பைவிட வெளியில் அனுப்புகிறார்கள். இந்தச் சூழலில் உருவாகும்  கலாச்சாரம் வேறுவிதமானது.
                ஆணும், பெண்ணும் சந்திப்பதும், உரையாடுவதும் உடலுறவுக்கு மட்டுந்தான் என்கிற நிலப்பிரபுத்துவ, சாதிய கலாச்சாரத்திற்கு எதிரான, பெருநகர படித்த நடுத்தர வர்க்கத்தின் ஆண், பெண் நட்புக் கலாச்சாரம்தான் பாலியல் வன்முறையை ஒரு சமூக அநீதியாகப் பார்க்க வைக்கிறது.
                    தன் சாதிபெருமை தன் பெண்ணின் உடம்புக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டும்,  ஆண்மைதான் வீரம் என்று நினைத்து கொண்டும், வேறு சாதிப் பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்கினால் கைகொட்டிச் சிரிப்பதும், தன் சாதிப் பெண்ணுக்கு அந்த நிலை ஏற்பட்டால் மூடி மறைத்து பாதுகாப்பதுமாக வாழ்க்கை நடத்துபவர்களுக்கு  இதை புரிந்து கொள்ள முடியாது.

               இப்படிப் பட்ட சூழலில் குறைந்த பட்ச பொருளாதார சுதந்திரத்தோடு பெண் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையான, படிப்பு, வேலை இவற்றிற்காக வெளி உலகில் அச்சமின்றி பிரவேசிக்க எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற  உரிமைக்காக வெடித்த போராட்டம் இது.

                    இந்த போராட்டத்தைப் பார்த்து ஒரு காங்கிரஸ்காரர், ‘பெண்கள் நடு இரவில் ஊர் சுற்றுவதற்கு அல்ல சுதந்திரம்‘ என்று கருத்து தெரிவித்தார். டெல்லியில் இருந்து கொண்டே, அமெரிக்கா அரசுக்கு இரவு முழுக்க கண்விழித்து வேலை பார்க்க பெண்கள் வேண்டுமாம். ஆனால் இரவில் பெண்கள் வெளியில் வருவது ஊர் சுற்றுவதற்காம்.

                   அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆணும் தன்னுடைய அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என்று யாரையும் 9 மணிக்குக் கூட வெளியில் அனுப்பு முடியாதா என்றும், துணையாகச் சென்ற ஒரு ஆணாகிய தனக்கும் பாதுகாப்பில்லையா என்பதை உணர்ந்தும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு கம்யூனிசம் தெரியாது, வரட்டுத்தனமான வர்க்கப் பார்வை கிடையாது, ஜம்மு, மணிப்பூரில் ராணுவம் செய்த்துகூட அவர்களுக்குத் தெரியாது இருக்கலாம். கைரலாஞ்சியின் சாதி வன்முறைக் கொடூரத்தை புரிந்துகொள்ள முடியாதுகூட இருக்கலாம். ஏனெனில் அது அவர்களது பிரச்சினை இல்லை. எல்லா மனிதர்களும், எல்லா வர்க்கமும் தனக்கு நேர்ந்த நேரடி பாதிப்புகள், இழப்புகளிலிருந்துதான் கற்றுக் கொள்வதும் போராடுவதும். அப்படி எழுந்த போராட்டம்தான் டெல்லி போராட்டம்.

                        இந்தியாவின் ஏதோஒரு மூலையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்ட பெண் தனக்கு போராட ஆட்களில்லாததால், அருந்த்தி ராய் போன்ற மனித உரிமைக் காவலர்கள் அவர்களுக்காக போராட வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் இந்தப் பெண் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மருத்துவக் கல்லுரி மாணவி. தன் சக மாணவிக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக நடத்தப்பட்ட கல்லுரி மாணவர்களின் தன்னிச்சையான எழுச்சிதான் இந்த போராட்டத்தின் தொடக்கம்.  ராணுவமும் போலீசும் செய்கிற பாலியல் வல்லுறவு மட்டுமே மனித உரிமை மீறல் என்பதை எப்படி அருந்ததிராய் போன்றவர்கள் பார்க்கிறார்களோ அதுபோலத்தான் நடுத்தரவர்க்கத்துக்கு  இவைதான் பிரதானமாகத் தெரியும்.

                கலை எடுக்கிற பெண்களும் ஆதிவாசிகளும் தங்கள் குடும்பத்திற்குள்ளே கூட ஆணகளின் வல்லுறவுக்கு ஆளாகி எதிர்க்கவே திராணியின்றி இருக்கையில் குறைந்த பட்ச சுதந்திரம் உள்ள நடுத்தரவர்க்கம்தான் இது போன்ற பிரச்சினைகளுக்குப் போராட முடியும், இதுதான் சமூக யதார்த்தம்.

                   இது போன்ற நடுத்தர வர்க்கத்தின் போர்க்குரலால் உருவானதுதான் டாக்டர் முத்துலெட்சுமி கொண்டு வந்த தேவதாசி ஒழிப்பு முறை, ராஜாராம் மோகன் ராய் கொண்டு வந்த சதி ஒழிப்பு, குழந்தை திருமணம் ஒழிப்பு, இன்று பயன்படும் வரதட்சணை ஒழிப்பு சட்டம், பெண்கள் குழந்தைகள் மீதான குடும்ப வன்முறை ஒழிப்பு சட்டம் என்று  கூறலாம்.  இந்த சட்டங்கள் எல்லாம் கிராமத்தில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள எல்லா ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்க பெண்களுக்கும் முழுமையாகப் பயன்படுகிறதா என்ன? அவ்வாறில்லை என்பதற்காக அவற்றை தூக்கி யெறிந்து விட முடியுமா?  போலீசும், ராணுவமும் நாள்தோறும் நிகழ்த்தும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து குரல் கொடுப்பது எந்த நம்பிக்கையில்? இந்த அரசாங்கத்தை, அதன் சட்டத்தையும் மதித்துதானே? இந்த அரசின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்கிறவர்களால், இந்த சமூகத்தின் ஒரு பகுதியான நடுத்தரவர்க்கத்தின், பெண் சமத்துவத்திற்கான போராட்டத்தை எப்படி இப்படி பொறுப்பற்று விமர்சனம் செய்ய முடிகிறது?

                    நேரடியாக ஆதிவாசிகளுக்கும், ஒடுக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும், விளிம்பு நிலையினருக்கும் பயன்படும் சட்டங்களும், போராட்டங்களும் தான் மதிப்பு மிக்கவை.  அவற்றினால் மட்டுமே வராலாறு முழுக்க, சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்வது மார்க்சியத்தை, கம்யூனிசத்தை வறட்டு சூத்திரமாக பார்ப்பதன் விளைவு.

                   சமூக மாற்றத்தை  விரும்பும் கருப்பு , சிவப்புக் கட்சிக்காரர்கள், தேசியஉணர்வாளர்கள், அறிவுஜீவிகள், ஜனநாயக சக்திகள் என அனைவருமே  சாதி, வர்க்கம் ஒழிந்து சமத்துவ சமூகம் வரும்போது பாலியல் வன்முறையற்ற சமூகம் உருவாகும் என நம்பிக்கொண்டு பாலியல் வன்முறை என்கிற கேடுகெட்ட செய்லை பொருட்படுத்தாமல் இருந்து விட்டனர். இந்த வன்செயலுக்கு காரணமான ஆபாச படங்கள், விளம்பரங்கள், பெண்ணை ஒரு பாலியல் ஜந்துவைப் போல் சித்தரிக்கும் திரைப்படங்கள். மத சாஸ்திரங்கள். இலக்கியங்கள், பத்திரிக்கைகள்  போன்றவற்றை எதிர்ப்பது பெண்கள் அமைப்புகளின் பொறுப்பு, அதில் தங்களுக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லை என்று இருந்து விட்டனர். ( மணிப்பூரில் பெண்கள் மீதான ராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு எதிராக அங்கும் பெண்கள் மடடும்தான் போராடினர்.) இந்த வரலாற்றுத் தவறின் மோசமான விளைவுதான் இன்று அக்கொடூரச் செயலுக்கு மரணதண்டனை கேட்டுப் போராடும் இந்தக் கொந்தளிப்பு.

                 நாம் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றே கவனிக்காமலோ ஒதுக்கி தள்ளிய பிரச்சினை, ஒரு தரப்பினரால், தன்னிச்சையாக, உணர்வு பூர்வமான போராட்டமாக  முன்னெடுத்துச் செல்லப்படுகிறது, என்கிற சமூக எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.  கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டு அதன் ஆரம்ப அடிச்சுவடியான அரசு, அதிகார வர்க்கம், போலீஸ் ராணுவம், செய்யும் வன்முறைகள் மட்டுமே வன்முறை என்றும், சாதியாலும் வர்க்கத்தாலும் ஏழ்மையில் உள்ளவர்களின் பிரச்சினை வெளியுலகிற்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்றும்,  சாதாரணமானவர்களுக்கு கூடத் தெரிந்த இந்த விசயத்தை புதிதாக கண்டுபிடித்தது போல் கூறிக் கொண்டு திரிவதும் கம்யூனிசத் தத்துவத்தை மிக மொன்னையாக புரிந்து கொண்டதன் வெளிப்பாடுதான்.

             இது வரையில் இந்தியாவில் கோவில் திருவிழாவைத் தவிர, வேறு எதற்கும் இவ்வளவு பெருந்திரளான கூட்டத்தை ஒரு பொதுவிசயத்திற்கான போரட்டத்திறகு பார்த்த்தில்லை. தமிழ் நாட்டில் நடந்துகொண்டிருக்கிற அணுஉலை எதிர்ப்பு போராட்டம் தவிர, இந்த போராட்டம் தான், ஆண்களோடு பெண்களும் சரிசமமாக கலந்து கொண்ட போராட்டம்.  பெண்கள் மீதான வன்முறையை தன் வாழ்வோடு சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்சினையாக புரிந்து கொண்டு  ஆண்களும், பெண்களுக்காக போராட்டத்தில் கலந்து கொண்ட தன்னெழுச்சியான போராட்டம்.  பல முறை தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும, கண்ணீர் புகையை வீசியும் எல்லாவற்றையும் தாண்டி பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  சாதி, இனம், மதம், மொழி, பால் கடந்து ஒரு நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினைக்காக, பெண்ணுரிமைக்காக ஆண்களும் பெண்களும் மாணவர்களும், மாணவிகளும் ஒன்றிணைந்து நடத்திய போராட்டம்.

                  இநதப் போராட்த்திற்கு காரணமான,  டெல்லியில் நடந்த, அந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவற்றை நாம் ஆராய வேண்டும் என்பதில் மறுப்பேதுமில்லை. இவ்வளவு வன்மமாக ஒரு பெண்ணை தாக்குவதற்குப் பின் உள்ள அரசியல், கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார, உளவியல் கூறுகள் ஆராயப்பட வேண்டியவை.  ஆனால், (அமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லா அநீதிகளுக்கும் எதிராக, ஒரு நாள் பொறுக்கமுடியாத கோபம் பிறிட்டுக் கிளம்பும், என்கிற புரிதல் இன்றி) இது வரை நடக்காத வன்முறையா இந்தப் பெண்ணுக்கு நடந்து விட்டது என்றும்,  இந்த ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் ஏன் இவ்வளவு கூப்பாடு, கொந்தளிப்பு என்றும், இந்த போராட்டமே அவசியமற்றது என்றும் கூறுவது சமூக நலனுக்கு விரோதமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பெண்கள் மீதான வன்முறையின் வர்க்க அரசியல்

டெல்லியில் ஓடும் பேருந்தில் நிகழ்ந்த கொடுர சம்பவத்தை ஒட்டி பல்வேறு எதிர்வினைகள் நடந்து கொண்டிருக்கிறது. கவர்ச்சிகரமான உடை அணிவ்து, இரவில் தனியே செல்வது, ஆணுடன் செல்வது போன்றவைதான் இதற்கு காரணம் என்று கூறுவது ஒரு புறம் இருக்க, மார்கண்டேய கட்ஜ போன்றவர்கள் ‘இதிலேயே கவனம் செலுத்தாதீர்கள், நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை இருக்கிறது,‘ என்று நமக்கு சுட்டிக் காட்டியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

             என்னவோ, சினிமாக் கதாநாயகியின் திருமணத்தை, விவாகரத்தை ஊட்கங்கள் ஊதிப் பெருக்கி செய்தியாக்குவது போல் அதை ஒதுக்கிவிட்டு மற்ற பிரச்சினைகளுக்கு முக்க்கியத்துவம் அளிக்கச் சொல்கிறார்கள். மறுபுறம், வாச்சாத்தி பிரச்சினை, தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை, வினோதினி மீதான ஆசிட்வீச்சு போன்றவற்றை விடவா என்று கேட்கிறார்கள். இதே முகநுலில் நடந்த உரையாடலில் ‘பாலியல் ரீதியாக வன்ம்மாக பேசி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள்‘ என்று சின்மயி புகார் செய்த போது, சின்மயிக்கு ஆதரவளித்தவர்கள் கூட இப்படி பேசுவது கண்டனத்திற்குரியது.

                ஈழத்தில் நடந்த வன்முறைகள் போர்சுழலில் நடந்தவை. வாச்சாத்தியும் ஆதிக்கத்தின் வெளிப்பாடாய் நிகழ்ந்த்து. தினமும தலித் பெண்கள் மீது நடைபெறுவது சாதி ஆதிக்கத்திலிருந்து வெளிப்படுவது. தன் காதலை நிராகரித்த பெண் மீது ஆசிட் வீசியதில் கூட தனிப்பட்ட குரோதம் தெரிகிறது. டெல்லி சம்பவ்த்தன்றே மும்பையில் பேருந்திற்காக காத்திருந்த 23 வயது மாணவியை தன் மனைவி என்று நினைத்து பின்புறமாக கத்தியால் குத்தியிருக்கிறான் ஒரு ஆண். இங்கு கூட தனிப்பட்ட உறவின் குரோதம் தவறாக வேறு பெண் மீது பாய்ந்திருக்கிறது.

               ஆனால் டெல்லி சம்பவத்தில் அந்தப் பெண்ணை அவர்களுக்கு யாரென்றே தெரியாது. அவள் ஒரு பெண் அவ்வளவுதான். அவளது சாதி, மதம், வர்க்கம், இனம் எல்லாவற்றையும் தாண்டி அவள் இரவு நேரத்தில் ஆணோடு வந்தது ஒன்று தான் அவள் செய்த தவறு.  பிடிக்காத சாதியோ, இனமோ, தன்னை ஏமாற்றிய பெண்ணோ அல்ல அவள். அந்த ஆண்களும் தங்கள் அதிகார வெறியை காண்பிக்கும் திறன் பெற்ற பெரிய அதிகார வர்க்க வாரிசுகள் அல்ல. நம்ம சமூகம் தான் ஒரு ஆணை சாதி, மத, வர்க்கம் என்று எல்லா இதர வகைகளிலும் அடக்கப் படுபவனாய் இருந்தாலும், பெண்ணென்று வரும் போது சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையென்றும், இயற்கையைப் போல ஆண்களின் உபயோகத்திற்கு படைக்கப்பட்டவள் பெண் என்றும் வளர்க்கப்டுகிறார்களே. அதன் விளைவு இது. இது சராசரி ஆண்களுக்கானது.

                   சமூக அக்கறையோடு உலவும் ஆண்களுக்கு கூட, திடீரென எதிர்பாராத விதமாக ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, உடல் ரீதியாக கொடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டால் என்ன மாதிரியான மனவலிக்கு ஆட்படுவாள் என்பதை உணர்ந்து கொள்ளாமல் பேசும் போது இது போன்ற குற்றம் செய்பவர்களுக்கு உடலளவில் ஏதாவது ஒரு ஊனத்தை அல்லது கிராமங்களில் சொல்வது போல் காயடித்து விடுவதுதான் இந்த வகைக் குற்றத்திற்கு சரியானதாக இருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது

                       சாதி அரசியல் பேசுபவர்கள் சாதி ரீதியாகவும், வர்க்க அரசியல் பேசுபவர்கள் வர்க்க ரீதியாகவும், இன அரசியல் பேசுபவர்கள் இன ரீதியாகவும் பெண் பாதிக்கப் பட்டால்தான் அவர்களுக்கு குரல் கொடுப்போம் என்பதைக் கூட நடைமுறையில் அவ்வளவுதான் இயங்க முடியும் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்தப் பெண்ணுக்காக போராட்டஙகள் நடைபெறுவதையும் அதை மீடியாக்கள் ஒளி பரப்புவதையும் ஊதிப்பெருக்குகிறார்கள் என்று சுருக்குவது அடிப்படையில் சமூக நலனுக்கு விரோதமானது..

                   வரலாற்றில் ஏற்ற தாழ்வுள்ள இந்த சமூகத்தில் உயர் சாதியில் பிறந்த பெரியார்தான் சமூக நீதியைப் பேசினார். பெரும் தொழிற்சாலைக்கு சொந்தக்கார்ராரின் மகனாகப் பிறந்த ஏங்கெல்ஸ்தான் சொத்தை தொழிலாளக்ளுக்கு எழுதி வைத்து கம்யூனிசம் பேசினார். இன்றும் மகாசுவேதா தேவி, அருந்த்தி ராய், அம்பை என ஒரளவிற்கு நடுத்தர வர்க்க . சாதி பின்னணியில் பிறந்தவர்கள் தான் சமூக மாற்ற கருத்துக்களையும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நடுத்தர வர்க்கப் பெண்கள்தான் அரசியல் தளங்களிலும்,அறிவுத்தளங்களிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும், ஊடகங்களிலும் இயங்கி வருகிறார்கள். அவர்கள் வெளியில் வருவதற்கே தடைபோடும் விதமாக அச்சுறுத்தும் விதமாக இது போன்ற செயல்கள் நடைபெறுவது சமூகம் மேலும் கேவலமான சீரழிவிற்கு செல்வதைதான் காட்டுகிறது. இவர்களுக்கே இந்த நிலை எனில் அடித்தட்டு சாதி. வர்க்க பெண்கள் பற்றி அலட்டிக் கொள்வதற்கு ஒன்றும் இல்லை.

           ஏன் இந்த வலைத்தளங்கள் கூட யாருக்கானவை.முகநுலில் எழுதுகிற நம்மை விட அறிவாளியாக, ஒரு கம்ப்யூட்டரை வாங்க முடியாத நிலையில் உள்ளவர்களால் சிந்திக்க, அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க முடியும். ஆனால் அவர்களது குரல் இங்கு பதிவாகாது. இதற்காக இந்த சமூக வலைத்தளங்களை ஒதுக்கிவிட்டு சென்று விட முடியுமா.

               இந்த பெண் மருத்துவக் கல்லுரி மாணவி, குறைந்த்து நடுத்தவர்க்க பின்னணி கொண்டவர். மாணவி வேறு. இயல்பாக இந்த பின்புலத்திலிருந்து போராட்டம் நடக்கிறது. ஊடகங்கள் ஒளிபரப்புகின்றன.

              இதே அளவு முக்கியத்துவம் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பிரச்சினைகளுக்கும் அளிக்கப் படவேண்டும என்று கோருவதே சரியானதாக இருக்க முடியும்.  ‘ரேப் பிரச்சினை‘ என்று சாதாரணமாக ஒதுக்கினால் நாளை  ‘சுதந்திரமாகத்தானே பெண்களெல்லாம் இருக்கிறார்கள்‘ என்பதற்கு பெயரளவு சாட்சியாக இருக்கும் குறைந்த பட்சப் நடுத்தர வர்க்கத்து பெண்களின் உரிமையும் பறிக்கப்பட்டு பெண்கள் வீட்டில் முடங்க வேண்டியதுதான். சாதி, வர்க்க, இன மொழி அரசியலையெல்லாம் ஆண்கள் மட்டுமே வாய்கிழிய பேசிக் கொண்டு திரிய வேண்டியதுதான். பெண்க்ள் யாரும் சமூக நலனுக்கான போராட்டத்திற்கு வர மாட்டார்கள்.

அட்டக்த்தியும், சாட்டையும்

அட்டக்த்தி, சாட்டை இரண்டு படங்களையும் சமீபத்தில்தான் பார்த்தேன அட்டகத்தி படத்தில் எனக்கு மிகப் பிடித்த விசயம் காதலை புனிதப்படுத்தாமல் மிகச் சாதரணமாக காட்டியிருப்பதுதான். குறிப்பாக காதலில் தோல்வியடைந்தவுடன் ‘இந்தப் பொம்பளைகளே இப்பிடித்தான் ஏமாத்திருவாளுக‘ என்று, தன் தனிவாழ்வில் ஏற்பட்ட தோல்விக்கு உலகத்திலுள்ள பெண்களையெல்லாம் ‘அவள் இவள்‘ என்ற ஏக வசனத்தில் திட்டாமலிருந்தது தமிழ் திரையுலக வரலாற்றில் (!!!??) முதல்முறையாக எழுதப்பட்ட வசனம்,,,,

     சாட்டை, பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் அறிவுரைகளால் விளாசியெடுத்திருக்கிறது. ஆனால் அந்தப் பள்ளிப்பருவக் காதல்தான் வழக்கமான சினிமாவாகத் தெரிகிறது. எப்படிக் காதலிக்க வேண்டும், காதல் என்றால் என்ன என்பதையெல்லாம் இவ்வளவு காலமும் திரைப்படம் மூலம் சொல்லிக் கொடுத்து, அந்த வரையறைக்குள் சிக்காதவற்றையெல்லாம் காதலாக மதிக்கமாட்டேனென்கிறது சமூகம்.

     பள்ளி மாணவனுக்கும் மாணவிக்கும் வழக்கமான சினிமாக் கதாநாயகன், நாயகி பாணியில் பாட்டு வைத்திருப்பது சரியானதாகத் தெரியவில்லை. அந்த வயதில் காதல் வரும், வந்தால்தான் மனிதப்பிறவி இல்லாவிட்டால் மனநோயாளி என்கிற அளவிற்கு சொல்லிச் சொல்லியே இளைய தலைமுறையை ஒரு வழியாக்கிவிட்டார்கள். இச்சமூகத்தில் பள்ளிக்காலத்தில் காதல் உணர்வு ஏற்படாமல் யாருமே பள்ளிவாழ்க்கையை கடந்து வந்ததில்லையா, வாழ்ந்ததில்லையா, அப்படியே காதல் வந்தாலும் இதுவரை சினிமாக்கள் காட்டுகின்றனவே அப்படித்தான் காதல் வந்தாக வேண்டுமா. இப்படி நிறையக் கேள்விகள் வருகிறது,
நாமெல்லாம் குழந்தையாய் இருந்தபோது என்ன செய்தோம் என்பதை எப்படி நம் நினைவுக்கு துல்லியமாக்க் கொண்டு வரமுடியாதோ, அது போலவே உடலும் மனதும் உற்சாகமாக எதையும் எதிர்கொள்ளும் பதின் பருவத்தில் நாம் என்னவாக இருந்தோம் என்பதை நினைவிற்கு கொண்டு வருவது என்பதும் சற்று சிரம்மானதுதான்.

     முப்பது நாற்பது வயதில் அவ்வளவு கால வாழ்வனுபவம் கொடுத்த கண்ணாடியிலிருந்துதான் அதை தரிசிக்க முடியும் அதன் தாக்கத்திலிருந்துதான் பதின் பருவ அனுபவங்களை அசைபோட முடியும், அவற்றை நாம் நினைவுபடுத்திப் பார்க்கும் போதுகூட நமது விருப்பு வெறுப்பு அதனுள் தாக்கம் செலுத்தும். இதை இயக்குனர்கள் கணக்கில் கொள்ள வேண்டும் என்பத எனது வேண்டுகோள்.

     மற்றொரு விசயம், பழைய சிவாஜி எம்.ஜி.ஆர் காலப் படங்களில் காதலன், காதலி தோற்றம் பக்குவமடைந்தவர்கள் போல் இருக்கும். அதன் பிறகு கல்லுரி மாணவ மாணவிக்கிடையேயான காதல் காட்சிகள், (அதாவது கல்லுரிக்குப் போவதே காதலிக்கத்தான் என்பது போன்ற தோற்றமுடைய படங்கள்). இப்போது பள்ளி மாணவ, மாணவிதான் காதலன் காதலி. இனி அடுத்த நிலையாக தொடக்கப்ப்ள்ளி மாணவனுக்கும், எல்கேஜி மாணவிக்குமான் (காதலி வயது குறைவாக இருக்கனுமில்லையா) காதல்தான்(!!!?)

     ஒரு புறம் சொந்த சாதிக்குள் 15 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது அநாகரீகம் என்றும், மைனர் பெண்ணைத் திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும், படிக்க விரும்பும் பெண்ணை கட்டாயத் திருமணம் செய்து வைக்கபோகும் போது காவல் துறை தலையிட்டு திருமணத்தை நிறுத்தியதை பாராட்டிக் கொண்டும், ஓம் பிரகாஸ் சௌதாலா ‘பாலியல் குற்றங்கள் குறைவதற்கு இளவயதிலேயே திருமணம் செய்து வைத்து விடவேண்டும்‘ என்று கூறியதை ஆவேசமாக்க் கண்டித்துக் கொண்டுமிருக்கும் நாம்தான் சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் பள்ளிக் காதல் கதைகளை சத்தமின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.