Sunday, February 3, 2013

அட்டக்த்தியும், சாட்டையும்

அட்டக்த்தி, சாட்டை இரண்டு படங்களையும் சமீபத்தில்தான் பார்த்தேன அட்டகத்தி படத்தில் எனக்கு மிகப் பிடித்த விசயம் காதலை புனிதப்படுத்தாமல் மிகச் சாதரணமாக காட்டியிருப்பதுதான். குறிப்பாக காதலில் தோல்வியடைந்தவுடன் ‘இந்தப் பொம்பளைகளே இப்பிடித்தான் ஏமாத்திருவாளுக‘ என்று, தன் தனிவாழ்வில் ஏற்பட்ட தோல்விக்கு உலகத்திலுள்ள பெண்களையெல்லாம் ‘அவள் இவள்‘ என்ற ஏக வசனத்தில் திட்டாமலிருந்தது தமிழ் திரையுலக வரலாற்றில் (!!!??) முதல்முறையாக எழுதப்பட்ட வசனம்,,,,

     சாட்டை, பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் அறிவுரைகளால் விளாசியெடுத்திருக்கிறது. ஆனால் அந்தப் பள்ளிப்பருவக் காதல்தான் வழக்கமான சினிமாவாகத் தெரிகிறது. எப்படிக் காதலிக்க வேண்டும், காதல் என்றால் என்ன என்பதையெல்லாம் இவ்வளவு காலமும் திரைப்படம் மூலம் சொல்லிக் கொடுத்து, அந்த வரையறைக்குள் சிக்காதவற்றையெல்லாம் காதலாக மதிக்கமாட்டேனென்கிறது சமூகம்.

     பள்ளி மாணவனுக்கும் மாணவிக்கும் வழக்கமான சினிமாக் கதாநாயகன், நாயகி பாணியில் பாட்டு வைத்திருப்பது சரியானதாகத் தெரியவில்லை. அந்த வயதில் காதல் வரும், வந்தால்தான் மனிதப்பிறவி இல்லாவிட்டால் மனநோயாளி என்கிற அளவிற்கு சொல்லிச் சொல்லியே இளைய தலைமுறையை ஒரு வழியாக்கிவிட்டார்கள். இச்சமூகத்தில் பள்ளிக்காலத்தில் காதல் உணர்வு ஏற்படாமல் யாருமே பள்ளிவாழ்க்கையை கடந்து வந்ததில்லையா, வாழ்ந்ததில்லையா, அப்படியே காதல் வந்தாலும் இதுவரை சினிமாக்கள் காட்டுகின்றனவே அப்படித்தான் காதல் வந்தாக வேண்டுமா. இப்படி நிறையக் கேள்விகள் வருகிறது,
நாமெல்லாம் குழந்தையாய் இருந்தபோது என்ன செய்தோம் என்பதை எப்படி நம் நினைவுக்கு துல்லியமாக்க் கொண்டு வரமுடியாதோ, அது போலவே உடலும் மனதும் உற்சாகமாக எதையும் எதிர்கொள்ளும் பதின் பருவத்தில் நாம் என்னவாக இருந்தோம் என்பதை நினைவிற்கு கொண்டு வருவது என்பதும் சற்று சிரம்மானதுதான்.

     முப்பது நாற்பது வயதில் அவ்வளவு கால வாழ்வனுபவம் கொடுத்த கண்ணாடியிலிருந்துதான் அதை தரிசிக்க முடியும் அதன் தாக்கத்திலிருந்துதான் பதின் பருவ அனுபவங்களை அசைபோட முடியும், அவற்றை நாம் நினைவுபடுத்திப் பார்க்கும் போதுகூட நமது விருப்பு வெறுப்பு அதனுள் தாக்கம் செலுத்தும். இதை இயக்குனர்கள் கணக்கில் கொள்ள வேண்டும் என்பத எனது வேண்டுகோள்.

     மற்றொரு விசயம், பழைய சிவாஜி எம்.ஜி.ஆர் காலப் படங்களில் காதலன், காதலி தோற்றம் பக்குவமடைந்தவர்கள் போல் இருக்கும். அதன் பிறகு கல்லுரி மாணவ மாணவிக்கிடையேயான காதல் காட்சிகள், (அதாவது கல்லுரிக்குப் போவதே காதலிக்கத்தான் என்பது போன்ற தோற்றமுடைய படங்கள்). இப்போது பள்ளி மாணவ, மாணவிதான் காதலன் காதலி. இனி அடுத்த நிலையாக தொடக்கப்ப்ள்ளி மாணவனுக்கும், எல்கேஜி மாணவிக்குமான் (காதலி வயது குறைவாக இருக்கனுமில்லையா) காதல்தான்(!!!?)

     ஒரு புறம் சொந்த சாதிக்குள் 15 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது அநாகரீகம் என்றும், மைனர் பெண்ணைத் திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும், படிக்க விரும்பும் பெண்ணை கட்டாயத் திருமணம் செய்து வைக்கபோகும் போது காவல் துறை தலையிட்டு திருமணத்தை நிறுத்தியதை பாராட்டிக் கொண்டும், ஓம் பிரகாஸ் சௌதாலா ‘பாலியல் குற்றங்கள் குறைவதற்கு இளவயதிலேயே திருமணம் செய்து வைத்து விடவேண்டும்‘ என்று கூறியதை ஆவேசமாக்க் கண்டித்துக் கொண்டுமிருக்கும் நாம்தான் சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் பள்ளிக் காதல் கதைகளை சத்தமின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.