
மேற்கத்திய தத்துவ வரலாற்றை பதிவு செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் வில் ட்யூரண்ட் ஆவார். இவர் எழுதிய `தத்துவத்தின் கதை` (The Story of Philosophy) எனும் நூல் பல முறை பதிப்பிக்கப்பட்டு இலட்சக் கணக்கான பிரதிகள் உலகெங்கிலும் விற்பனையாகி உள்ளன, இன்றும் விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றன, இதற்கு முக்கிய காரணம் பல நாடுகளில் உள்ள தத்துவ ஆர்வலர்கள் தத்துவ வரலாற்றை எளிதில் புரிந்து கொள்ள உதவும் நூலாக இதைக் கருதுவதே ஆகும். சுமார் ஐநூற்று ஐம்பது பக்கங்கள் கொண்ட இந்நூலில் நாற்பத்தி ஏழு பக்கங்களில் இருத்தலியலாளர் நியெட்ஸே குறித்து எழுதப்பட்டுள்ளது, மிகவும் ஆழமாக ஆனால் அழகாக, எளிமையாக எழுதியுள்ளார் வில் ட்யூரண்ட். அதை அதன் அழகியல்தன்மையும், தத்துவ அம்சங்களும் சற்றும் பிசகாமல் இந்நூலில் மொழி பெயர்த்தளித்துள்ளார் இந்திரா காந்தி.
மேற்கத்திய தத்துவ வரலாற்றைப் புரட்டும் போது, அதில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு விதமான சிந்தனைப் போக்கு கோலோச்சுவதைக் காணமுடிகின்றது. வாழ்வின் அர்த்தத்திற்கான தேடல் என்பதை சாக்ரடீஸ் காலம் முதற் கொண்டு தத்துவ வரலாற்றாளர்கள் வகைப்படுத்தியுள்ள போதிலும், அதை மிகவும் பிரதானமாகக் கொண்டு தங்களின் தத்துவப் போக்கை உருவாக்கியவர்கள் இருத்தலியலாளர்கள். இவர்களின் முன்னோடி நியெட்ஸே ஆவார். ஏசுவின் பிறப்பிற்கு சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின் மேற்குலகில் அறிவு தீர்க்கமாக செயல்படத் தொடங்கியது. ``சந்தேகப்படு எல்லாவற்றையும்! சந்தேகப்படுபவரைத் தவிர`` எனும் டேக்கார்ட்டின் அறைகூவல் மேற்குலகின் அறிவியல் வளர்ச்சிக்குக் கட்டியம் கூறியது. சந்தேகப்படு எனக் கூறியது எல்லாவற்றையும் விசாரணைக்குட்படுத்துவது, முறைப்படி ஆராய்வது எனும் பொருளிலே கூறப்பட்டதாகும்! கடவுளின் இருப்பை விசாரணைக் குட்படுத்தும் எந்த ஒரு செயலும் மிகவும் கடுமையான தண்டனைக் குட்படுத்தப்பட்ட காலம் அது. எனவே டேக்கார்ட்ஸ் கடவுளின் இருப்பை ஒருபுறம் தக்க விவாதங்களோடு நிரூபித்துவிட்டு, பிற விசாரணைகளை மேற்கொண்டு தத்துவ வரலாற்றை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தினார் எனலாம். ஆனால் கடவுளின் இருப்பையும், தொழில் நுட்பங்களின் அபரித வளர்ச்சியையும் இரு மோசமான விஷயங்களாக இருத்தலியலாளர்கள் பலரும், பின் நவீனத்துவவாதிகளும் நோக்கினார்கள். நவீனத்துவம் எல்லா அறிவு சார்ந்த செயல்பாடுகளையும், ஒட்டு மொத்த, ஒரு தர்க்க ரீதியான அறிவியல் கட்டமைப்பிற்குள் அடைத்து, சாதனை அல்லது சோதனை எனும் நோக்கில் இட்டுச் செல்கிறது. விளைவு... மனித நேயம் என்பதும், தனிமனித மாண்பு, சமுக நீதி போன்ற மதிப்பீடுகள் அறிவியலினால் கபளீகரம் செய்யப்படுகின்றன. `வெற்றி’ என்பதே அதன் ஒரே இலக்காகிவிட்ட நிலையில் சாதாரணர்கள் அந்த வெற்றியினால் நசுக்கப்படுகிறார்கள் என்பதே இவர்களின் பார்வை!
தனிமனிதனின் இருப்பு பலத்த நெருக்கடிக்குள்ளாகியதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் நியெட்ஸே. யூத-கிறிஸ்துவ சமய மதிப்பீடுகள் எவ்வாறு மானுட வாழ்வை பீடித்து வாழ்வை சீக்கு பிடிக்க வைக்கின்றன என்பதை விளக்கி அவற்றிலிருந்து மானுட இருப்பை விடுதலை செய்வதே வாழ்வின் முக்கிய நோக்காக கொண்டார் எனலாம். அதற்காக அறம் அற்ற வாழ்வை முன் மொழியவில்லை. மாற்றாக மதிப்பீடுகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றார். இதனடிப்படையில் கடவுளின் இறப்பை உலகிற்கு மிகவும் துணிச்சலாக அக்காலக் கட்டத்தில் பிரகடனப்படுத்தினார். நியெட்ஸேவின் ஜராதுஷ்ட்ரன் ஒரு அதீத மனிதன் (Superman) புதிய மதிப்பீடுகளை உருவாக்குபவன். அவன் தலைவனுக்குரிய மதிப்பீடுகளைக் கொண்டவன். புதியதோர் உலகு செய்பவன். மானுடம் சிறக்கச் செய்பவன். அம்மாதிரியான ஜராதுஷ்டிரர்கள் தலைமை பண்பு கொண்டவர்கள். அதே சமயம் அடிமை மதிப்பீடுகளைக் கொண்ட சமயங்களும், கடவுள்களும் தங்கள் சொல்படி விமர்சனமின்றி அப்படியே ஒட்டி ஒழுகும் அடிமைகளை உருவாக்கியுள்ளன. அடிமைகள் புதியன படைப்பதில்லை! போட்ட பாதையில் பாதுகாப்பாக பயணிப்பவர்கள்! தலைவர்கள் புதிய உலகிற்காக, மதிப்பீடுகளுக்காக வாழ்க்கையை துச்சமாக மதிப்பவர்கள். அடிமைகளின் அளவுகோலின்படி நன்மை (goodness) என்பது அடக்க ஒடுக்கமானது, கருணையானது, கட்டுப்பாடானது, நழுவக் கூடியது. அதேசமயம் தீமை (evil) என்பது சுயநலம், கொடூரம், வளம், வேகம் கொண்டது. நியெட்ஸே `நன்மை` என்பது மக்களை அடிமைகளாகவே வைத்திருப்பதற்காக உண்டாக்கப்பட்ட மதிப்பீடுகள். இதன் மூலம் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு கூட்டம் என கருதினார். `நல்லவர்கள்` என்பவர்கள் `அடிமைகள்` என்ற கருத்து நியெட்ஸேவின் தத்துவ அதிரடி எனலாம். அவர்கள் சமுகத்தின் `தீமைகள்` எனவும் பிரகடனம் செய்தார்.
அதிகாரத்திற்கான விருப்பாற்றல்` எனும் கருத்தையே நியெட்ஸேவின் தத்துவம் அடிநாதமாகக் கொண்டது. அதிகாரத்தை பெறுவது என்பதை அவர் வலியுறுத்தினார். அது அடக்குமுறைக்கான அதிகாரம் அல்ல! விடுதலைக்கான அதிகாரம்! பழைய மதிப்பீடுகளை து£க்கி எறிவதற்கான அதிகாரம்.
நியெட்ஸேவின் தத்துவப் போக்கு பலரை பலவிதமாக ஈர்த்தது. பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வலதுசாரி ஜெர்மானிய போர்வீரர்களுக்கு முதலாம் உலகப் போரின் போது நியெட்ஸேவின் Ôஜராதுஷ்ட்ரா இவ்வாறாகப் பேசினான்` எனும் நூல் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. சில இடதுசாரிகள் நியெட்ஸேவின் வாரிசுகள் எனவும் அழைக்கப்பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் பல அரசியல் தலைவர்கள் நியெட்ஸே தான் தங்களை மிகவும் ஈர்த்த தத்துவவாதி எனவும் பிரகடனப்படுத்தியுள்ளனர். நியெட்ஸேவின் எந்த ஒரு நூலையும் வாசித்திராத ஹிட்லர் நியெட்ஸேவின் தத்துவ ஈர்ப்பினால்தான் சர்வாதிகாரியானான் என்ற கருத்தும் நிலவுகிறது. முஸோலினி, ருஸ்வெல்ட் போன்றோர் நியெட்ஸேவினால் மிகவும் ஈர்க்கப்பட்டவர்கள்.
நியெட்ஸேவின் மானுட விடுதலைக்கான அறைகூவல்கள் மற்றும் அடிப்படையை உடைக்கும் தத்துவ விசாரங்களே பின்னர் இருத்தலியலாளர்கள் கேம்யூ, சார்த்தர், ஹைடெக்கர் போன்றோர் தங்கள் தத்துவங்களைப் படைக்க அடிப்படையாக இருந்தன. இருத்தலியம் மேற்குலகின் வாழ்வியல் உலகை விசாரணைக்குட்படுத்தி சலசலக்க வைத்தபின், அதிரடியாய் தோன்றிய பின் நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படை அஸ்திவாரமாக நியெட்ஸேவின் தத்துவம் அமைந்தது. பின் நவீனத்துவவாதிகளான ஃபூக்கோ, டெரிடா, டெல்யூஸ் போன்ற பலரின் தத்துவப் பங்களிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தவர் நியெட்ஸே!
நியெட்ஸே பலவீனமானவர். மனச்சிக்கல் நிறைந்தவர். அவர் அதிகாரமே வாழ்வு எனும் கற்பனா வாதங்களை பறக்கவிட இயலாதவர்` என்றெல்லாம் ரஸ்ஸல் உட்பட பலர் கூறியதுண்டு. நியெட்ஸே காலத்தின் பிரசுரிக்கப்படாத, பிரபலமாகாத அவரின் படைப்புக்கள் பின்னர் சுனாமியாக பாய்ந்து மேற்குலக தத்துவப் போக்கினைப் புரட்டிப் போட்டு, இன்றுவரை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது எனலாம். நியெட்ஸேவின் தத்துவ வீரியம் தனிமனித சுதந்திரம் குறித்தது, அது சமுக விடுதலைக்கு உதவாது எனும் இடதுசாரி கருத்தாக்கங்கள் கூட மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்பதை நியெட்ஸேவின் படைப்புகளை ஆழ்ந்து வாசிக்கும் போது தெரியும். சில படைப்புகளே நியெட்ஸே பற்றி தமிழில் வெளிவந்துள்ள போதிலும், மிகவும் ஆதாரப்பூர்வமான எழுத்துக்களாக அறியப்பட்ட வில் ட்யூரண்டின் படைப்பிலிருந்து நியெட்ஸேவை தமிழுலகிற்கு மறுபடியும் அறிமுகப்படுத்தும் பணியை இந்திரா காந்தி செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. எனது மாணவி அவர் என்று சொல்லிக் கொள்ள பெருமைப்பட இந்நூல் மேலும் வழிவகை செய்துள்ளது. அவருக்கு என் பாராட்டுதல்கள்! நன்றிகள்!
முனைவர். இரா. முரளி.
துறைத்தலைவர், தத்துவத்துறை,
மதுரைக் கல்லுரி, மதுரை.