Wednesday, June 15, 2011

துகள்

பால்வெளியின் நீள் வட்ட பாதையில்
கோள்களின் இயக்க விதிகளுக்கு அடங்காது
விலகி வந்த ஒரு துகள்
என் கையில் அகப்பட்டது.
அதை நான்
கருவாக்கி
பொருளாக்கி
உயிராகவும் மாற்றி விட்டேன்.
எனக்கான வட்ட பாதையை
சுழற்சியை,
சுழற்சியின் வேகத்தை,
சுயமாய் தீர்மானிக்கும் கர்வத்துடன்
நானே சுமந்து திரிகிறேன் புதிய உயிரை
யாரும் அறியாது.
என்னுள் இருக்கும் அதுவும்
புதிய பால்வெளியை,
வட்டப்பாதைகளை,
இயக்க விதிகளை
தேடிக் கொண்டே யிருக்கிறது
யுகயுகமாய்!

பன்றிகள்

முதன் முதலில் அதைச் சந்தித்த போது
அதன் தாய் என்னைத் தாக்க வந்தது.
‘பன்றிக்குட்டி அழகாய் இருக்கிறது
வீட்டிற்கு கொண்டு போகலாம்’
என்று அடம் பிடித்த தங்கையிடம்
‘அது மலத்தை தின்னும்’
எனக் கூறி மறுத்தேன்
மலத்தின் பொருள் அறியாது.
கல்லூரி பருவத்தில்
கால் வைக்க இடமின்றி
மலம் குவிந்து கிடந்ததாய்
உணர்ந்த போது மீண்டும்
பன்றிகளை நினைத்தேன்.
மூளைக்காய்ச்சலுக்கு காவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்
‘பன்றிகள் குளிப்பதற்காகவே சாக்கடையில்
இறங்குகின்றன’
‘மலம் என்பது மலம் மட்டுமல்ல’
‘மலத்தைத் தின்பது பன்றி மட்டுமல்ல’
என்றறிந்த போது
பன்றிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

கயமையின் நிழல்

கயமையின் நிழல்
அவனுடனேயே வாழ்வதை
அவனே அறிய
நேரமற்றிருந்தான்.
அவ்வப்போது அவன் கண்ணசைவிலும்
முகச்சுளிப்பிலும்
ஒவ்வொரு அடியிலும்
கைகுலுக்கல்களிலும் என
எல்லா நேரங்களிலும்
அவனை அது இம்சித்த காலம் மாறி
அவன் அதுவாகவும்
அது அவனாகவும்
மாறிய கணத்தில்
என் கண்களில் பட்டு விட்டது
அது அவனை விழுங்குமா?
அவன் அதைக் கொல்வானா?
என்று பதறும் நொடியில்
என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது
காலம்.

தொடரும் யுத்தம்

வானவில்
வெயிலோடு பெய்யும் மழை,
காலை நேர மூடுபனி,
சில் வண்டின் சத்தம்,
மென்தென்றல்,
பட்டாம்பூச்சி, பூக்கள்
நிறைந்த
உனக்கும் எனக்குமான புல்வெளியை
பறித்துக் கொண்டு,
உனக்கு
பட்டாம்பூச்சிகளின் சிறகில் ஆணி அடித்து
உள் உறுப்புகளை ஆராயும்
வரமளித்த வாழ்க்கை,
சதுரங்க விளையாட்டு மேடையை
பரிசளித்தது
எனக்கு.
அங்கு
சிப்பாய்கள் நேருக்கு நேராக மோதி மாண்டனர்
சில சமயம் யானைகள் சிப்பாய்களை நசுக்கின
குதிரைகள் யானைகளை கொன்றன
மிஞ்சிய அனைத்தையும்
சாணக்கிய பிஷப்புகள் விழுங்கினர்
சர்வ அதிகாரம் பெற்ற பிஷப்புகள் கூட
சாதுர்யம் இல்லாது மோதி அழிந்தனர்
ஆனால்
ராஜாவால் ராணியையும்
ராணியால் ராஜாவையும்
வீழ்த்தவே முடியாமல்
போரிட்டுக் கொண்டே இருக்கின்றனர்
வரலாறு அறிந்த காலம் முதல்.

பேசிக் கொண்டே இருக்கிறான்

அவன்
காலையில் கண்விழிக்கும் போதே
பேச ஆரம்பித்து விடுகிறான்
கழிப்பறையில் இருக்கும் போது பேசுகிறான்
பல்துலக்குகையில் பேசுகிறான்
செய்தித்தாள் வாசித்துக் கொண்டே பேசுகிறான்
தேனீர் அருந்திக் கொண்டே பேசுகிறான்
டிபன் சாப்பிட்டுக் கொண்டே பேசுகிறான்
மனைவியிடம் பேசுகிறான்
அலுவலகத்தில்
உயரதிகாரியிடம் பேசுகிறான்
கடைநிலை சிப்பந்தியிடம் பேசுகிறான்
டீக்கடையில் பேசுகிறான்
டாஸ்மாக் பாரில் பேசுகிறான்
தெருமுனையில் நின்று கொண்டு பேசுகிறான்
தெருவில் நடந்து கொண்டே பேசுகிறான்
செல்போனில் பேசுகிறான்
சினிமா பார்த்துக் கொண்டே பேசுகிறான்
எதிரியுடன் பேசுகிறான்
நண்பனுடன் பேசுகிறான்
முதியோரிடம் பேசுகிறான்
ஆண்களிடம் பெண்களிடம் பேசுகிறான்
என்ன பேசுகிறான்
எதற்குப் பேசுகிறான்
என்று உணர விரும்பாமல்
பேசிக் கொண்டே இருக்கிறான்
அவர்கள்
கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்