Monday, October 30, 2017

முற்றம் பெருக்குதல்



விடாத முதுகு வலிகளை
 வாரித் தள்ளிவிடுகிறது துடைப்பம் மனதினுள்
இறுக மூடிய கண்கள்
ஆழ்துயிலில் மூழ்கியிருக்கும் வீட்டு முற்றம்
அதிகாலையில்
குட்டி மண் முகடுகள் துளிர்த்திருக்கும்

முந்தைய இரவின் மழை
மண்தரையை சற்றே
இளக்கியிருக்கலாம்
மண்புழுக்கள் அடியில்
கிளறியிருக்கும்
தூக்கம் கூட இல்லாமல்
ஓய்வின்றி உழைத்திருக்கலாம்
தங்கள் சின்னஞ்சிறு மண் வீடுகளைக்
கட்டுவதற்காய்

அவை இடித்துத் தள்ளப்பட்டிருக்கும்
சமமாக பரப்பி விடப் பட்டிருக்கும்
துடப்பம் விட்டுச் சென்ற
கைவிரல் போன்ற கோடுகளால்
துப்புரவு பெண்ணின்
குனிந்த பின்னடி வைப்புகளால் ஆன
காலை நடனத்திற்குப் பிறகு

துப்புரவு முடிந்தது
அதிகாலை வந்திறங்கியது
வெளிச்சம் பாய்ந்தது
வீட்டின் கண்கள் திறந்தன
கால் தடங்கள் இல்லை
உதிர்ந்த இலைகள் கூட இல்லை
எவ்வளவு சுத்தமாகி விட்டது!

செய்தித்தாள் வந்து சேர்ந்தது
அடியாழம் வரை சுத்தமாக்கப்பட்ட
இருள்
தயங்கி விழுந்தது மெல்ல கதவெதிரே

கிழிந்த ஆடையை சுத்தம் செய்து
கொண்டு எழுந்தாள்  
பேராவலுடன் பருகினாள் காபியை
கடைசி கசடுவரை

------ அனிதா தம்பி


(மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் ஜெ,தேவிகா)

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு  இந்திராகாந்தி அலங்காரம்,

Saturday, October 28, 2017

ஒன்றே ஒன்று

கும்மிருட்டு ஆரஞ்சுநிறச் சூரியன்
ஒன்றில்லாவிடில் மற்றதற்கு மதிப்பில்லை
அழகில்லை
இருட்டைக் கறுப்பாக்கி ஆரஞ்சை காவியாக்கி
பாவைக் கூத்து காட்டுகின்றன குழந்தைகளுக்கு
உணவு உறக்கம் விளையாட்டு பாடம் மறந்து
ஞான நிலையை எட்டுவதற்காய்
மஞ்சள் சிவப்பு நீலம் பச்சையெல்லாம்
கறுப்பால் உள்வாங்கப் படுகிறது அல்லது
காவியாய் நீர்த்து விட வேண்டும்
இடைப்பட்ட வண்ணங்களை குழந்தைகள்  
வா()ழ்வில் இங்கு இடமில்லை


இந்திராகாந்தி அலங்காரம்