Thursday, September 19, 2013

பெண்-பலாத்காரம்-குற்றம்-தண்டனை : டெல்லி தீர்ப்பை முன்வைத்து சில விவாதங்கள்


டெல்லி பாலியல் வன்முறைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு நாம் எதிர்பார்த்தது தான். தேர்தல் நேரமில்லையா? இது நாடு முழுக்க ஏன் உலகம் முழுக்க ஊடகங்களால் கொண்டு செல்லப்பட்ட பிரச்சினை என்பதால், தங்கள் நீதி பரிபாலனம் செவ்வனே நடக்கிறது என்பதையும், நாங்கள் பெண்களுக்கு பிரச்சினை என்றால் எவ்வளவு கடுமையாக துரிதமாக நீதி வழங்குகிறோம் என்பதையும் வெளி உலகுக்கு காட்ட வேண்டாமா?

அதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு கண்துடைப்பு நீதி வழங்கியது போலவும் இருக்கும். இதன் சூட்சுமம் தெரியாத அப்பாவி பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் ஓட்டையும் தக்க வைத்துக் கொள்வதாகவும் இருக்கும்.

அதுவும் போக அப்சல் குருவைப் போலவோ, அஜ்மல் கசாபைப் போலவோ நாளைக்கே இவர்களை, சொல்லாமல் கொள்ளாமல் தூக்கில் போடப்போவதில்லை இந்த அரசு. மேல்முறையீடு அது இது என்று இழுத்துக் கொண்டுதான் போகப் போகிறது. அது வரைக்கும் வச்சு சோறு போடப் போகிறார்கள்,

 இந்த தீர்ப்பு வந்த பிறகு மரணதண்டனைக்கு எதிரான குரலை மீண்டும் எழுப்புகிறார்கள்.. சிலர் வழக்கம் போல, “இந்த குற்றத்திற்கு அந்த நால்வர் மட்டும்தான் பொறுப்பா? இந்த சமூகம் சினிமா, ஆபாசம் குடும்பவளர்ப்பு இத்யாதி தான் காரணம்” என்று சமூக விஞ்ஞானப் பாடம் எடுக்கிறார்கள். எல்லாம் நியாயம்தான்.

ஆனால், இவர்கள் சாதாரணமாக மற்ற காலங்களில் ஆண்களைப் பாலியல் வன்முறை செய்ய தூண்டிய இந்தக் காரணங்களைப் பற்றி கவலை கொண்டார்களா?. போர்னா கிராபி, ஆபாசப் படம் குழந்தைகள் போர்னோகிராபி போன்றவை தடைசெய்யப் பட வேண்டும் என்றும்.. ஆபாசப் போஸ்டர்கள், பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் விளம்பரங்கள் போன்றவற்றிற்கு எதிராகவும் போராடினார்களா??

அப்பொழுதெல்லாம் “இந்த பெண்விடுதலை பேசும் பெண்களெல்லாம் இதை எதிர்த்துப் போராடக் கூடாதா ”என்று கேள்வி கேட்டுவிட்டு ஒதுங்கி விடுவார்கள். அப்பொழுது அது பெண்கள் பிரச்சினை,, இவர்களுக்கு சம்மந்தமில்லாதது. ஆனால் அதன் விளைவாய் ஒரு ஆணுக்கு தண்டனை அளிக்கப் படும் போது அது சமூகப் பிரச்சினை…. ஏனெனில் இவர்களுக்கெல்லாம் சமூகம் என்றாலே ஆண்களுக்கானதுதானே??? நன்றாகத்தான் இருக்கிறது இவர்களது நேர்மையான “சமூக விஞ்ஞானப்” பார்வை…..

பெண்களை மனிதர்களாகப் பாவித்து நடத்த வேண்டும் என்று கற்றுக் கொடுக்க, அதை சமூகத்தில் நடைமுறைப்படுத்த என்ன செய்தார்கள்? அதை எங்கிருந்து தொடங்குவது என்ற நடைமுறைத் திட்டமாவது இருக்கிறதா? அதை செயல் படுத்தினார்களா? ஒன்றும் கிடையாது.

இந்த அரசும், சமூகமும், கலாச்சாரமும் குடிகுடியை கெடுக்கும் என்று சொல்லிக் கொண்டே சாராய வியாபாரம் செய்து, ஆபாசச் சீரழிவுக் கலாச்சாரத்தை ஒரு புறம் வளர்த்து அதன் படி சிந்திக்கவும், நடந்து கொள்ளவும், கற்றுக் கொடுத்து விடும். அதன் பிறகு... அதன் காரணமாக நிகழும் சமூக வன்முறைகளுக்கு சட்டப்படி கடுந்தண்டனை அளிக்கும்.

,,,,அந்த அரசுக்கும் “இந்த நால்வர் மட்டுமா குற்றவாளிகள்? இந்த சமூக அமைப்பே காரணம்” என்று வாதிட மட்டும் செய்பவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாய் தெரியவில்லை.

ஒருத்தர் அசரம் சாமியாருக்கு இது போன்ற தண்டனை அளிப்பார்களா என்று கேட்கிறார். பணம் படைத்த வர்க்கத்திற்கு சாதகமாக சட்டம், சமூகம் இருக்கிறது என்ற வர்க்கப் பார்வையின் அடிப்படையில் கேட்கிறார்களாம். ஏழைக்கு நீதி கிடைக்காது என்பது எல்லாரும் அறிந்ததுதான். இங்கு ஒடுக்கப்பட்ட ஏழை என்பது பாலின அடிப்படையில் பெண்ணாக இருக்கிறாள். இது கூட தெரிய மாட்டேனென்கிறதா இந்த வர்க்கப் பார்வையாளர்களுக்கு?

பாலியல் பலாத்காரம் செய்தவனைத் திருமணம் செய்து வைத்த, அல்லது வைப்பாட்டியாக இருக்க வைத்த, அல்லது பாதிக்கப் பட்ட பெண்ணை விபச்சாரியாக்கிய சமூகம்தான் இது. கேள்வி கேட்க ஆளில்லாத பெண்ணை வன்புணர்வு செய்து கொன்று தூக்கி போட்டுவிட்டு, போய்க்கொண்டே ,,,, இருக்கும் சமூகம்தான் இது.

இப்பொழுதுதான் பாலியல் வன்முறை என்பது சமூக அநீதி, அதுவும் எதிர்த்து போராட வேண்டிய சமூக அநீதி என்கிற அற உணர்வே இந்த சமூகத்திற்கு வந்துள்ளது.

அதுவும் டெல்லியில்தான்… தமிழகத்தில் இல்லை.
இந்த மாற்றத்தைகூட பொறுக்காமல் இதில் தங்கள் வர்க்கப் பார்வையை, சாதிப் பார்வையை, இனப் பற்றைத் திணிக்க வருகிறார்கள்.

எனில் ஒடுக்கப்பட்ட இனம், சாதி, வர்க்கத்தைச் சார்ந்தவன் பாலியல் வன்முறை செய்தால் பாவம் என்று விட்டு விட வேண்டும்… உளவியல் ஆலோசனை கொடுத்து அனுப்பி விட வேண்டும்,,, பணக்கார வர்க்கம் செய்தால் மட்டும் தண்டனை கொடுக்க வேண்டும். அப்படித்தானே?
பணம் படைத்தவன், பணமற்ற பரதேசி பிச்சைக்கார நாயி என்று எவரால் பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாலும் அது வன்முறையில்தான் அடங்கும், அது இந்த “சமூக விஞ்ஞானி“ களுக்குத் தெரியாது பாவம்.!!!

ஆளும் வர்க்கமும் இவ்வளவு நாளும் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறது.. தன் வர்க்கத்தினரை பாதுகாத்து பஞ்சை பராரிகளுக்கு சட்ட படி தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறது. உழைக்கும் பாட்டாளி வர்க்க, ஒடுக்கப்பட்ட இன, ஒடுக்கப் பட்ட சாதி ஆணைப் பாதுகாக்க இவர்கள் இருக்கிறார்கள்.

பாலியல் வன்முறை என்ற இந்தப் புள்ளியில் வர்க்கம், சாதி, இனம், மொழி எல்லாவற்றிற்கும் அப்பால் பெண் என்பவள் பெண்ணாக மட்டும் பார்க்கப் படுகிறாள். ஆண் என்பவன் வர்க்கம், சாதி, இன, மொழி என்கிற தகுதிகளுக்கு அப்பால் ஒரு ஆணாக மட்டும் இருக்கிறான்..

ஒண்ணுமே இல்லாத கீழ்நிலை ஆண்கூடத் தன் அதிகாரத்தை, வன்முறையை பெண்ணிடம் காட்டும் ஒரு யதார்த்தம் இருப்பதை ஏன் காண மறுக்கிறார்கள் இவர்கள்?
ஒடுக்கப்பட்ட வர்க்கம், ஒடுக்கப் பட்ட சாதி, ஒடுக்கப் பட்ட இனம், ஒடுக்கப் பட்ட மொழி இவற்றை ஏற்றுக் கொள்ளும் இவர்கள் ஒடுக்கப்பட்ட பாலினத்தின் முக்கியமான இந்தப் பிரச்சினைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? இதை எவ்வாறு அணுக வேண்டும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறார்களா?

ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை ஆண், இளைஞன், சிறுவன் யாராவது தங்களை பாலியல் வன்முறை செய்ய வந்தால் முதலில் கையைப் பிடித்து, அமர வைத்து ஆறுதலாய் நாலு வார்த்தை பேசி, பிறகு “இதெல்லாம் தப்புப்பா, இதற்கெல்லாம் நீ காரணமில்ல…. இந்தச் சமூகந்தான், என்று அறிவுரை கூறினால் நல்லது” என்று சொல்வார்கள் போலிருக்கிறதே? இல்லாவிட்டால் அவர்களது தேவையை நிறைவேற்றி விட்டு பிறகு, அந்த குற்றவாளிகள் மனந்திருந்தி வெட்கி தலைகுனியும் படி, இனிமேல் அவர்கள் அந்த தவறை செய்யாத அளவுக்கு அறிவுரை கூறுங்கள் என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது.

நிர்பயா தன்னை பாலியல் வன்முறை செய்ய வந்தவர்களிடம் அண்ணா என்று காலில் விழுந்திருக்க வேண்டும்,, எதிர்த்து சண்டையிட்டிருக்கக் கூடாது என்று சொன்ன சாமியாருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?.

அடுத்து, இது எங்கும் நடக்காததா? தினமும் நடந்து கொண்டிருக்கிறது.... என்ற அரிய கண்டுபிடிப்பை வேறு கூறுகிறார்கள்....தினம் நடந்தால் அதை அநீதி என்று புரிந்து, ஒரு கட்டத்தில் எதிர்த்துப் போராடக் கூடாது.... நிறுத்தக் கூடாது என்று எந்த மடையர்கள் சொன்னார்கள்??

சாதியும், சாதிய ஒடுக்குமுறையும் கூடத்தான் நம் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் குடிக்கு பழமையான ஒன்று!! அதைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு கொண்டாட வேண்டியதுதானே.. சிலர் இதற்கும், இல்லை சாதியை கண்டுபிடித்து எங்கள் தலையில் கட்டிவிட்டுப்போனது ஆரியர்கள் என்பார்கள்....இருக்கட்டும்! .ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழகிப் போனது தானே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே??? அதேபோல் சமூகந் தோன்றியதிலிருந்து ஏழை, பணக்காரன் என்கிற வர்க்க ஏற்றத்தாழ்வு இருந்து கொண்டுதானே இருக்கிறது என்றும் சொல்வார்கள்...ஒடுக்கப் பட்டவர்க்கத்திற்காக பாடுபடுபவர்கள் இது சமூக அமைப்பின் இயல்பு என்று விட்டு விட்டு போய் பொழப்புத் தலப்பை பார்க்க வேண்டியதுதானே----

இதுபோன்ற அநீதி எல்லாம் சமூகத்தில் இயல்பு, சகஜம் என்று சொல்கிறவர்கள் ஒன்று அரசியல் ஞான சூன்யங்களாக இருப்பார்கள் அல்லது ஆதிக்க வர்க்க, சாதி, இன த்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள்..

இங்கு பெண் மீதான பாலியல் வல்லுறவுக்கெதிரான போராட்டம், அதற்கான தண்டனை என்று வரும்போது மட்டும், இந்த பாலியல் வல்லுறவு என்பது தொன்று தொட்டு நீண்ட காலமாகவே இருப்பது தான் என்று சம்மந்தா சம்மந்தமின்றி, சமூக அக்கறையாளர்களும், சமூக மாற்றச் சிந்தனையாளர்களும் கூறுகிறார்களென்றால், இவர்களின் குரல் ஆதிக்கத்தின் குரல் தான். ஆண், பெண் சமத்துவத்திற்கான குரலே அல்ல...

மரணதண்டனையும், கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்ற தண்டனைகளும் கூட தொன்று தொட்டு வரலாற்றில் இருந்தது என்பதை இவர்களைப் போனறவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

சிலர், மரண தண்டனை நடைமுறையில் உள்ள நாடுகளில், குற்றங்கள் கூடிக் கொண்டுதான் இருக்கிறது குறையவில்லை என்கிறார்கள்.. இவர்கள் குற்றத்திற்கு தண்டனை கிடைக்கும் என்கிற மனிதர்களின் அச்ச உணர்வை குறைத்து மதிப்பிடுகிறார்கள். பல மனிதர்கள் தண்டனைக்கு பயந்து கட்டுப்படத்தான் செய்கிறார்கள் என்பதை வேண்டுமென்றே மறைக்கப் பார்க்கிறார்கள். மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் சரியானது. ஆனால் அதற்காக தப்பும் தவறுமாக உளறக் கூடாது.

இன்றைய சூழலில் திருடினால், கொலைசெய்தால் கைது, அடி, உதை, சிறை தண்டனை கிடையாது.,. அறிவுரை மட்டும் கூறி, விட்டுவிடுவார்கள் என்ற ஒரு நிலை இருக்கட்டும். எல்லாரும் என்ன செய்வோம்???

தண்டனை அதிகமானால் குற்றங்களும் அதிகமாகும் என்பது போல் சொல்கிறார்களே? அரசுக்கு எதிராக செய்யும் குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையானவை... அதன் விளைவாய் அரசுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டா இருக்கிறது.? அப்படிப் பார்த்தால், அரசாங்கத்திற்கெதிராய் இந்நேரம் புரட்சியே வெடித்திருக்குமே?
குற்றத்தைக் குறைக்க தண்டனை அளிக்கப்படுவதும் ஒரு வழிமுறைதான். ஆனால், அது மரண தண்டனையாக இருக்க வேண்டாம்... மரண தண்டனையை மறுப்பவர்கள், பாலியல் வல்லுறவுக் குற்றத்திற்கு உயர்ந்த பட்சத் தண்டனையாக என்ன அளிக்கலாம் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்.
.
என்னைப் பொறுத்த வரை மரணதண்டனை எந்தக் குற்றத்திற்கும் தீர்வாகாது, அது மனிதாபிமானமற்ற செயல்…அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மரண தண்டனையைப் போலவே, பாலியல் வல்லுறவும் மனிதாபிமானமற்ற செயல்தான்….. அதை நாகரீக சமூகம், மனிதாபிமானமுள்ள சமூகம் எவ்வாறு சரிசெய்யப் போகிறது? வெறுமே இந்த சமூக அமைப்பு, கலாச்சாரம்,,, அது இது என்ற நான்கைந்து சொற்களைக் காரணமாகச் சொல்லித் தப்பித்துக் கொள்வது தீர்வாகாது.

மாற்றத்திற்கு வழி சொல்லாமல், சமூக மாற்றத்திற்காக ஒரு துரும்பையும் தூக்கிப் போடாமல், பாலியல் வல்லுறவுக் குற்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் போதும், தண்டனைகள் வலுவாக்கப் படும் போதும் மட்டும் சமூகந்தான் காரணம், சமூகம் மாறணும், சமூகம் மாறணும் என்று, கூப்பாடு போடுகிறவர்கள் நம் சந்தேகத்திற்குரியவர்கள். இவர்கள் பாலியல் வல்லுறவை ஒரு குற்றமாகக் கருதுகிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.

பாலியல் வல்லுறவு குற்றம் செய்தவனாவது அறிவின்றி மிருகமாக இருக்கிறான் என்று புரிந்து கொள்ளலாம். அதை எதிர்த்துப் போராடும் போதும், தண்டனை அறிவிக்கப் படும் போதும், அந்த குற்றத்தின், கொடூரத்தை, அநீதியை மறைக்கும், குறைக்கும் வகையில், தங்கள் அறிவால், சப்பைக் கட்டு கட்டுகிற இவர்கள் பாலியல் வல்லுறவு குற்றம் செய்தவர்களுக்கு சற்றும் குறைவானவர்கள் அல்ல. அவர்களை விட ஒரு படி மேலே என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இந்தப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு என்று பார்த்தால், சந்தேகமேயின்றி தண்டனைகள் கடுமையானதாக மாற்றப் பட வேண்டும். நீண்ட காலத் தீர்வு என்ற அடிப்படையில் பள்ளி, கல்லூரி, பொது நிறுவனங்கள், குடும்பம் போன்றவை ஆணை சிங்கம், புலி என்றில்லாமல் மனிதப் பிறவியாக வளர்க்க வேண்டும். இலக்கியம், சினிமா போன்றவற்றில் காண்பிக்கப்படும் பெண் சித்திரங்கள் மாற்றப்பட வேண்டும்.
முதலில் காமம் என்பது அன்பின் பாற்பட்டது என்று சொல்லிக் கொடுக்கப் பட வேண்டும்.

Monday, August 19, 2013

மாணவப் பருவமும் காதலும்



பள்ளிப் பருவத்தில் காதலிப்பது போல் சினிமா எடுப்பது தவறா? அந்தக் காலத்தில் பால்ய விவாகம் நடக்கவில்லையா? அத்தை மகள்/ மகனை இவன்/இவள் உனக்குத்தான் என்று சொல்லி வளர்த்ததில்லையா? என்று கேட்கின்றனர் சில இயக்குனர்கள். இன்னும் சிலர் 16, 20 வயதில் காதல் வராதா? வரக் கூடாதா? இதிலெல்லாம் சட்டம் தலையிடுவது தனிநபர் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்குவது போன்றது என்று கூறுகிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும், பள்ளிப் பருவத்தில் காதலிப்பது போல் சினிமா எடுப்பது இந்த சமூக வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. அந்தக் காலத்தில்  நடந்த பால்ய விவாகம், பெரியவர்களின் விருப்பத்திற்காக பெண்ணை விட மிக அதிக வயதுள்ள தாய்மாமனுக்குத் திருமணம் செய்து கொடுப்பது எல்லாமே தவறுதான். யார் இல்லை என்றது? அது மடத்தனமான பண்பாடு என்று சொல்லித்தானே அதில்சிலவற்றை மாற்றியிருக்கிறோம். இன்னும் மாற்ற முயற்சிக்கிறோம்.

அதற்காக. பள்ளிச் சீருடை அணிந்து படிக்கச் செல்லும் மாணவ மாணவிகள் காதலிப்பதாக சினிமா எடுப்பதை எப்படி நியாயப் படுத்த முடியும்?

இன்று காதல் திருமணங்களுக்கு என்ன விதமான சமூக அங்கீகாரம் உள்ளது? அதுவும் படிக்கும் காலத்தில் ஏற்படும் காதல்களுக்கு? படிக்கும் ஒரு பெண் காதலித்தால் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு. இதில் பெண்கல்வி, பெண் தன் சுய சார்போடு வாழ்வதற்கான கூறுகள் எங்கிருக்கிறது? இந்தச் சமூகத்தில் அதற்கான சூழல் எங்கிருக்கிறது?

பத்தாவது, பதினோறாவது படிக்கிற பெண்ணைக் கட்டாயப் படுத்தி அவளது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைப்பது தவறானது, சட்டப் படி குற்றமானது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டுமாம்.
ஆனால், அறிவு முதிர்ச்சி இன்றி அதே இள வயதில் காதலித்தால் அது நியாயமானது, தனிநபர் சுதந்திரம். அதில் யாரும் தலையிடக்கூடாதாம். அந்த அளவிற்கு தனிநபர் சுதந்திரத்தின் பொருள் புரிந்த சனநாயக நாடல்ல இது. அப்படி எந்தப் பெண்ணும் வளர்க்கப்படுவதில்லை. இந்த வாதமெல்லாம் பெண்ணின் வாழ்க்கைக்கு, எதிர்காலத்திற்கு, குறிப்பாக உடம்பிற்கு கேடு விளைவிக்கக் கூடியதாகத்தான் அமையும்.

சிறு குழந்தையை கண்டிக்கக் கூடாது, செல்லமாய் சுதந்திரமாய் வளர்க்க வேண்டும் என்பதற்காக அதை தீயுடன் விளையாட விட முடியாது. அது போலத்தான் வாழ்வின் யதார்த்தப் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் அறிவும், மனப்பக்குவமும் இல்லாத மாணவ மாணவிகளை நெறிப் படுத்துவதில் தவறொன்றும் இல்லை.


பால்ய விவாகம் செய்து வைத்து பெண்ணைப் படிக்கவிடாது, குடும்பச்சுமைக்குள் அடக்கி வைப்பதற்கு சற்றும் குறைந்ததல்ல, இந்த பள்ளிக் கால காதலை நாம் ஊக்குவிப்பது என்பதே என் நிலைப்பாடு.

அந்தக் காலத்திலாவது பால்ய விவாகம், தாய்மாமனைத் திருமணம் செய்து வைப்பது போன்றவற்றிற்கு அன்றைய சமூகத்தில் அனுமதி இருந்தது, அது ஒரு வாழ்முறையாக இருந்தது. சமூக, சட்ட அங்கீகாரம் இருந்தது. கூட்டுக் குடும்பம், அதனுள் அதிகாரப் படிநிலை இருந்தாலும் அவர்களுக்கு பெருமளவில் பொறுப்புகள் இல்லாத தன்மை இருந்தது. இன்று பலரால் ஜீரணிக்க  முடியாத அமைப்பாக, கூட்டுக் குடும்ப முறை இருந்தாலும் அவர்களது வாழ்விற்கு குறைந்த பட்ச உத்திரவாதமும் பாதுகாப்பும் அதில் இருந்தது. 

ஆனால் காதல் திருமணங்களுக்கு அதுவும் 14,18,20 வயது காதல்களுக்கு சட்ட அங்கீகாரம் இருக்கிறதா? சட்ட அங்கீகாரத்தை விடுங்கள், சமூக அங்கீகாரம் எந்த அளவு உள்ளது. இதில் சாதிதான் குறுக்கே நின்று சமூக அங்கீகாரத்தை அளிக்க மறுக்கிறது என்று சொல்ல வரலாம்.

பெண்ணைப் பொறுத்த வரை சொந்தச் சாதியானாலும் சரி, வேறு சாதியானாலும் சரி இள வயதில், குறிப்பாக படித்துப் பொருளீட்ட தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டிய வயதில், திருமணம் செய்யும் பெண் தன் கணவன், குழந்தை பேணல் என்ற வட்டத்திற்குள்தான் சிக்கியாக வேண்டும். பெண் பல உடலியல் இடர்பாடுகளைச் சந்தித்தே தீரவேண்டும். இது தவிர அவர்களது அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு வேறு அவர்களுக்கு உள்ளது.

மாணவப் பருவ காதல் கைகூட திருமணம் செய்ய வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது கருக்கலைப்பு செய்ய வேண்டும் அல்லது குழந்தை உருவாகாது தடுப்பதற்கானவற்றைச் செய்ய வேண்டும்.
இந்த ஆணாதிக்க சமூகம் கருத்தடையை பெண்ணுக்கு மட்டும் சுமத்தி வைத்துள்ளது, அதுவும், வெறும் பிள்ளை பெறும் இயந்திரம் என்கிற பார்வையில், ஒரு இயந்திரத்தின் உற்பத்தியை நிறுத்துவது போன்று இயந்திர கதியான தீர்வுகளை வைத்துள்ளது. அதனால் ஏற்படும் உடல் சார்ந்த பின் விளைவுகள்,.  என்றைக்கும் அவளது தன்னம்பிக்கையை வளர்க்கப் போவதில்லை எந்த ஆணுக்கும், அவர்கள் முற்போக்கோ, பிற்போக்கா அதுபற்றிக் கவலை இல்லை. பெண்ணின் உடல் நிலையிலிருந்து, மனநிலையிலிருந்து  இந்தச் சிக்கலைப் பார்த்துப் புரிந்து கொள்ளுமளவிற்கு அவர்களுக்கு அறிவும் இல்லை, உணர்வும் இல்லை.

மனதும் சிந்தனையும் இதில் உழலும் போது அவளது மூளை படிப்பிற்கும், தனது பொருளாதார சுயச் சார்பிற்காகவும் எப்படி சிந்திக்கும். இதன் மூலம் எப்படி பெண்கல்வி, பொருளாதாரச் சுதந்திரம், பெண் சமத்துவத்தை அடைய முடியும் என்று நினைக்கிறார்கள்?  இல்லை, காதலுக்கும், பெண்ணுக்கும், பெண் சமத்துவத்துக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று நினைக்கிறார்களா?

இதற்கும் சில பிற்போக்கான அறிவியலுக்கு அறிவிற்குப் புறம்பான காரணங்களை சொல்ல வருவார்கள். இளவயதில் குழந்தை பெற்றுக் கொள்வது எளிது என்பார்கள். இளவயதல்ல மனதளவில் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். பக்குவம் இருக்க வேண்டும். ஒரு குழந்தையைப் பேணிக்காக்க வேண்டிய அறிவும் தெளிவும் இருக்க வேண்டும். எதுவும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமாக உடலும், மனமும இருக்கும் வயதில் தங்களது சக்தியை முழுமுழுக்க உடல் சார்ந்த காமத்தேவைகளுக்கு மட்டும் பயன் படுத்தி விட்டு, பின் அதன் விளைவுகளை வாழ்நாள் முழுதும் சந்தித்து வாழ்வது மட்டுமே வாழ்க்கையாகி விடும்.
இது போன்று, பல காதல் திருமணங்கள் வெற்றிகரமான வாழ்வாக மாறுவதற்கு வழக்கம் போல அதில் பெண்களின் தியாகங்கள் தான் உரமாக இடப்படுகின்றன.

இன்று திருமணமான பெண்கள் இயல்பாக பள்ளிக்குச் சென்று படிக்க முடியுமா? இல்லை, ஆண்கள்தான் இயல்பாகச் செல்ல முடியுமா?


இன்று காதலுக்காக பரிந்து பேசுபவர்கள் அதற்கான சட்ட சமூக அங்கீகாரங்களைப் பெறுவதற்கு நடைமுறையில் என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள்? சினிமாக்காரர்கள் என்றுமே தீர்வு சொல்ல மாட்டார்கள். அவர்களை விட்டுவிடுவோம்.

காதலை எவ்வித விமர்சனமும் இன்றி கண்மூடித்தனமாக ஆதரிக்கும், அரசியல் கட்சிகள், அறிவுஜீவிகள், சாதி ஒழிப்பாளர்கள் என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள்.

Friday, August 9, 2013

கல்லானாலும் காதலன்



பல முக்கியமான அரசியல் தலைவர்களை உருவாக்கிய பெருமை வாய்ந்த, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்திற்குள் இரண்டு நாள் முன்பு, ஒரு மாணவன் சக மாணவியை கத்தியால் தாக்கி விட்டு தானும் விசம் தின்று இறந்து போனான். அந்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

வழக்கம் போல காதல் பிரச்சினைதான், அவனது தோழியான அந்த மாணவி அவனை மதிக்கவில்லையாம், எரிச்சலூட்டினாளாம்.வெறுமே தன்னைப் பயன்படுத்திக் கொண்டதாகவும், ஏமாற்றி விட்டதாகவும் அவன் உணர்ந்திருக்கிறான். அதற்காக துப்பாக்கி, கோடாரி, கத்தி, விசம் சகிதமாய் வந்து தன் தோழியை குத்திக் கொன்று விட்டு, தானும் செத்துப் போக முடிவு செய்து வந்துள்ளான்.

சென்ற தலைமுறை ஆணாதிக்க வாதிகளுக்கு பெண் தாய், தெய்வம் என்றால் இன்றை இளைஞர்களுக்கு தேவதை + தாய். பார்க்க நல்ல தேவதைபோல், சினிமாக் கதாநாயகிகள் போல் இருக்க வேண்டும். தன்னைச் சாராமல் சுயமாக சம்பாதிக்கத் தெரிந்த, அறிவாளியாக இருக்க வேண்டும். அதே நேரம், வழக்கம் போல் தான் என்ன செய்தாலும் பொறுத்து, மன்னித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவமுள்ள தாயாகவும் இருக்க வேண்டும்.

என்ன தவறு செய்தாலும், தாய் தன் குழந்தையை ஏற்றுக் கொள்வாள், ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் இந்த சமூகக் கட்டமைப்பில். அது அந்த வயது கொடுக்கும் முதிர்ச்சி.

ஆனால் காதலி, அவனைப் போலவே ஒரே வகுப்பில் படிக்க வந்தவள். இவனையொத்த சக வயதுள்ளவள். ஆனால், அவளிடத்தில் தாயை யொத்த பக்குவத்தை எதிர்பார்க்கின்றனர். தன்னைப் போன்ற சக மனுசிதான் தன் காதலியும், அவளுக்கான விருப்பு, வெறுப்புகள் இருக்கும். அவளிடமும் நிறை, குறைகள் இருக்கும். அவளும் தன்னைப் போலவும், தன் மற்ற ஆண் நண்பர்களைப் போலவும் சரியோ, தவறோ இழைக்க வாய்ப்பிருக்கிறது, என்றெல்லாம் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை. இந்தக் காதலுறவில் ஆண்கள், தன் காதலியை மனைவியாக கருதி அடக்க நினைக்கிறார்கள்,.

ஆனால் இன்று வெளியில் படிப்பிற்காகவும், வேலைக்காகவும் வந்திருக்கும் இளம் பெண்கள், தங்கள் அம்மாவைப் போன்ற ஒரு அடிமை வாழ்க்கை வாழ்ந்து விடக் கூடாது என்பதற்காக, படிப்பையும், வேலையையும் தேர்ந்தெடுக்கிறவர்கள். அவர்கள் எச்சரிக்கையுடன்தான் இருப்பார்கள். அல்லது திருமணம், குடும்ப வாழ்க்கைக்குள் நுழையும் முன் தனக்கான முழு சுதந்திரத்தை அனுபவிக்க நினைப்பார்கள்.

இவர்களிடம் நம் புதிய தலைமுறை இளைஞர்கள் தங்களது ஆண் அதிகாரத்தை காட்டும் போது, அதற்கு எதிர்வினை புரியும் பெண்ணின் நடவடிக்கை இவர்களுக்கு ஈகோவாகத் தெரிகிறது.
அவள், ஆண்களைப் போலவே பல விசயங்களில் நடந்து கொள்வதற்கான சூழலை இன்றைய கல்வி முறையும் வேலைவாய்ப்புகளும் அவளுக்கு அளித்திருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாமல், அதற்கான அறிவில்லாமல் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாவதன் விளைவு இது.

நம் சமூகத்தில் பெண் ஒரு புது விசயத்தைச் சொன்னாலே அதை ஈகோவாகவும், திமிராகவும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள். தனிப்பட்ட காதலுறவில் இந்தச் சிந்தனை தன் வேலையைச் செய்கிறது.

அடிப்படையில், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்பது மாறி, கல்லானாலும் காதலனாகப் போகிறவன், புல்லானாலும புருசன் ஆகப் போகிறவன் என்று இருக்கச் சொல்கிறார்கள். இன்றைய தலைமுறைப் பெண்கள் அதற்கு தயாரில்லை. அதை எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்புக்கு, இந்த ஆணுலகம் அவர்களைத் தண்டித்துக் கொண்டிருக்கிறது.

எந்தப் பெண்ணும், தன காதல் தோல்விக்காக காதலனை தாக்கியதில்லை. தன்னைத்தான் மாய்த்துக் கொள்வாள். அப்படி இறந்து போகிற பெண்களை இந்த சமூகம் ‘காதலுக்காக உயிரைவிட்ட பெண், அவளது காதல் உண்மையானது‘ என்றெல்லாம் பாராட்ட மாட்டார்கள். ‘,,,,,,எவன்கிட்டயோ ஏமாந்துட்டு வந்துட்டா,,,,,,‘ என்றுதான் சொல்வார்கள்.

காதல் தோல்வியை கடந்து வாழும் பெண்களை இவர்கள் அணுகும் விதத்திற்கு நயன்தாராதான் உதாரணம். அவர்கள் பொதுவாழ்வில், எந்தத் துறையில் சாதித்தாலும் நம் மக்கள் அதை மட்டும் மறக்காமல் மனதில் வைத்திருப்பார்கள்.

கடந்த இரண்டு மூன்று மாதங்களில், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனவர்களில் 2,3 பெண்களும்தான் இறந்திருக்கிறார்கள். ஆனால் ஊடகங்கள் காதல் தோல்வியால் இறந்து போன, மன உளைச்சலுக்குள்ளான இளைஞர்கள் என்றுதான் கண்ணீர் வடிக்கிறது. (இளைஞர்கள் என்ற சொல்லை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாக, நாம் எப்பொழுதுமே பயன் படுத்துவதில்லை.)

நிலவும் காதல் பல்லவிகளெல்லாம் நிலவும் ஆணாதிக்க, சாதிய, வர்க்க பின் புலத்தில் உருவானவை. ஆண், பெண்ணை தன் சக தோழியாக, மனுசியாக மதித்து நடத்தும் சமூகம் வரும் வரை, இது போன்ற காதல் கூத்துக்கள், கொடுமைகள், கொலைகள், தற்கொலைகள் எல்லாம் தொடர்கதையாகத் தான் இருக்கும்.

சமூகத்தின் அனைத்து பிற்போக்கு விசயங்களையும் எதிர்க்கிறவர்கள், காதலுக்குள் ஊடுறுவியிருக்கும் பிற்போக்கு தன்மைகளை கேள்விக்குள்ளாக்காமல், சரிப்படுத்த முயற்சிக்காமல், சினிமாவில் காட்டப்படும் புல்லரிப்புக் காதல்களை அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்வதும், அதை வரவேற்பதும் இது போன்ற பல உயிரிழப்புகளைத்தான் ஏற்படுத்தும்.

Wednesday, June 5, 2013

’நாங்கள் கேட்பதெல்லாம் எங்களையும் மனிதர்களாக மதியுங்கள் என்பதுதான்’ ஜானு, ஆதிவாசிப் பெண் போராளி



சாதாரண மக்களைப் பொறுத்தவரை ஆதிவாசிகள் நாகரீக வளர்ச்சி இல்லாதவர்கள், அறிவு குறைந்தவர்கள், கரடுமுரடானவர்கள். தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை, அரைகுறை உடையுடன் கூட்டமாய் நடனமாடுபவர்கள், மேற்கத்தியர்களுக்கோ மனிதர்களைப் பலி கொடுப்பவர்கள், மனித மாமிசம் தின்பவர்கள்.

இந்த வரையறைகளுக்கெல்லாம ஒரு படி மேலே போய், கேரள அரசு, விலங்குகளுக்குக் கொடுக்கும் மரியாதையைக் கூட அவர்களுக்குக் கொடுக்கவில்லை. கேரள அரசு முத்தங்காவில் ஆதிவாசிகள் சிரமப்பட்டு பண்படுத்திய காட்டு நிலத்திலிருந்து அவர்களை அடித்து வெளியேற்றிவிட்டு, விலங்குகளுக்கு சரணாலயம் அமைத்துள்ளது. அதற்கு மாற்றாக நிலம் தருவதாகக் கூட உறுதியளிக்கவில்லை அரசு. மண்ணின் பூர்வகுடிகளை நிலமற்றவர்களாக்கி பட்டினியால் இறக்கவிட்டது நாகரீகசமூகம். வழக்கம்போல நாகரீகஅரசியல் கட்சிகள் தங்கள் திருகல் வேலைகளை காண்பித்து இப்பிரச்சினையை வெளியுலகிற்கு காட்டாமல் மறைத்து விட்டனர்.

ஜானுவின் தலைமையில் இரண்டு வருடம் முன்பு திருவனந்தபுரத்தில் அரசு செயலகத்தின் முன்னால் குடிசைகளை எழுப்பிக் குடியேறி, அதில் பல சிரமங்களுடன் 47 நாட்கள் போராடினர். அதன்பிறகே கேரள ஏ.கே.ஆண்டனி அரசு நிலம் தருவதாக உத்திரவாதம் அளித்து, குடிசைகளை நீக்க வைத்துள்ளது. அந்த உத்திரவாதமும் வழக்கம்போல ஏமாற்றுதான் என்று உணர்ந்து, 2003 ஜனவரி 3ம் தேதியன்று முத்தங்கா வனப்பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட குடிசைகளை போட்டு குடியேறினர். தங்கள் எல்லைக்குள் வனத்துறையினர் நுழையக்கூடாது என எச்சரித்தனர். அதை மீறி உள்ளே நுழைந்த ஒரு காவலரையும் வனத்துறை ஊழியரையும் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசை நிர்பந்தித்தனர்.

ஆனால் பிப்ரவரி 19 அன்று போலீஸ் பெரும்படையுடன் நுழைந்து எதிரிநாட்டு ராணுவத்தினரைத் தாக்குவதுபோல ஆதிவாசிகளைத் தாக்கி, வனப்பகுதியைக் கைப்பற்றியது அரசு. இதில் ஒரு ஆதிவாசியும் ஒரு காவலரும் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. போராட்டத் தலைவர் ஜானு, ஆதிவாசி கோத்ர மகாசன அமைப்பின் வழிகாட்டியான கீதானந்தன் மற்றும் பலர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். ஜானு இப்போது பிணையில் வெளிவந்துள்ளார்.

கயமை நிறைந்த நாகரீக அரசியல் கட்சிகளின் தலைமையிலன்றி, பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவரே தலைமையேற்று நடத்திய வீரமிக்க போராட்டத்தால்  ஆதிவாசிகளின் 20 வருட காலப் பிரச்சினைகள், கோரிக்கைகள் வெளியுலகிற்குத் தெரிய வந்துள்ளது. வனப்பகுதியை ஆதிவாசிகளிடமிருந்து கையகப்படுத்தி உள்ளதற்கு அரசும், சுற்றுச் சூழலியலாளர்களும் சொல்லும் காரணம், இயற்கை வளங்களை, வனங்களை, விலங்குகளைப் பாதுகாக்கிறோம் என்பதுதான். நம் மக்களும் சரிதானே, ஆதிவாசிகளிடம் காட்டை விட்டால் அழித்து மொட்டையாக்கிவிடுவார்களே (!! ) என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? அரசு இதுவரை எந்த அளவிற்கு இயற்கை வளங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறது? இயற்கை வளங்களைப் பாதுகாக்க நிறையச் சட்டங்கள், திட்டங்கள் அமுலில் இருக்கத்தான் செய்கினறன.

ஆனால் அவற்றிற்குப் புறம்பாக அணைகள் கட்டுவது, மரங்களை வெட்டுவது, மலைகளைப் பிளப்பது, சுரங்கங்கள் தோண்டுவது, போக்குவரத்துச் சாலைகளை அமைப்பது என்று எதிர்கால அபாயங்கள் பற்றிய எந்த அறிவோ, கவலையோ இல்லாமல் லாப நோக்கோடு இயற்கை வளங்களை அழித்து தீர்த்து விட்டார்கள். கடும் புயல், வெயில், வறட்சி, நிலநடுக்கம் எல்லாமே இந்த நாகரீக அரசுகள் இயற்கை வளங்களைப் பாதுகாத்த இலட்சணத்தின் விளைவுகள்தான். இன்று கொஞ்சநஞ்சம் மிஞ்சி நிற்கும் வனம், வன உயிரிகள், இயற்கை வளங்கள் போன்றவற்றிற்காக நாம் ஆதிவாசிகளுக்குத்தான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆதிவாசிகள் காடுகளோடு உடலாலும், மனதாலும, உணர்வாலும் பின்னிப் பிணைந்தவர்கள். காடுகள் அவர்களது வாழ்வில் ஓர் அங்கம். மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, மண்வளம், பருவநிலை மாற்றம் குறித்த அவர்களுடைய அறிவின் முன், நம் நாகரீக இயற்கை வளம் காக்கும்பல்கலைக்கழக அறிவுக் கொழுந்துகள் வாய்மூடி நிற்க வேண்டிய நிலைதான் இன்றும் இருக்கிறது. தாவர வகை பிரிப்புத்துறையில்  பட்டம் பெற்றவர்களை விட ஆதிவாசி மூலிகை மருத்துவர்களின் தாவரவியல் ஞானம் அசாதாரணமானது. நாம் பேசும் நாகரீக மொழியில் பிறமொழிக் கலப்பின்றி பல தாவரங்களின் பெயர்களை சொல்ல முடிவதில்லை. ஆனால் அவர்களின் மொழி, நூற்றுக்கணக்கான தாவரங்களை பிறமொழிக் கலப்பின்றி ஒற்றைச் சொல்லில் குறிப்பிடுமளவிற்கு  இயற்கை வளமிக்கதாய்  இருக்கிறது. நாகரீகச் சமூகம் பல நல்ல தாவர மரவகைகளை அழித்ததோடு மொழியின் இயற்கை குறித்த சொல்லாடல்களையும் அழித்து விட்டது. ஆதிவாசிகள் ஒரு போதும் மருந்துக்காகப் பயன்படும் மூலிகைகளை வேரோடு அழிப்பதில்லை. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மரங்களை வேரோடு வெட்டி எறிந்து விட்டு, மழையே பொழிய முடியாத நிலைக்கு இயற்கையை ஆளாக்கி அதன் பின் மழைநீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யத் தெரியாது ஆதிவாசிகளுக்கு.

 சரியாகச் சொன்னால், இயற்கையின் மொழியைப் புரிந்து  கொள்ளும் திறனும் அறிவும் இவர்களுக்கு மட்டுமே உண்டு. இயற்கையின் செழிப்பான காலங்களையும், பற்றாக்குறையையும், அவர்களால் அறிந்து கொள்ள முடியும். அதற்கேற்றாற்போல் வாழவும் தெரியும். அறிவு வளர்ச்சி பெற்ற மனிதர்களைப்போல் பூமியை இரண்டாய் பிளக்குமளவிற்கு பல்லாயிரம் அடிகளில் ஆழ்துளைக் கிணறு தோண்டி பூமியின் நீரைக் கடைசிச் சொட்டு வரை உறிஞ்சத் தெரியாது. உயிரினச் சுழற்சிப் பெருக்கம் என்றெல்லாம் படிக்காவிட்டாலும், கர்ப்பமாய் இருக்கும் விலங்குகளை ஒரு போதும் வேட்டையாட மாட்டார்கள். இயற்கை வளப் பாதுகாப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருப்பவர்களை விட, சாதாரண ஆதிவாசி ஒருவர் அனைத்து இன பறவைகளின் முட்டையிட்டு அடைகாக்கும் காலம், விதம், தன் குஞ்சுகளுக்கு உணவூட்டி பாதுகாத்து வளர்க்கு விதம் பற்றிய நிறைய தகவல்களை தன் அனுபவத்தின் மூலம் கற்று வைத்திருப்பார்.

விவசாயம் செய்யும் போது சூழல் பாதுகாப்பு (!!) மண்வளம் என்று நாம் இன்று புதிதாய் கண்டு பிடித்து சொல்லிக் கொண்டிருப்பவற்றை அவர்கள் செவ்வனே கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


ஆதிவாசிகள் காடுகளைப் பயன்படுத்துவது பொருளை உற்பத்தி செய்து, சந்தையில் விற்று, பொருளீட்டி, காங்ரீட் கட்டிடங்களில் ஏ.சி., இண்டாநெட் என வாழ்வதற்காக அல்ல, தங்கள் வாழ்வின்  அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும்தான். விலங்குகளும் உயிர்வாழ்வதற்கு மட்டும்தான் இயற்கையைப் பயன் படுத்துகின்றன. ஆனால் இயற்கையைப் புரிந்துகொண்ட அறிவின் மூலம், அதைப் பாதுகாக்கும் பொறுப்புடன் செயல்படும்போது மட்டுமே மனிதன் விலங்குகளிலிருந்து வேறுபடுகிறான். இயற்கையின் முன் எந்த உயிரினங்களுக்கும் இல்லாத, இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்பு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அந்தப் பொறுப்பை உணர்ந்து வாழும் ஆதிவாசிகளே உண்மையில் மனிதர்கள். அவர்கள்தான் வரலாற்று ரீதியாக இயற்கை வளங்களின் பாதுகாவலர்கள். அவர்களிடம்தான் இயற்கை வளங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து ஆதிவாசிகளிடம் அவர்களின் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த வரலாற்று உரிமையை மறுக்கும் அரசுக்கு எதிராக, ஆதிவாசிகள் நடத்தும் போராட்டங்களுக்குத் துணை நிற்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

(புதிய தடம் ஜுலை-செப்டம்பர் 2003 இதழில் இந்திரா என்ற பெயரில் வெளியான எனது கட்டுரை)

Sunday, February 3, 2013

மதச்சார்பின்மையென்ற பெயரில் ‘விஸ்வரூபம்‘ எடுக்கும் படைப்புச் சுதந்திரம்

கமலின் ரசிகர்கள் ‘ஆப்கான் தீவிரவாதிகள் பற்றி கதையெடுத்தால் இங்குள்ள முஸ்லீம்கள் ஏன் கொதிக்கிறார்கள்‘ என்று ஒரு அறிவுப் பூர்வமான கேள்வியை எழுப்புகிறார்கள்.  விஸ்வரூபத்தில் ஆப்கான் தீவிரவாதிகளை அவர்களுடைய நாட்டோடு ம்ட்டும் இணைத்து கதையெடுக்கப் பட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்த்த் தீவிரவாதி தமிழ்நாட்டிலுள்ள மதுரைக்கும் கோவைக்கும் வந்து தங்கியிருந்த போது தமிழ் கற்றுக் கொண்டதாக கூறும் காட்சி உள்ளதாம்.

இந்த வசனம், காட்சி இங்குள்ள இஸ்லாமியர்களையும் ஆப்கான் தீவிரவாதிகளுடன் நேரடித் தொடர்புடையவர்களாகப் பார்க்கும் எண்ணத்தை திரைப்படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தாதா? ஏற்கனவே அர்ஜுன், விஜய காந்த் வகையறாக்களின் தேசபக்திக்கு இஸ்லாமியர்கள் பயன் படுத்தப்பட்டார்கள். துப்பாக்கி பட்த்தில் சாதாரண இஸ்லாமியரைக்கூட ஸ்லீப்பர் செல் என்று சந்தேகிக்க வைத்துவிடும் அபாயம் இருந்ததைப் போலவே இதிலும அபாயம் உள்ளது. டெல்லி மும்பை என்று கூறப்பட்டிருந்தால் கூட அதன் தன்மை வேறானதாக இருந்திருக்கும். ஆனாலும அதையும் கூட நாம ஏற்றுக் கொள்ள முடியர்து.
இது கட்டாயம் இங்குள்ள இஸ்லாமியச் சகோதரர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற மனநிலையை ஏற்படுத்தும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. கமல் ஒரு வேளை தீவிரவாத எதிர்ப்பு என அமெரிக்கா கூறிக் கொண்டிருக்கும், இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதி என்கிற கருத்துக்குப் பலியாகி, அதை சொந்த மண்ணுக்குரிய அடையாளத்தோடு எடுக்க முயற்சித்த்தில் இந்த தவறு நிகழ்ந்திருக்கலாம்.

பல நேரங்களில் பொது போக்கிலிருந்து மாறி புது விசயங்களை தொழில் நுட்பங்களை கையிலெடுக்க நினைக்கும் கமல் இஸ்லாமியர் குறித்த தீவிரவாதம் குறித்த அமெரிக்க கருத்துக்கு பலியாகி விட்டது வருத்த்த்திற்குரியதுதான்.
.
ஏதோ ஒரு உள்ளுணர்வில் தான் கமல் இஸ்லாமிய அமைப்பினருக்கு படத்தை ரிலீஸாகும் முன்பே திரையிட்டுக் காட்டியிருக்கிறார். அந்த அளவிற்கு இஸ்லாமிய சகோதரர்களுக்கு மரியாதை அளித்த கமல், அவர்களது கோரிக்கையைப் பரிசீலித்து, அவர்களோடு ஆலோசித்து நீக்க வேண்டியவற்றை நீக்கியிருக்கலாம். கமல் ஒரு படைப்பாளி என்கிற அளவிலேதான் இதை அவரிடம் எதிர்பார்க்கிறோம்.

ஆனால் சில அறிவுஜீவிகளின் ’கருத்துச் சுதந்திரம்’  என்று வழிநடத்தலுக்கு பலியாகிப் போனார் கமல்.

கமல் அன்பே சிவம் என்ற படம் எடுத்ததால் அவரது மற்ற குறைகளை தோழமை உணர்வு கொண்ட இடதுசாரிகள் விமர்சிக்க மாட்டார்கள். பெரியாரிஸ்டுகள் கமல் தன்னைப் பகுத்தறிவு வாதி என்று சொன்னதால் விமர்சிக்க மாட்டார்கள். மகளிர் மட்டும் படத்தில் ‘கறவை மாடு...’ என்ற பாடல் வைத்திருந்தார். பெண்ணை ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகளுக்காக இவர்கள் யாருமே கமலை விமர்சித்த்தில்லை. கமலே எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறது ஒரு தந்தையாக இனிமேல் சில மாதிரி நடிக்க மாட்டேன் என்று தானாகவே தான் தன்னை மாற்றிக் கொண்டார். ஹேராம் படத்திலும, உன்னைப் போல் ஒருவன் படத்திலும இஸ்லாமியர்களை சித்தரித்திருந்த்தை யாரும் பெரிதாக விமர்சிக்கவில்லை. ஏன் பம்பாய் படத்தில் கூட இஸ்லாமியர்கள் ஊர்வலம் வரும் போது மட்டும் ஒரு கலவர பீதியை ஏற்படுத்தும் விதமாக காட்சி அமைக்கப் பட்டிருக்கும். ஆனால் இந்துக்கள் ஊர்வலம் போகும் போது அமைதியாக பாதுகாப்பு உணர்வு இருப்பது போன்று காட்சி அமைக்கப் பட்டிருக்கும். அந்தப் படத்தை பாராட்டித் தள்ளினார்கள். இஸ்லாமியர்கள் பற்றிய தவறான சித்தரிப்புகள் வரும்போதெல்லாம் இஸ்லாமியர்கள் மட்டுமே போராடியுள்ளனர். அதை விமர்சித்த அறிவுஜீவிகள். சமூக மாற்ற சிந்தனையாளர்கள் மிக மிக சிறுபான்மையினரே.

ஒரு கலைஞனை நல்ல விசயங்களுக்குப் பாராட்டி தோளோடு தோள் நிற்பதைப் போலவே சமூக நலனுக்கு எதிரான கருத்துக்களைக் கூறும் போது தோழமை உணர்வோடு விமர்சிக்கவும் தயாராக இருக்க வேண்டும. எந்த ஒரு படைப்பாளியும் கலைஞனும் தன் படைப்பு குறித்து வரும எதிர் விமர்சனங்களுக்காக மனம் உடைய மாட்டார். சிலர் எதிர் விமர்சனங்களைக் கண்டு, முதலில் எரிச்சலோ சோர்வோ அடைந்தாலும கூட சிறிது காலம் கழித்து தன்னை சுய விமர்சனம் செய்து அதை மாற்றிக் கொள்வார். இது சிறந்த படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்குமே உரிய இயல்பு. ஆனால் என்ன இசம் பேசினாலும தனி நபர் துதிபாடலுக்கு பழகிப் போன நமது விமர்சகர்கள் கமலை போற்றிப் பாடியே மிக சிறந்த போர்குணமிக்க படைப்பாளியாக, மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கும் கலைஞனாக இப்பொழுது இருப்பதை விட இன்னும் சிறப்பாக பரிணமித்திருக்க வேண்டியதைத்  தடுத்து விட்டார்கள் என்றே சொல்ல்லாம்.

அதனால்தான் இப்பொழுது அ.மார்க்ஸ சொன்னது போல இவர்கள் ’கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்’ என்று ஓதிக் கொண்டிருக்கிறார்கள்.
கருத்துச் சுதந்திரம் என்று குரலெழுப்பும் படைப்பாளிகள் எல்லோரும் இந்திய திரைப்படத் தணிக்கை குழுவின் விதிகளுக்கு உட்பட்டுத்தானே படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். கருத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் என்று இந்திய திரைத்ப்படத் தணிக்கை குழு வேண்டாம் என்று சொல்வார்களா? மதச்சார்பற்ற நாடு என்று கூறிக் கொள்ளும் இந்த நாட்டில் தான் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து படங்கள் வெளிவருகிறது. அதை தணிக்கை குழு தானே அனுமதிக்கிறது?

இந்தத் தணிக்கை குழு மட்டும முழுமுழுக்க படைப்பாளிகளின் படைப்புச் சுதந்திரத்தை அங்கீகரிக்கிறதா என்ன? காற்றுக்கென்ன வேலி, படத்துக்கு நடந்த்து என்ன என்று தெரியாதா?
இந்தத் தணிக்கை குழுதானே பள்ளி மாணவ மாணவிகள் காதலித்து முத்தம் கொடுக்கும் காட்சியையும் , ஐட்டம் பாட்டிற்கும் . தொப்புளைக் காட்டி ஆடுவதற்கும். பெண்களை. தலித்துகளை, இஸ்லாமியர்களை கேவலமாகச் சித்தரிப்பதற்கும் அனுமதிக்கிறது.  இது தான் கருத்து சுத்ந்திரத்தின் லச்சணம்.

நான் மதமற்றவன் என்று கூறி கமல் தன்னை ஒரு பிரபஞ்சக் கலைஞனாக கூறிக் கொள்வது சமூகத்தில் நிலவும் மத, சாதி, இன வேறுபாடுகளை கடந்த மனிதனாக மனிதாபிமானம் மிக்க பகுத்தறிவு மிக்க கலைஞனாக  தன்னை காட்டிக் கொள்வதற்காக இருக்க வேண்டும்.  அதை விடுத்து அமெரிக்காவால் இட்டுக கட்டப்பட்ட பொய்யான, ‘தீவிரவாத எதிர்ப்பு‘ என்ற போலியான, உலக சமூக்ங்கள் அனைத்திற்கும் கேடு விளைவிக்க்க் கூடிய கருத்தை படமாக எடுத்து, உலக அளவில் படத்தை விற்பதற்கு மட்டும் மத்மற்ற கலைஞன் என்ற அடையாளத்தை பயன்படுத்தக் கூடாது.

  டிடிஎச்சில் படத்தை வெளியிடும் போது வந்த எதிர்ப்புகள் வால்மார்ட்டிற்கு வந்த எதிர்ப்பைப் போன்றது தான்.  அதை வெறுமனே புதுமையான அணுகுமுறை என்று மட்டுமே அறிவுஜீவிகள் கூறித் திரிந்தனர்.  அதனை புதுமை என்று மட்டுமே பார்க்க முடியாது.  டிடிஎச் வியாபார முறை புதிதானது எனில் அந்த முறையின் மூலம் தமிழ்நாட்டில் நடக்கும் சாதிய வன்முறைகளை இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு நடக்கும் காவி தீவிரவாத்த்தை படமாக எடுத்து மார்க்கெட் செய்ய போராடலாம். நம் நாட்டிற்கு, இன்த்திற்கு பெருமை சேர்க்கும் விசயங்களை படமாக எடுத்து உலக அரங்கிற்கு காண்பிக்கலாம்.

     அதை விட்டு டிடிஎச் சில் வெளியிடுவதற்காக, சர்வதேச தன்மை வாய்ந்த்தாக இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக கற்பித்து (இது அமெரிக்காவின் கருத்து, உலக மக்களின் கருத்தல்ல) படம் எடுத்து உலக சந்தைக்கு கொண்டு போக வேண்டுமா?  சில்ரன் ஆஃப் ஹெவன் போன்ற படங்கள் எல்லாம் உலக அளவில் பிரசித்தி பெற்ற படங்கள் தான்.

     அமெரிக்க ஹாலிவுட் படங்களைப் போல் படமெடுப்பதுதான் ஒரு கலைஞனின் லட்சியமா?  அதுதான் ஒரு சிறந்த கலைக்கான அளவீடா?  சர்வ தேச தரம் என்பது நன்றாய் விற்று கல்லாக் கட்டுவது இல்லை.  அப்படிப் பார்த்தால், உலகத்தில் போதைப் பொருள் கடத்தல் தான் அதிக லாபம் தரக்கூடியது.  மனிதர்களை மத போதையில் வைத்து அவர்களுக்குள் போரை உருவாக்குவதற்காக, அதற்கு ஒரு கருத்தியலை ’ஆஃப்கான் தீவிரவாதம்’ என்று உருவாக்கிக் வைத்துள்ளது அமெரிக்கா.

    அந்த கருத்தியல் தான் இன்று நன்றாக விற்பனையாகும் பண்டம்.  அதற்கு ஒரு தேசபக்தி போர்வை வேறு.  தேசபக்தி என்றாலே அண்டை நாடுடன் சண்டை போட்டு சாவதிலும, தீவிரவாதிகளை ஒழிப்பதிலும் மட்டும் தான் உள்ளதா? நாட்டின அனைத்து வளங்களையும், மனிதர்களையும்,   மனித விழுமியங்களையும், பண்பாட்டையும், அறத்தையும் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் தேசபக்திதான்.

     தீவிரவாத ஒழிப்பு என்ற அந்த பண்டத்தை ஒரு கலைஞனாக படைப்பாக்கம் செய்து கமல் விற்பனை செய்ய் பார்க்கிறார்.  இது என்னுடைய பொருள் அதை எங்கு எப்படி விற்பனை செய்ய வேண்டும் என்கிற உரிமை எனக்கு மட்டுமே உள்ளது என்கிற கமலின் குரல் நியாயமானது. ஆனால் இது போல் தமிழ் நாட்டில் ஒரு விவசாயி பேச முடியுமா? இவர்களின் வலியை படைப்பாளியாக கலைஞனாக கமலால் புரிந்து கொள்ள் முடியாதா? புரிந்து கொள்ள்த் தான் வேண்டும்.  அது தான் ஒரு படைப்பாளிக்கு, கலைஞனுக்கு அழகு.

   நடைமுறையில் இருக்கும் பிற்போக்கு கருத்துக்கள் மீது கேள்வி எழுப்பவனாக, விமர்சிப்பவனாக இருப்ப்வன் ஒரு சிறந்த கலைஞனாக, படைப்பாளியாக அடையாளம் காணப்படுவான்.  கமல் இந்த வகை என்றுதான் கமல் ரசிகர்களும் நம்புகிறார்கள். அதனால் தான் அமெரிக்காவின் பொய்க்கதையான இஸ்லாமிய தீவிரவாத்த்தை படமாக எடுக்கவும் நம் தலைவர் ஏதோ புது கருத்தை சொல்வதாக நம்புகிறார்கள்.

    ஆனால் கமல் சொல்வது ஹாலிவுட் சொல்லி புளித்து போன கட்டுக்கதையான இஸ்லாமிய தீவிரவாதம் தான்.  அமெரிக்காவின் இந்த கருத்துக்கு பின்னே எண்ணெய் வளங்களை சூறையாடும் அவர்களின் கேவலமான ஆதிக்க அரசியல் இருக்கிறது என் நோம் சோம்ஸ்கி போன்ற அரசியல் பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த அரசியலுக்கு கமலும் பலியாகியுள்ளார் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. அதனால் அவரது போர் மற்றும் பயங்கரவாத்த்திற்கு எதிரான உலக மனிதாபிமான கருத்தும பலியாகி விட்டது.

    தமிழ் நாட்டில் இடது சாரிகள், அறிவுஜீவிகள், பகுத்தறிவாளர்கள், அமெரிக்காவின் இந்த கருத்தையும்.  இதன் பின்னணியில் தங்கள் வாழ்வாதாரத்தை, சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இஸ்லாமிய நாடுகளில் உருவான ஆயுத தாக்குதலையும் எவ்வாறு அணுகுவது என்பது பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.  இவர்களும் இஸ்லாமிய தீவிரவாதம், ஆப்கானிய தீவிரவாதம் என்ற அதே அமெரிக்க பல்லவியை பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  இஸ்லாமியர்கள் மட்டுமே இதற்காக எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதன் வெளிப்பாடுதான் இன்று இஸ்லாமியர்கள் இந்த படத்தை எதிர்க்கும் போது கருத்து சுதந்திரம் என்று இவர்களைக் கூப்பாடு போட வைக்கிறது.

     இவர்களே இந்த தவறு செய்யும் போது ஒரு வெகுஜன கலைஞன் தன் தொழிலில் முழு உத்வேகத்தோடு இயஙகும் கமல் போன்ற கலைஞன் இந்த தவறை செய்வதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

தவறு செய்வது கலைஞனது இயல்புதான். ஆனால் அது தவறென உணர்ந்தால் படைப்பாளிகள் எவ்வித ஈகோவுமின்றி திருத்தத் தயாராயிருப்பதுதான் சிறந்த மாற்றுக் கருத்துக்களை அங்கீகரிக்கும் புதுமைகளை வரவேற்கும் படைப்பாளிக்கு அழகு.

திரைப்படம் தடைசெய்யப்பட்டவுடன் தமிழ்நாட்டை விட்டுப் போவேன் என்று கோபமாகவோ வருத்தமாகவோ கூற முடிகிறது. காரணம் அதற்கான வாய்ப்பு வசதிகள் இருக்கிறது. ஒரு வேளை வெளியேறுவது என்பதை நினைத்தே பார்க்க முடியாத நிலைமை கமலுக்கு இருந்திருந்தால் கடைசி வரை இங்கிருந்து தானே போராடியிருப்பார்.

அது போலத்தான் தங்கள் அன்றாட வாழ்க்கைக்காக, சுதந்திரத்திற்காக வேறு வழியின்றி அவர்கள் ஆயுதமேந்தியுள்ளனர். தங்கள் சொந்த மண்ணை மீட்க , தங்கள் சந்த்திகளாவது சுதந்திரமாய் வாழட்டும் என்று உயிரை விடுகிறார்கள். இதன் உண்மையான வலியை உணர்ந்து ஏராளமான ஈரான் படங்கள் வந்துள்ளன. போராடுபவர்களைப் பாராட்டாவிட்டால் போகிறது. என்னவோ பொழுது போக்காக குண்டு வைத்து அப்பாவி மக்களின் உயிரை குடிப்பவர்க்ள், அதற்காக தங்கள் உயிரைக் கூட மாய்த்துக் கொள்பவர்கள் என்கிற ரீதியில் சித்தரிக்கப் படுகிறார்கள் அமெரிக்கர்களால். இந்தக் கருத்தியலுக்குப் பலியான நாமும அதை வழி மொழிகிறோம். இன்றும் சரியான காரணமின்றி இஸ்லமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக சிறையிலடைபட்டு கிடக்கும் நமது இஸ்லாமியச் சகோதர்ர்கள் நம் நாட்டில் பலர் இருக்கிறார்கள்.

அதனால், எனக்கு மதம் இல்லை, சாதி இல்லை என்று கூறுகிற கமல் இஸ்லாமியர்களையும், நபிகள் நாயகத்தையும் தரகுறைவாகப் பேசும் தன் ரசிகர்களைக் கண்டிக்க வேண்டும். சரியாக வழிநடத்த வேண்டும. இஸ்லாமியர்கள் எனது சகோதரர்கள் எனக்கூறும் கமல், இஸ்லாமிய அமைப்பினரின் நிலைப்பாட்டிற்கு எதிராக நின்று, விஸ்வரூபம் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்துத்துவ கட்சிகளை ’’இதில் தலையிட வேண்டாம் இது எனக்கும், எனது சகோதரர்களுக்குமான பிரச்சினை, இதை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்கிறோம்’’ என்று சொல்லியிருக்க வேண்டும்.

உண்மையிலேயே தீவிரவாத்த்தை எதிர்த்துப் படமெடுக்க நினைத்தால். அடுத்த படமாக மாலேகான் குண்டு  வெடிப்பில் இந்து மதத் தீவிரவாதிகளின் கைவரிசையை அடிப்படையாக்க் கொண்ட படம் எடுக்க வேண்டும். (இதற்கும் எல்லா ஆவணங்களும் இருக்கின்றன.) அப்பொழுது மட்டுமே கமல் பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததும், தான் ஒரு பெரியாரிஸ்டு என்று கூறியதும், நான் மதமற்றவன் என்று கூறி கொண்டதற்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும்..

ஒரு நல்ல  கலைஞன் சராசரிகளை விட சக மனிதர்களின் உணர்வுக்கு அதிக மதிப்பளிப்பவனாக இருப்பான். இதைதான் இப்பொழுது பேச்சுவார்த்தைக்குத் தயாராகியிருக்கும் கமல் நிரூபித்திருக்கிறார்.

இந்த கட்டுரையை எழுதி முடிக்கும் தறுவாயில், ஒரு கலைஞன் என்ற முறையில் இஸ்லாமியரின் உணர்வுக்கு மதிப்பளித்து சில காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்ட படைப்பாளி கமலுக்கு மதச்சார்பற்றவர்களின் சார்பாகவும்., இஸ்லாமியச் சகோதரர்களின் சார்பாகவும் நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

டெல்லி போராட்டங்கள் : சில பார்வைகள்

டெல்லிச் சம்பவத்தைக் கண்டித்துப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அருந்ததி ராய் பிபிசி க்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். இந்தப் போராட்டம் நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் என்றும், இது அடித்தட்டுமக்களுக்கு பயனளிக்காது என்றும், இது போன்ற வன்முறைகள் வட கிழக்கு மாநிலங்கள், ஜம்முக் காஷ்மீர், போன்ற மாநிலங்களில் ராணுவத்தாலும் காவல் துறையினராலும் நிகழ்த்தப்படுகிறது  என்றும் கூறியிருக்கிறார். அவர் கூறும் மற்ற காரணங்கள் நியாயமானதாகப் பட்டாலும், இந்த டெல்லிச் சம்பவத்திற்கு மட்டும் எதற்கு இந்தளவுக் கூப்பாடு என்று கூறியது மிகவும் கண்டனத்திற்குரியது.

           இந்தியாவில் நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்த அவருக்கு, அவரும் ஒரு பெண் என்ற வகையில், டெல்லி மாணவிக்கு ஏற்பட்ட நிலை ஏற்பட்டால், (இது நமது விருப்பமல்ல) அப்பொழுது எனக்காகப் போராடவேண்டாம், அந்தப் போராட்டத்தால் லட்சபோலட்ச உழைக்கு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும், இது நிலப்பிரபுத்துவத்தின் வழமையான கொடுமைதான் என்று எப்படி வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும் அது அவரது சுதந்திரம், அவரது அரசியல் நிலைப்பாடு.

               ஆனால் டெல்லியில் நடந்தது என்ன? அந்த மாணவி நடு இரவிலோ, பின்னிரவிலோ வெளியில் சுற்றவில்லை. ஒன்பது மணிக்குத்தான் அதுவும்  பேருந்து நிறுத்தத்தில்தான் நின்றிருக்கிறாள்.  தன்னந்தனியாக அல்ல. தன் நண்பருடன்தான் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்திருக்கிறாள். அப்பொழுதுதான் இது நிகழ்ந்துள்ளது. அடுத்த முக்கியமான விசயம் இச்சம்பவம் நாட்டின் தலைநகரத்தில் நடந்துள்ளது. போலீஸ் ஸ்டேசன் கூட இல்லாத சாதிக்கொடுமைகளும், கட்டப்பஞ்சாயத்துகளும் நடந்து கொண்டிருக்கும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையிலுள்ள கிராமத்தில் நடந்தது அல்ல இச்சம்பவம்.

           எங்க அப்பன் பாட்டன் காலத்திலிருந்தே வாழ்கிறோம். பூரணகும்ப மரியாதையோடு சாதியை கட்டி காப்பாற்றி வருகிறோம் என்ற மனோபாவம் பெருநகரங்களில் குறைந்துள்ளது. படிப்பு, பணி நிமித்தமாக பல இன, சாதி, மத்த்தினரும் நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அடிப்படையில் வாழும் சூழலுள்ள நகரம் அது. குறிப்பாக உலகமயமாக்கலுக்கு பிறகு, ஐடி தொழில்நுட்பம் சார்ந்த பணி, படிப்பு காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளது.

          மாறிவரும் உலகமயமாக்கலின் காரணமாக பெண்கள் படிப்பதும், வேலைக்குச் செல்வதும், அதிகரித்திருக்கும் சூழலில் நடுத்தர வர்க்கம் தங்கள் வீட்டு பெண்களை முன்பைவிட வெளியில் அனுப்புகிறார்கள். இந்தச் சூழலில் உருவாகும்  கலாச்சாரம் வேறுவிதமானது.
                ஆணும், பெண்ணும் சந்திப்பதும், உரையாடுவதும் உடலுறவுக்கு மட்டுந்தான் என்கிற நிலப்பிரபுத்துவ, சாதிய கலாச்சாரத்திற்கு எதிரான, பெருநகர படித்த நடுத்தர வர்க்கத்தின் ஆண், பெண் நட்புக் கலாச்சாரம்தான் பாலியல் வன்முறையை ஒரு சமூக அநீதியாகப் பார்க்க வைக்கிறது.
                    தன் சாதிபெருமை தன் பெண்ணின் உடம்புக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டும்,  ஆண்மைதான் வீரம் என்று நினைத்து கொண்டும், வேறு சாதிப் பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்கினால் கைகொட்டிச் சிரிப்பதும், தன் சாதிப் பெண்ணுக்கு அந்த நிலை ஏற்பட்டால் மூடி மறைத்து பாதுகாப்பதுமாக வாழ்க்கை நடத்துபவர்களுக்கு  இதை புரிந்து கொள்ள முடியாது.

               இப்படிப் பட்ட சூழலில் குறைந்த பட்ச பொருளாதார சுதந்திரத்தோடு பெண் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையான, படிப்பு, வேலை இவற்றிற்காக வெளி உலகில் அச்சமின்றி பிரவேசிக்க எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற  உரிமைக்காக வெடித்த போராட்டம் இது.

                    இந்த போராட்டத்தைப் பார்த்து ஒரு காங்கிரஸ்காரர், ‘பெண்கள் நடு இரவில் ஊர் சுற்றுவதற்கு அல்ல சுதந்திரம்‘ என்று கருத்து தெரிவித்தார். டெல்லியில் இருந்து கொண்டே, அமெரிக்கா அரசுக்கு இரவு முழுக்க கண்விழித்து வேலை பார்க்க பெண்கள் வேண்டுமாம். ஆனால் இரவில் பெண்கள் வெளியில் வருவது ஊர் சுற்றுவதற்காம்.

                   அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆணும் தன்னுடைய அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என்று யாரையும் 9 மணிக்குக் கூட வெளியில் அனுப்பு முடியாதா என்றும், துணையாகச் சென்ற ஒரு ஆணாகிய தனக்கும் பாதுகாப்பில்லையா என்பதை உணர்ந்தும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு கம்யூனிசம் தெரியாது, வரட்டுத்தனமான வர்க்கப் பார்வை கிடையாது, ஜம்மு, மணிப்பூரில் ராணுவம் செய்த்துகூட அவர்களுக்குத் தெரியாது இருக்கலாம். கைரலாஞ்சியின் சாதி வன்முறைக் கொடூரத்தை புரிந்துகொள்ள முடியாதுகூட இருக்கலாம். ஏனெனில் அது அவர்களது பிரச்சினை இல்லை. எல்லா மனிதர்களும், எல்லா வர்க்கமும் தனக்கு நேர்ந்த நேரடி பாதிப்புகள், இழப்புகளிலிருந்துதான் கற்றுக் கொள்வதும் போராடுவதும். அப்படி எழுந்த போராட்டம்தான் டெல்லி போராட்டம்.

                        இந்தியாவின் ஏதோஒரு மூலையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்ட பெண் தனக்கு போராட ஆட்களில்லாததால், அருந்த்தி ராய் போன்ற மனித உரிமைக் காவலர்கள் அவர்களுக்காக போராட வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் இந்தப் பெண் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மருத்துவக் கல்லுரி மாணவி. தன் சக மாணவிக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக நடத்தப்பட்ட கல்லுரி மாணவர்களின் தன்னிச்சையான எழுச்சிதான் இந்த போராட்டத்தின் தொடக்கம்.  ராணுவமும் போலீசும் செய்கிற பாலியல் வல்லுறவு மட்டுமே மனித உரிமை மீறல் என்பதை எப்படி அருந்ததிராய் போன்றவர்கள் பார்க்கிறார்களோ அதுபோலத்தான் நடுத்தரவர்க்கத்துக்கு  இவைதான் பிரதானமாகத் தெரியும்.

                கலை எடுக்கிற பெண்களும் ஆதிவாசிகளும் தங்கள் குடும்பத்திற்குள்ளே கூட ஆணகளின் வல்லுறவுக்கு ஆளாகி எதிர்க்கவே திராணியின்றி இருக்கையில் குறைந்த பட்ச சுதந்திரம் உள்ள நடுத்தரவர்க்கம்தான் இது போன்ற பிரச்சினைகளுக்குப் போராட முடியும், இதுதான் சமூக யதார்த்தம்.

                   இது போன்ற நடுத்தர வர்க்கத்தின் போர்க்குரலால் உருவானதுதான் டாக்டர் முத்துலெட்சுமி கொண்டு வந்த தேவதாசி ஒழிப்பு முறை, ராஜாராம் மோகன் ராய் கொண்டு வந்த சதி ஒழிப்பு, குழந்தை திருமணம் ஒழிப்பு, இன்று பயன்படும் வரதட்சணை ஒழிப்பு சட்டம், பெண்கள் குழந்தைகள் மீதான குடும்ப வன்முறை ஒழிப்பு சட்டம் என்று  கூறலாம்.  இந்த சட்டங்கள் எல்லாம் கிராமத்தில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள எல்லா ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்க பெண்களுக்கும் முழுமையாகப் பயன்படுகிறதா என்ன? அவ்வாறில்லை என்பதற்காக அவற்றை தூக்கி யெறிந்து விட முடியுமா?  போலீசும், ராணுவமும் நாள்தோறும் நிகழ்த்தும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து குரல் கொடுப்பது எந்த நம்பிக்கையில்? இந்த அரசாங்கத்தை, அதன் சட்டத்தையும் மதித்துதானே? இந்த அரசின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்கிறவர்களால், இந்த சமூகத்தின் ஒரு பகுதியான நடுத்தரவர்க்கத்தின், பெண் சமத்துவத்திற்கான போராட்டத்தை எப்படி இப்படி பொறுப்பற்று விமர்சனம் செய்ய முடிகிறது?

                    நேரடியாக ஆதிவாசிகளுக்கும், ஒடுக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும், விளிம்பு நிலையினருக்கும் பயன்படும் சட்டங்களும், போராட்டங்களும் தான் மதிப்பு மிக்கவை.  அவற்றினால் மட்டுமே வராலாறு முழுக்க, சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்வது மார்க்சியத்தை, கம்யூனிசத்தை வறட்டு சூத்திரமாக பார்ப்பதன் விளைவு.

                   சமூக மாற்றத்தை  விரும்பும் கருப்பு , சிவப்புக் கட்சிக்காரர்கள், தேசியஉணர்வாளர்கள், அறிவுஜீவிகள், ஜனநாயக சக்திகள் என அனைவருமே  சாதி, வர்க்கம் ஒழிந்து சமத்துவ சமூகம் வரும்போது பாலியல் வன்முறையற்ற சமூகம் உருவாகும் என நம்பிக்கொண்டு பாலியல் வன்முறை என்கிற கேடுகெட்ட செய்லை பொருட்படுத்தாமல் இருந்து விட்டனர். இந்த வன்செயலுக்கு காரணமான ஆபாச படங்கள், விளம்பரங்கள், பெண்ணை ஒரு பாலியல் ஜந்துவைப் போல் சித்தரிக்கும் திரைப்படங்கள். மத சாஸ்திரங்கள். இலக்கியங்கள், பத்திரிக்கைகள்  போன்றவற்றை எதிர்ப்பது பெண்கள் அமைப்புகளின் பொறுப்பு, அதில் தங்களுக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லை என்று இருந்து விட்டனர். ( மணிப்பூரில் பெண்கள் மீதான ராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு எதிராக அங்கும் பெண்கள் மடடும்தான் போராடினர்.) இந்த வரலாற்றுத் தவறின் மோசமான விளைவுதான் இன்று அக்கொடூரச் செயலுக்கு மரணதண்டனை கேட்டுப் போராடும் இந்தக் கொந்தளிப்பு.

                 நாம் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றே கவனிக்காமலோ ஒதுக்கி தள்ளிய பிரச்சினை, ஒரு தரப்பினரால், தன்னிச்சையாக, உணர்வு பூர்வமான போராட்டமாக  முன்னெடுத்துச் செல்லப்படுகிறது, என்கிற சமூக எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.  கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டு அதன் ஆரம்ப அடிச்சுவடியான அரசு, அதிகார வர்க்கம், போலீஸ் ராணுவம், செய்யும் வன்முறைகள் மட்டுமே வன்முறை என்றும், சாதியாலும் வர்க்கத்தாலும் ஏழ்மையில் உள்ளவர்களின் பிரச்சினை வெளியுலகிற்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்றும்,  சாதாரணமானவர்களுக்கு கூடத் தெரிந்த இந்த விசயத்தை புதிதாக கண்டுபிடித்தது போல் கூறிக் கொண்டு திரிவதும் கம்யூனிசத் தத்துவத்தை மிக மொன்னையாக புரிந்து கொண்டதன் வெளிப்பாடுதான்.

             இது வரையில் இந்தியாவில் கோவில் திருவிழாவைத் தவிர, வேறு எதற்கும் இவ்வளவு பெருந்திரளான கூட்டத்தை ஒரு பொதுவிசயத்திற்கான போரட்டத்திறகு பார்த்த்தில்லை. தமிழ் நாட்டில் நடந்துகொண்டிருக்கிற அணுஉலை எதிர்ப்பு போராட்டம் தவிர, இந்த போராட்டம் தான், ஆண்களோடு பெண்களும் சரிசமமாக கலந்து கொண்ட போராட்டம்.  பெண்கள் மீதான வன்முறையை தன் வாழ்வோடு சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்சினையாக புரிந்து கொண்டு  ஆண்களும், பெண்களுக்காக போராட்டத்தில் கலந்து கொண்ட தன்னெழுச்சியான போராட்டம்.  பல முறை தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும, கண்ணீர் புகையை வீசியும் எல்லாவற்றையும் தாண்டி பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  சாதி, இனம், மதம், மொழி, பால் கடந்து ஒரு நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினைக்காக, பெண்ணுரிமைக்காக ஆண்களும் பெண்களும் மாணவர்களும், மாணவிகளும் ஒன்றிணைந்து நடத்திய போராட்டம்.

                  இநதப் போராட்த்திற்கு காரணமான,  டெல்லியில் நடந்த, அந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவற்றை நாம் ஆராய வேண்டும் என்பதில் மறுப்பேதுமில்லை. இவ்வளவு வன்மமாக ஒரு பெண்ணை தாக்குவதற்குப் பின் உள்ள அரசியல், கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார, உளவியல் கூறுகள் ஆராயப்பட வேண்டியவை.  ஆனால், (அமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லா அநீதிகளுக்கும் எதிராக, ஒரு நாள் பொறுக்கமுடியாத கோபம் பிறிட்டுக் கிளம்பும், என்கிற புரிதல் இன்றி) இது வரை நடக்காத வன்முறையா இந்தப் பெண்ணுக்கு நடந்து விட்டது என்றும்,  இந்த ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் ஏன் இவ்வளவு கூப்பாடு, கொந்தளிப்பு என்றும், இந்த போராட்டமே அவசியமற்றது என்றும் கூறுவது சமூக நலனுக்கு விரோதமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.