கடந்த ஒரு
மாத காலமாக உலக அளவில் சார்லி கோப்டேவிற்காகவும், இந்திய, தமிழக அளவில் மாதொரு
பாகன் என்ற நாவலை எழுதிய பெருமாள் முருகனுக்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்கான கனல்
பறக்கும் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது..
மாதொரு
பாகன் நாவல் பெண்களையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் விதமாக, எழுதப்பட்டுள்ளது என்பதுதான், பெருமாள் முருகனுக்கு
எதிரான போராட்டக்காரர்கள் கூறும் காரணம்.
ஆனால், பெருமாள் முருகனின் நாவல் இந்து மதத்தின் அடிப்படையை
விமர்சிக்கவில்லை. பெண்களை கொச்சைப்படுத்தியுள்ளது. அது நம் சமுதாயத்திற்கு ஒரு புதிய
விசயமேயில்லை…,,!!!!??. பழகிப் போன ஒன்று.!! எதிர்ப்பின் அடிப்படை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட
இடத்தில், ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் நடப்பதாக அந்த நாவல் நேரடியாக
சுட்டிக்காட்டியுள்ளது என்பதுதான்.
தேர்திருவிழா
என்ற கோயில் பண்டிகையோடு இக்கதை உள்ளதால் இந்து மதத்தையும் சேர்த்தே இழிவு படுத்துகிறது
என்று கூற வருகிறவர்களுக்கு இதுதான் பதில்.
இந்து மதத்தின் அடிப்படை பெண்களின் ஒழுக்கத்தினால் மட்டும் கட்டமைக்கப்பட்டதல்ல.
அந்த ஒழுக்கமும் காலத்திற்கு காலம் மாறுபட்டதுதான். இயற்கை பற்றிய புரிதல், அதனோடு இயைந்த வாழ்க்கை,
பிறப்பு இறப்பிற்கு பின்னால், முன்னால் மனிதனின்
நிலை என்ன, அறிவு என்றால் என்ன? அதை எப்படி
அடைவது?ஆன்ம விடுதலை, மறுபிறவி,
முக்தி, விதிப்பயன் என்று இன்னபிற அடிப்படைகளும்
உள்ளது இந்து மதத்திற்கு.
அதனால், பெருமாள் முருகன் இந்நாவலில்
இந்து மதத்தை இழிவாகச் சித்தரிக்க நினைத்து இப்படி எழுதியிருந்தாலும் சரி, அந்த இழிவிலிருந்து இந்து மதத்தைக் காப்பாற்ற போராடுகிறோம் என்று போராட்டக்காரர்கள்
கூறுவதும் சரி, இருதரப்பினருமே இந்து மதத்தை முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான்
பொருள்படும்,.
நாவலில்
பெண்கள் எங்கே கொச்சைபடுத்தப்பட்டிருக்கிறார்கள்? இந்து மதத்தை விடவா நாங்கள் பெண்களைக் கொச்சைப்படுத்தி
விட்டோம் என்று எதிர் கேள்வி கேட்டு, பல படைப்பாளிகள்,
பகுத்தறிவாளர்கள்.,கருத்துரிமை ஆதரவாளர்கள்
அதற்கு
பதிலடி கொடுக்கிறேன் பேர்வழி என்று பலர் இந்து மதத்தில், புராணத்தில் கூறப்படும் கதைகளை
சுட்டிக் காட்டி, அது எப்படி எப்படியெல்லாம் பெண்களை இழிவு படுத்துகிறது
என்பதை மிக மிக விவரமாக விளக்கி, தங்களது வக்கிரபுத்தியை வெளிப்படுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.
(இவர்கள் என்ன, மறைமுகமாக பெருமாள் முருகனும் இந்து மதத்தவர்தானே
அப்படித்தான் பெண்களைப் பற்றி கொச்சையாக எழுதுவார் என்று சொல்ல வருகிறார்களா????)
மனித குல
வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உள்ள வாழ்முறையை வெளிப்படுத்தும் , கருத்துக்களை பழங்கதைகளை
, இன்றைய சமூகத்திலிருந்து இவர்களுக்கு கிடைத்த அறிவு நிலையிலிருந்தும்,
பெண்ணைப் பற்றிய இவர்களது இன்றைய மதிப்பீடுகளிலிருந்தும், உணர்வு நிலையிருந்தும் புரிந்து கொண்டு அதைப் பச்சை பச்சையாகப் பேசும்,
எழுதும் இவர்களை எந்த வகையில் சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் முற்போக்குகள்
என்று சொல்வது.?
இந்த முற்போக்குகளுக்கு
பதில் சொல்வதாய் நினைத்து இன்றைய இலக்கியவாதிகளின் படைப்புகளில் காணப்படும், ”பெண்ணுக்கு மதிப்பு அளிக்கும்”(!!!!??)
விவரணைகளை மாதொருபாகன் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் எடுத்து காட்டினால்
என்ன ஆவது?
பழமைவாதியோ, புதுமைவாதியோ, முற்போக்கோ, பிற்போக்கோ பெண்களை கொச்சைப்படுத்துவது,
இழிவு படுத்துவது தவிர, இவர்களுக்கு வேறு திருப்பணி
எதுவும் இல்லை போலிருக்கிறது என்று, அப்பாவி குடிமக்கள் புரிந்து
கொண்டு, தங்கள் அறிவை செழுமைப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்!!!!.
ஏனென்றால், நாம், பல படைப்புகளைப் படிக்கும் பொழுது, நாம், நாகரீகமடைந்த மனிதப் பிறவிகளுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகளான,
கூச்சம், மானம், வெட்கம்,
சடு, சொரணை போன்ற உணர்வுகளை, ஒவ்வொன்றாய் உதிர்த்துவிட, உதிர்த்துவிடத்தான்,
அந்தப் படைப்பின் ”இலக்கியத் தரம்”(!!!)
நமக்கு புரிய ஆரம்பிக்கும், நமது இலக்கிய
”ஞானக் கண்”(!!!!!) அப்படியே பளிச்சென்று திறந்து
கொள்ளும்.
இப்படிச்
சொன்னால் நாம்
பழமைவாதிகள், பெண்ணடிமைச் சிந்தனை உள்ளவர்கள்
என்று கூறுவார்கள், பெண்களுக்கு அச்சம், மடம் வேண்டாம், ஆனால் வெட்கம், கூச்சம்,சுடு, சொரணை இருக்க வேண்டும்.
பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும்தான் வேண்டும். ஏனென்றால் இது மனிதப்பண்பு. ஆனால், தன் அதிகாரத்தை திமிரை காட்டும் மிதப்பில் ஆண் குலத்திற்கு அறிவும்,
நாகரீக உணர்வும் மழுங்கிப் போய் வெட்கம், கூச்சம்
இல்லாத ஜந்துக்களாகிப் போனார்கள். அதிலும், இலக்கியவாதிகள், அறிவு ஜீவிகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமேயில்லை.
பெண்கள்
கொச்சைப்படுத்தப்படும் காரணத்திற்காக மட்டுமே போராடுவது என்றால் தினம் ஒரு போராட்டம்
நடத்தியே தீர வேண்டும். இலக்கியம், சினிமா, சிலைகள்,
விளம்பரங்கள், என்று எல்லாத் தளங்களிலும் பெண்கள் இழிவுபடுத்தப் படுகிறார்கள். அந்த வகையில் பல படைப்பாளிகள் கண்டனத்திற்கு
உரியவர்கள்தான். கணக்கெடுத்தால்
மிக நீளமான பட்டியலே உருவாகும்.
ஆனால், மாதொருபாகனில் பெண்கள் இழிவு
படுத்தப்பட்டதற்கு மட்டுமே போரடுகிறார்கள் என்றால்,,, காரணம்,
அந்நாவல் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் கலாச்சாரத்தை நேரடியாக விவரிக்கிறது,
அதில் அந்தச் சாதிப்பெண்கள் இழிவாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள்,
என்பதுதான்,,.
தமிழ் சமூகம்
சாதிகளுக்கு அப்பாற்ப்பட்ட சமூகம் அல்ல.
சாதியிலிருந்து வெளிவரவுமில்லை. இந்தப் படைப்பில்
கூறப்படும் விசயம் இலக்கிய
வாசிப்பாளர்களிடம் மட்டுமே இருந்திருந்தால் ஒரு பிரச்சினையுமே எழுந்திருக்காது.
அந்தச் சாதியினர் அந்த வாட்டார மக்கள் அனைவருக்கும் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.
அவர்களுக்கு
இது எரிச்சலை உண்டுபண்ணத்தான் செய்யும்.
இதுபோல ஒரு வழக்கம் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு உள்ளது என்று சொல்லும்
போது, அது மறைமுகமாக
இந்த வழக்கம் மற்ற சாதியினரிடம் இல்லை என்று பொருளாகிவிடுகிறது. சாதியின் அடிப்படையே சுயசாதிபெருமைதான்.
அதிலும்
கற்பு என்று வரும்போது, அது பெண் ணுக்கு மட்டுமே இருக்கவேண்டும்,,,,
அதிலும் தங்கள் இனப்பெண்ணுக்கு, தங்கள் சாதிப்பெண்ணுக்கு,
தங்கள் குடும்பப் பெண்ணுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று கருதுவது சாதாரண சாதிய சிந்தனையில்
ஊறிப்போன விசயம். அவர்கள் மத்தியில் இந்த நாவலின் சர்ச்சைக்குரிய
விசயம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதுதான் இந்த எதிர்ப்பின்
அடிப்படை.
இது
உண்மையுங்கூட,,,,நண்பனொருவரிடம் அந்த நாவலைப்
பற்றிக் கேட்டபோது, அந்தச் சாதிப் பெண்கள் எல்லாம் ஒழுக்கமானவர்கள்
இல்லை என்று மறைமுகமாகச் சொல்லித்தான் இருக்கிறார் என்று வாய் நிறையப் பல் தெரிய ஒரு
இளிப்பு இளித்தார். (பார்க்க கேவலமாய்…. ஓங்கி அறையலாம் போலத்தான் இருந்தது. அவரும் ஒரு அதி முரட்டு
இலக்கியவாதிதான்….அவர் கருத்தை, அவர் உணர்ந்ததை
அவர் வெளிப்படுத்துகிறார். கருத்துச் சுதந்திரம் இல்லையா??
பொறுமை காக்க வேண்டியிருக்கிறது.)
மனிதகுல
வரலாற்றில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை அடையும் முன்பு சமூகம் பல ஒழுக்க விதிகளை
ஒவ்வொரு காலத்திலும் வழக்கத்தில் வைத்திருந்தது. குழந்தையில்லாத தம்பதியினரில் மனைவி வேறு ஒரு
ஆணுடன் இணைந்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற வழக்கமும் முன்பு இருந்திருக்கிறது.
அது அப்போதைய ஒழுக்கம். அவ்வளவுதான். அதை இப்படித்தான் ஒரு சமூக ஆய்வாளர் புரிந்து கொள்ள வேண்டும். உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் ஆசிரியர் அவ்வாறு புரிந்து கொள்ளவில்லை என்பதை
நாவல் வெளிப்படுத்துகிறது.
பெருமாள்
முருகன், தான்
ஆய்வு செய்து தெரிந்து கொண்ட அறிவை, தகவலை மற்றவர்களும் அறிந்து
கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் அதை ஆய்வு நூலாக எழுதியிருக்கலாம். இந்தக் கருத்தை கையிலெடுத்துக் கொண்டு அதை நாவலாக்க முயற்சி செய்திருக்கிறார்.
அதனால் அது ஒரு நல்ல இலக்கியமாக பரிணமிக்கவில்லை. அந்தக் கதையில் உயிர்ப்பும் இல்லை, வாழ்வும் இல்லை.
ஒரு மசாலாப்படம் பார்ப்பது போன்ற செயற்கையான உணர்வைத்தான் கொடுக்கிறது.
நாவலின்
கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் குழந்தையில்லை. அவர்களின் மன உளைச்சலை
வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். கணவனுக்கு பிடிக்காவிட்டாலும்
குழந்தை வேண்டும் என்கிற காரணத்திற்காக அவனையும் மீறி தேர்திருவிழாவன்று அந்தச் சடங்கை
பயன் படுத்திக் கொள்கிறாள் கதாநாயகி.
அன்றைய
நாளில் விபச்சாரத்திற்கு ஆண்கள் தங்களிடம் வரவில்லை என்று விபச்சாரிகள் கவலைப்படுகிறார்களாம்.
அதோடு ’இன்னைக்கு எல்லாப் பெண்களுமே
விபச்சாரிகள்தான்’ என்று கேலி பேசிக் கொள்கிறார்களாம்.
இங்குதான்
ஆசிரியரின் படைப்புத்திறன் அப்படியே பீரிட்டு(!!!??) வெளிப்படுகிறது. குழந்தையில்லாத் தம்பதியினர் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள இது போன்றதொரு வழக்கம் இருந்திருக்கிறது. அதை அன்றைய சமூகம் அறுவருப்பாக விபச்சாரத்தனமாகப் பார்க்கவில்லை. ஆனால் அவ்வழக்கம் ஆசிரியரால் விபச்சாரமாக உணர்வளவில் உள்வாங்கப் பட்டிருக்கிறது.
அது தான் நாவலில் வெளிப்பட்டிருக்கிறது.
விபச்சாரிகள்
தங்கள் உடம்பை பணத்திற்கு விற்கிறார்கள்…
நாவலின் கதாநாயகி குழந்தைக்காக மட்டுமே ஒருவனைத் தேடிச்செல்கிறாள்.
இது இரண்டையும் சமப் படுத்திக் காட்டுவதில் அப்படியென்ன பரம படைப்பு
திருப்தி ஆசிரியருக்கு.
ஏனென்றால். இலக்கிய அறிஜீவிகள்,
முற்போக்குகள், சனநாயகவாதிகள், அரசியல் அறிவுஜீவிகள் என அனைவருக்கும், விபச்சாரம் என்கிற
அமைப்பு ரொம்ப பிடிக்கும். விபச்சாரத்தை எதிர்த்து இவர்கள் வாய்
திறக்கமாட்டார்கள். அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று வேறு
கூறுவார்கள். அப்படி பெண்களை, பெண்விடுதலையைப்
பாதுகாக்கிறார்களாம்.!!! விபச்சாரிகளாகவே எல்லாப் பெண்களும் இருந்தால் இவர்களுக்கு
வாழ்க்கை எளிதாக, சுமையற்றதாக, பொறுப்பற்று
சுதந்திரமாக இருக்கும் என்பது இவர்களது நம்பிக்கை,
விருப்பம்.
இதற்காக
பெருமாள் முருகனுக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கலாம்.மன்னிப்பு கோரச் சொல்லலாம். பக்கங்களை நீக்கச் சொல்லலாம்.
ஆனால் இதற்கான
எதிர்ப்பு ஒரு எழுத்தாளனை ’இனிமேல் எழுதவே மாட்டேன்’ என்று எழுதித் தர நிர்பந்திக்குமளவிற்கு செல்லத் தேவையில்லை.
இந்தச் செயல் கருத்துச்சுதந்திரத்தை குழிதோண்டிப் புதைக்கும் அராஜக நடவடிக்கைதான்.
ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து கருத்துச் சுதந்திரத்திற்காக போராட வேண்டிய
நேரத்தில் மௌனம் காப்பது சமூக வளர்ச்சியை பின்னோக்கித்தான்
இழுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமேயில்லை.
ஆனால், அதையொட்டி,இங்கு பெருமாள் முருகனின் பிரச்சினையை ஊடகங்கள் பெரிது படுத்திய அளவிற்கு இரண்டு
தலித் எழுத்தாளர்களுக்கு நேர்ந்த நெருக்கடியை ஊடகங்கள் பெரிது படுத்தவில்லை….
இலக்கிய அறிவுஜீவிகள் குரல் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் வெளிப்படுகிறது.
(புதுக்கோட்டை மாவட்டம் கரம்பைக் குடியைச் சேர்ந்தவர் துரை குணா,
அவர் எழுதிய நாவல் ’ஊரார் வரைந்த ஓவியம்,”,
அதே மாவட்டம், கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் ம.மு.கண்ணன், கருவாட்டு ரத்தம் என்பது
அவரது படைப்பின் பெயர்.)
தலித் அல்லாத
ஒரு எழுத்தாளருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு மட்டுமே பெருத்த ஆதரவு இருக்கிறது. தலித் எழுத்தாளர்களுக்கு
ஆதரவு இல்லை என்பதை வெளிப்படுத்தும் ஆதங்கமாகவே இதை புரிந்து கொள்ள முடிகிறது.
என்னைப்
பொறுத்தவரை, அந்த
எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளிவரவில்லை..பரந்துபட்ட
சர்ச்சையை உருவாக்கவில்லை. ஊடகங்கள் உள்நுழையவில்லை, அந்த எழுத்தாளர்களிடம் இனிமேல் நாங்கள் எழுதப் போவதேயில்லை என்று பேச்சு
வார்த்தையின் போது நிர்பந்தித்து எழுதி வாங்கப் படவுமில்லை என்பதும் கூட காரணமாக இருக்கலாம்..
சொல்லப்போனால்
, பெருமாள் முருகன்
எழுதுவதை நிறுத்திக் கொள்வதாகச் சொன்ன பிறகு கூட அவருக்கு மிகப் பெரிய ஆதரவு கிளம்பவில்லை
என்பது தான் உண்மை. மிகமிக மெதுவாகவே ஆதரவுக் குரல்கள் வெளிவருகின்றன.
காரணம், பெருமாள் முருகனின் நாவலை வெளியிட்ட பதிப்பகத்தின்
சாதி அதற்கு தடையாக இருந்திருக்கலாம். பெருமாள் முருகனின் சாதியும்
கூட தடையாக இருந்திருக்கலாம்.
மேலும், அவர் எழுதுவதையே கைவிடுவதாக
முடிவு எடுத்திருக்கத் தேவையில்லை,மிக மோசமான பின்வாங்கல் என்றுதான்
ஒரு தரப்பு விமர்சிக்கிறது. இவரெல்லாம் எதற்கு எழுத வந்தார் என்று
கேலி செய்கிறார்கள்.
படைப்பாளிக்கு
பத்துக் கொம்பு தலையில் முளைத்திருந்தாலும்
(!!!???), சாதி சமத்துவத்தை விரும்புகிறவாராக இருந்தாலும், அவர் ஏதோ ஒரு சாதியில்தான் பிறந்து
தொலைக்க வேண்டும்..அந்த அடையாளத்தோடுதான் வாழ்ந்து தொலைக்க வேண்டும்.
சொந்தச் சாதியை விமர்சித்ததற்காகத சொந்த சாதிக்குள்ளும் எதிர்ப்பு இருக்கும்,.
பார்ப்பான், பார்ப்பான் என்று தூற்றப்படுகிற மகாகவி பாரதியார் இறந்த
போது அவரது இறுதிச் சடங்கிற்கு வந்த அவரது சொந்தக்காரப் பார்ப்பனர்கள் எத்தனைபேர் என்பதை
வரலாறு அறியும். அதற்கு காரணம் அவர் தனது சொந்த வாழ்வில்,
தன் சாதியின் சில கலாச்சாரங்களைக் கேள்விக்குள்ளாக்கினார், அவற்றை மீறினார் என்பதால்தான்.
சரியோ..,தவறோ சொந்தச் சாதியை விமர்சிப்பவர்களை,
எதிர்ப்பவர்களை நாம் கலகக்காரர்களாகத்தான் பார்க்கமுடியும். அந்த அடிப்படையில் சுய சாதி விமர்சனம் என்பது, சாதி சமத்துவத்திற்கான
முதற்படியாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.சொந்த சாதியை,
அதன் பெருமைகளைக் கட்டிக்காப்பாற்றிக் கொண்டு, மற்ற சாதியின் அடக்குமுறைகளை மட்டுமே எதிர்த்துப் போராடுவதுதான், சமூக நீதி, சாதி ஒழிப்பு, முற்போக்குச்
சிந்தனை என்று தட்டையாகக் கருதுவதின் வெளிப்பாடுதான் இது.
தலித் அல்லாத
ஒரு எழுத்தாளர் நெருக்கடிக்கு ஆளாகி,
அவருக்கு ஆதரவு கிளம்பும்போதுதான், இவர்களுக்கு
இரண்டு தலித் எழுத்தாளர்கள் நெருக்கடிக்கு ஆளாகிய செய்தியை பரவலாக்க வேண்டும் என்ற
எண்ணம் உருவாவதும், செயல்படுவதும் என்ன வகைப் பட்டது?
இதற்கும், மற்ற சாதி பெண்கள்,
அல்லது பொதுவில் பெண்கள் கொச்சைப் படுத்தப்படும் போதும், மற்ற மதத்தினரின் உணர்வுகள் புண்படுத்தப்படும் போதும் அமைதி காத்துவிட்டு,
தங்கள் சாதிப் பெண்கள், தங்கள் மதம் என்று வரும்
போது மட்டும் போராடும் இந்த சாதாரணர்களின் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம்?
இவ்வாறு போராடுபவர்கள் பழமைவாதிகளாம், சாதி வெறியர்களாம்,
அடிப்படைவாதிகளாம், பிற்போக்குவாதிகளாம்,
மாக்களாம்….
.
ஆனால் அவர்கள்
மட்டும் சமூக அக்கறை கொண்ட போராளிகளாம்.
மாதொரு
பாகனுக்கு எதிரப்பு கிளம்பிய போது அவருக்கு,
மற்ற எழுத்தாளர்கள், சனநாயகவாதிகள், சாதிவெறிக்கு எதிரானவர்கள் போன்றோரிடமிருந்து ஆதரவும், ‘இவர்கள் இருக்கிறார்கள் நமக்கு’ என்ற ஆத்ம பலமும்,
பாதுகாப்பு உணர்வும் இருந்திருந்தால்
’அவர் எழுதுவதையே நிறுத்திக் கொள்வதாய்’ ஏன் கூறப் போகிறார். மன்னிப்பு கோரியதோடும், பக்கங்களை திருத்த ஒப்புக் கொண்டதோடும் கூட நிறுத்தியிருப்பாரே.
முகநூலில், ட்விட்டரில் லட்சக் கணக்கில்
ஆதரவு இருந்தாலும்,போராட்டங்கள் நடத்தினாலும், ஏன் ஐ.நா, சபையிலிருந்து பான் கீ
மூனே பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், அவருக்கு
எந்த நன்மையும் விளையப் போவதில்லை. அவர் வசிப்பிடத்தில் நிம்மதியாக
வாழ வழி செய்ய வேண்டும். அதுதான் முக்கியம். அதற்கு நாம், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,
சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதானே கோரிக்கை வைக்க முடியும்.வேறென்ன
செய்ய முடியும்?
இவை எல்லாமே
கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க நாம் போராடுகிறோம் என்பதற்கான,
வெறுமனே ஒரு அடையாள அளவிலான போராட்டங்களாக, ஆதரவுகளாக
மட்டுமே குறைந்து விட வாய்ப்பிருக்கிறது. போராடி ஒன்றும் ஆகப்போவதில்லை
என்பதற்காக ஒன்றுமே செய்யாமல் விட்டு விடவேண்டும் என்பதல்ல இதன் பொருள். போராட்டங்கள் வெறுமே ஒரு அடையாளத்திற்காகவும், மன திருப்திக்கானதாக
மட்டும் சுருங்கி விடக் கூடாது என்பதே இங்கு சொல்ல வரும் விசயம்.
கருத்துச் சுதந்திரப் போராளிகள்,
ஒரு படைப்பாளி இது போன்றதொரு
இக்கட்டான நெருக்கடிக்கு ஆளாக்கப்படும்போது, அந்தப் படைப்பாளியை.
சாதி, மத, இன, பால் பேதம் பாராது எவ்வாறு பாதுகாக்க வேண்டும், அதற்கு
என்ன செய்ய வேண்டும் என்பதை நடைமுறை சார்ந்து, படைப்பாளியின்
வாழ்நிலை சார்ந்து இன்னும் துல்லியமாக தெளிவாக்கிக் கொள்ள வேண்டிய நேரமிது என்பதே இங்கு
கணக்கில் கொள்ள வேண்டிய விசயம்.
இந்தப்
பிரச்சினை சார்லி கோப்டே கேலிச் சித்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது
சற்றே வீரியம் குறைவானது.
பிரஞ்சு
தலைநகர் பாரிஸிலிருந்து வெளியாகும்,
வார கார்ட்டூன் பத்திரிகைதான் சார்லி கோப்டே. அந்தப்
பத்திரிகையில் நபிகளைப்
பற்றிய கேலிச்சித்திரங்கள் நிறையவே வெளிவந்துள்ளன. அதோடு அவரை
தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் கேலிச்சித்திரமாக வரைந்துள்ளனர்.
இதே காரணத்திற்காக
ஏற்கனவே 2011 ல் ஒரு முறை இந்த அலுவலகத்தில்
பெட்ரோல் குண்டு வீசித்தாக்கியுள்ளனர். இந்த முறை (ஜனவரி 7, 2015) ஆயுதந்தாங்கிய இருவர் அந்த பத்திரிகை
அலுவலகத்தில் புகுந்து 11 பேரைக் கொன்றுள்ளனர். அதற்கு,யேமன் நாட்டு அல் கொய்தா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இது கண்டிக்கத்தக்கது. அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் இது மட்டுமே கண்டிக்கப் பட வேண்டிய விசயமில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமான அந்த கேலிச் சித்திரத்தை வரைந்த, சார்லி கோப்டே பத்திரிகையும் கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று.
ஏனென்றால்
நகைச்சுவை , கேலி
என்பது வெறும் கேலி மட்டுமே அல்ல. அது தனக்குள் சில விசயங்களை
உட்பொதிந்துதான் வைத்துள்ளது.அதற்குள்ளும்,வர்க்கம், சாதி,
இனம், மொழி, பால் என் அதிகார
வேற்றுமைகள், ஏற்றதாழ்வுகள் இருக்கும். ஏனென்றால், இதே ஏற்றதாழ்வும், அதிகாரமும்,
அடக்குமுறையும், வஞ்சமும் உள்ள சமூகத்தைப் பிரதிபலிக்கும்
மனிதர்களின் மூளைக்குள்ளிருந்தும், மனதுக்குள்ளிருந்தும் தான்
இந்த நகைச்சுவைகள் உருவாகின்றன. ஒரு வானவில் போல இந்த சமூகத்திற்கும்,
நம் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டு சட்டென்று தோன்றி மறையும்,
விசயமல்ல கேலிகளும் நகைச்சுவையும். இவற்றையும்,
ஒரு சமுதாயத்தின் நிலையை வெளிக்காட்டும் கண்ணாடி என்று கூடச் சொல்ல்லாம்.
அதிகாரத்திற்கெதிரான
தங்களது எதிர்ப்புகளை நேரடியாக வெளிப்படுத்த இயலாத பட்சத்தில் அதைக்கேலியாக நகைச்சுவையாக, மறைமுகமாக வெளிப்படுவதை நமது
பழமொழிகள், கதைகள் பலவற்றில் காணலாம். ஆனால்,
அதிகாரத்திலுள்ளோருக்கு
தங்களது விருப்பத்தை நேரடியாக கூற, மற்றவர்கள்
மீது திணிக்க அதிகாரம் உள்ளதால் இந்த அவசியம் அவர்களுக்கு இல்லை.
அதனால்,கேலியும் நகைச்சுவையும் பல
சமயங்களில், அதிகாரத்திற்கு எதிரானதாகவே இருக்கும்.
ஆனால், தங்களை
சமத்துவ விரும்பிகளைப் போலவும், சனநாயகவாதிகளைப் போலவும் காட்டிக்
கொண்டே தங்களது ஆதிக்கத்தை, அதிகாரத்தை நிறுவ விரும்பும் போதுதான்
இது போன்ற சிக்கல்களே வருகின்றன. மேற்குலகம் கீழை நாடுகள் மீது அந்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, மொழி இவற்றின் மீது கட்டவிழ்த்துவிடும் அதிகார
அடக்குமுறைகள் இவ்வகைப்பட்டதே.
ஆசிய நாட்டு
மதங்கள், கலாச்சாரம்
எல்லாம் காட்டுமிராண்டி நிலையிலேயே இருப்பது போலவும், இந்த பூமிப்
பந்தில் அவர்கள்தான் கலாச்சாரத்தின், நாகரீகத்தின் உச்ச பச்ச
வடிவம் போலவும் கருத வைப்பதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாகரீகம், காட்டுமிராண்டித்தனம் என்பதை இவர்கள் எப்படி,
எதை அளவு கோலாக வைத்துத் தீர்மானித்தார்கள்? அவ்வாறு
தீர்மானிக்க வரையறுக்க இவர்கள் யார்? இவர்களுக்கு அந்த அதிகாரத்தை
யார் வழங்கியது? என்ற கேள்விகளை நாம் எழுப்ப வேண்டிய அவசியம்
இருக்கிறது.
ஒரு மதத்தினரின்
பழக்கவழக்கத்தை கேலி செய்வதை,
சக மதத்தினரை சம்மாக மதிக்கத் தெரியாத அநாகரீகப் பண்பாட்டை நாகரீகம் என்று சொல்ல வருகிறார்கள்.
அதற்கு கருத்துச் சுதந்திரம் என்ற ஒரு அரசியல் கேடயம் வேறு.
தன்னைத்தானே
கேலி செய்து கொள்வதும், கேலிச் சித்திரமாய் வரைந்து அதை ரசித்துக் கொள்வது என்பதையும் பற்றி இங்கு
பேச்சில்லை. நான் உன்னைக் கேலி செய்வேன், கேலிக்குரிய பொருளாக மாற்றுவேன், உனது உணர்வுகளை புண்படுத்துவேன்
அதை ரசிக்க வேண்டும், சிரிக்கத்தான் வேண்டும் என்று கூறுவதும்,
எதிர்ப்புக் கிளம்பும் போது, அதற்கும் ஒரு படி
மேலே போய் இவர்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லை என்பதும் அராஜகம், திமிர்,
அதிகாரம் போன்றவற்றின் வெளிப்பாடன்றி வேறெதுவுமில்லை.
சிலுவையில்
அறையப்பட்ட இயேசுவை கிறித்தவர்கள் வணங்குவது போல, அம்மனை, காளியை,
நடனமாடும் சிவனை வணங்குவதைப் போல, நபிகளை எந்த
உருவத்திற்குள்ளும் அடக்கிவிடாமல் உருவமற்றவராக வணங்குவது அவர்களது மதத்தின் அடிப்படை.
அந்த மதம்
உருவமற்ற வழிபாட்டை பின்பற்றுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அது குறித்த விமர்சனத்தை அந்த மதத்தை பின்பற்றுபவர்கள்
முன் வைக்க அதற்குள் இடம் இருக்கிறது. இல்லாவிட்டாலும் அதை போராடிப்
பெறுவார்கள். அது அம்மதத்தைச் சார்ந்தவர்களின் பிரச்சினை.
அதற்குள் மற்றவர்கள் மூக்கை நுழைப்பது சனநாயகமோ, கருத்துரிமையோ, மதச்சார்பின்மையோ அல்ல.
இவ்வாறு
ஒருமதத்தினரின் அடிப்படை வழிபாட்டு உணர்வு புண்படுத்தப்படுவதை, உருவ வழிபாடு செய்யும் சாதாரண
மக்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் கூட பரவாயில்லை. அறிவுஜீவிகளால் கூட புரிந்து கொள்ள
முடியாதது வருந்தத் தக்கதுதான். நகைச்சுவையை, நகைச்சுவையாக மட்டும் புரிந்து
கொண்டு, அதை பார்த்து, ரசித்துச் சிரித்து விட்டுப் போக வேண்டியதுதானே என்று இந்த அறிவுப் பெருமகனார்களும்
கருத்துக் கூறியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
நபிகளின்
உருவத்தை நகைச்சுவையாக கேலியாக சித்தரித்து விட்டார்கள் , உயர்வாக சித்தரித்து விட்டார்கள்
என்பது மட்டுமல்ல இங்கு பிரச்சினை. அவரை உருவமாக வரைந்துள்ளனர்
என்பதே இங்கு பிரச்சினைக்குரியதுதான்.
அவரை ஒரு உருவத்திற்குள் வரையறுப்பது என்பதே அம்மதத்தின் அடிப்படையை விமர்சித்து,
கேலி செய்வது என்றுதான் பொருள்படும்.
ஒரு மதத்தை
விமர்சிக்க வேண்டுமானால் முதலில் அந்த மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும், அப்பொழுது மட்டுமே அம்மதத்தின்
அடிப்படைத் தத்துவமென்ன, அதிலுள்ள குறைகள் என்ன என்பது புரியும்.
ஏனெனில் மதம் என்பது வாழ்முறையோடு, உணர்வுகளோடு சம்மந்தப்பட்டது. வெறுமே புத்தகத்தில் படித்து புரிந்து, உணர முடியாதது. பல மேற்கத்திய அறிஞர்கள் அவர்களது அறிவு நிலையில் இருந்து, ஆசிய நாட்டு மதங்களை ஆய்வு செய்து, அதை விமர்சித்து தங்களது
கருத்துக்களை கக்கிவிட்டுச் செல்கிறார்கள். அதுதான் சரியானது
என்று நாம் நம்புகிறோம்.
ஒரு கிறிஸ்தவருக்கு இந்து மதத்தின்,
இஸ்லாமிய மதத்தின், சீக்கிய மதத்தின் அடிப்படை
தெரியாது, அதை உணர்வுத் தளத்தில் இருந்து புரிந்து கொள்ள முடியாது.
தெரியாத ஒன்றைப் பற்றி அறிவாளிபோல் விமர்சிக்கிறேன் பேர்வழி என்று,
எதையாவது உளறி சக மதத்தினரை அவர்களது உணர்வைப் புண்படுத்துவதற்கு கருத்துச்
சுதந்திரம் என்ற ஆயுதத்தை பிரயோகிப்பதை, அநீதியானது, தங்கள் அதிகாரத் திமிரை வெளிப்படுத்துவது என்றுதான் சொல்ல முடியும்.
உலகிற்கே
சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம், சனநாயகம் போன்ற வற்றை போதித்த ஒரு நாட்டில்
ஒரு கேலிச் சித்திரம் வரையக்கூட சுதந்திரமில்லையா- அதற்கு எதிர்வினையாக
உயிரை எடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கலாம். நியாயமான
கேள்விதான். ஆனால் அதே பாரிஸில் ஹிட்லரின் இனப்படுகொலையை பற்றிப்
பேசுவது குற்றமாகக் கருதப்படுகிறதே. இந்த விசயத்தில் எங்கே ஒளிந்து
கொண்டது அந்நாட்டின் அதிதீவிரக் கருத்துச் சுதந்திரம்?
சகிப்புத்தன்மை
வேண்டாமா… ஒரு சிறிய கேலிச்சித்திரத்திற்கு பதிலடியாக
ஆயுதத்தாக்குதலா…. என்ற சனநாயக ஒப்பாரிகள் காதை பிளக்கிறது. முதல் விசயம், ஒரு மதத்தினரின் உணர்வைப் புண்படுத்துவது என்பதை, வெறுமே
சாதாரண விசயந்தான் என்று, இந்த சனநாயக, கருத்துக் காவலர்கள் தீர்மானிக்க கூடாது.
ஒரு நிகழ்வின்
காரணத்தை மறந்து விட்டு,அதனால் ஏற்பட்ட விளைவைப் பற்றி மட்டுமே நீண்ட வியாக்கியானம் செய்கிறோம்.
சார்லி கோப்டே விவகாரத்திலும் நாம் அப்படித்தான் நடந்து கொள்கிறோம்,
உணர்வுகளில் நிகழ்த்தப்படும்
வன்முறையை நாம் காரணம்.என்றே புரிந்து கொள்வதில்லை. ஆனால் அதன் விளைவான உயிர்பலியை மட்டுமே குற்றம் என்று கண்டிக்கிறோம்,
விமர்சிக்கிறோம்.
ஏனென்றால், உயிர்கள் கொல்லப்பட்டதுதான் நம் கண்களுக்கு
பளிச்செனத் தெரிகிறது. அதனால் அதைநாம் குற்றம் என்கிறோம்.
உணர்வை, உணர்ச்சியை
சீண்டிப் பார்ப்பது, கேலி செய்வது, அவமானப்
படுத்துவது சட்டத்தின் முன் நிரூபிக்க பட முடியாதது என்பதால் அதைக் குற்றம் என்றே முதலில்
வரையறுப்பது இல்லை.அப்படி அது குற்றம் என நிரூபிக்கப்பட்டாலும்
அக்குற்றத்திற்கு தண்டனை இல்லை, தண்டனையே இருந்தாலும் அது குறைவுதான்.
ஏனெனில் மனக்காயங்களுக்கும் வேதனைகளுக்கும் நாம் அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை.
மேலும், ஒரு
செயலுக்கான காரணம் சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கலாம். ஆனால் அதன்
விளைவு அந்த அளவிற்குள்தான் இருக்க வேண்டும்
என்று எந்தக் கட்டாயமுமில்லை. சிறு காரணத்தின் விளைவு சிறியதாவும்
இருக்கலாம்… மிகமிகப் பெரியதாகவும் இருக்கலாம். இது இயற்கையின் விதி.
மனிதஉயிர்
என்பது உச்ச பட்ச மதிப்பு வாய்ந்ததாகவும், உயிரை எடுப்பது என்பது உச்ச பட்ச அநீதியாகவும் கருதப்படுவது மிக மிகச் சரியானது.
ஆனால் மானத்தின் முன்,
தேசநலனின் முன்பு, தான் சார்ந்த கொள்கையின் முன்பு
தன் சொந்த உயிர்கூட துச்சமானது என்பதை மனித
குல வரலாறு நிரூபித்து வந்திருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
சனநாயக
சக்திகள், பகுத்தறிவாளர்கள்.
முற்போக்காளர்கள் எல்லாம் மத உணர்வுக்கு வக்காலத்து வாங்குவதாக கருதலாம்.
மதம் என்றவுடனே அது முழுக்க முழுக்க அறிவுக்குப் பொருந்தாத, சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பதற்காக மட்டுமே உருவான ஒன்றாகப் புரிந்து கொள்ளும் ஒரு தவறான பார்வை
நமக்குள் இருக்கிறது. கேடு விளைவிப்பதற்கெனவே தோன்றிய ஒரு அமைப்பு
முறை நீண்ட காலமாக சமூகத்தில் இயங்க முடியாது… நடைமுறையில் இருக்க
முடியாது. என்பது வரலாற்றின் விதி.
உண்மையில் மதம் என்பது ஒரு சிந்தனாமுறை,வாழ்முறை..வாழ்விற்கான அடித்தளம். சமூக பந்தம். ஒரு தனிமனிதன் இந்த சமூகத்துடன் தன்னை பிணைத்துக்
கொள்வதற்கான உணர்வு ரீதியான கருவி. மதம் இல்லாமல் அவனால் இந்த
சமூகத்துடன் உரையாட முடியாது.
மதத்தை அவர்களிடமிருந்து பிடுங்கிவிட்டால் அவர்களது வாழ்க்கை எவ்விதப் பிடிப்பும் அற்றதாகி விடும்.
விரக்தி நிறைந்ததாக மாறிவிடும், இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான்,
மார்க்ஸ் மதத்தை ” ஒடுக்கப்பட்ட இதயத்தின் பெருமூச்சு. ஆன்மாவற்ற இதயத்தின்
ஆன்மா” என்று கூறுகிறார். இந்த அடிப்படையில்தான்
மதத்தின் மீதான விமர்சனம் அமைய வேண்டும். சக மதங்களை அணுக வேண்டும்.
சமூக வளர்ச்சியில், ஆதிக்கத்திற்கு, அதிகாரத்திற்கு எதிராக தங்கள் கருத்துக்களைக் கூட வெளியிட முடியாத காலத்தில்
தங்கள் கருத்தை வெளியிட, எதிர்ப்புகளை பதிவு செய்ய வழிவகுத்ததுதான்
பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம், படைப்புச்
சுதந்திரம் எல்லாமே என்பது உண்மைதான். அரசியல் தளத்தில் சனநாயகத்தின்
மிக முக்கியமான ஓரம்சந்தான் , சமூக சமத்துவத்திற்கான அடிப்படை இதுதான், என்பதும் உண்மைதான்.
ஆனால், எல்லா விசயங்களிலும் நிகழ்வதைப்
போலவே, இந்தச் சுதந்திரங்கள் எல்லாம் ஆளுவோரின் பகடைக்காயாகவும்,
அவர்களுக்கு வேறுவிதமாகவும் தான் பயன் படுத்தப்படுகிறது என்கிற உண்மையையும் நாம் மறந்து விடக்கூடாது.
கருத்துச்
சுதந்திரம், மனித
குல வரலாற்றில், பலர் இரத்தம் சிந்திப்போராடிப் பெற்றதுதான்.
ஆனால், அதேநேரம் கருத்துச் சுதந்திரம் என்பது
பரம்பொருள் அல்ல, சர்வவல்லமை வாய்ந்ததுமல்ல, எல்லாக் காலத்திற்கும், எல்லா இடத்திற்கும் முற்று முழுதாகப்
பொருந்தும் விதியுமல்ல. கேள்விகளுக்கும் குற்றங்குறைகளுக்கும்
அப்பாற்பட்டதுமல்ல,
ஆனால் பலர்
இப்படித்தான் கருத்துச் சுதந்திரம்,
படைப்புச் சுதந்திரம் என்பதை புரிந்து கொள்கின்றனர். அவர்கள் படைப்பாளிகளாவும், கருத்துச் சொல்பவர்களாகவும்
உருவெடுக்கும் போது தங்களை சர்வ வல்லமை வாய்ந்தவர்களாக எந்தக் கட்டுக்களுக்கும் அடங்காதவர்களாக
கருதி கொள்கின்றனர். சக மனிதர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காதவர்களாய்
மாறி விடுகிறார்கள். அவர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது
என்பதை மறந்து விடுகிறார்கள்.
கருத்துச்
சுதந்திரம் எந்த கட்டுபாடுகளுக்கும் அடங்காததாய் இருக்கும் பட்சத்தில், அதற்கான எதிர்வினைகளும் கட்டுக்கடங்காததாய்
அமைந்துவிட வாய்ப்பிருக்கிறது.
அதிலும்
மனித வாழ்க்கைக்கு ஆதாரமான உணர்வுகளோடு கருத்துச் சுதந்திரம்
விளையாடும்போதும், மோதிப் பார்க்கும் போதும் அதற்கான
எதிர்வினைகளாக எது வேண்டுமானாலும் நடக்கலாம்… ஏனெனில், சில நேரங்களில் மனித உணர்வுகளும் எந்தக் கட்டுகளுக்கும்
அடங்காதவையாக இருக்கத்தானே செய்யும்.
கருத்துச்
சுதந்திரமாகட்டும், அதற்கான எதிர்வினைகளாகட்டும் இரண்டையுமே, பிறர் மீதான
ஆதிக்கத்தை அதிகாரத்தை பிரயோகிப்பதற்கான
கருவிகளாக கருதுவதுதான் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் காரணிகள்.
ஆனால் இவை
இரண்டும் சக மனிதர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பதாய், சமுதாய அறத்துடனும்,
அக்கறையுடனும், மனிதநேயத்துடனும், சனநாயகப் பண்புடனும் பயன்படுத்தப்படுமானால்,
அது சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்திராகாந்தி
அலங்காரம்.