Saturday, June 4, 2011

அவர் இவ்வாறு கூறுகிறார்


பொதிகை மலை சித்தருக்கு
வைகைக் கரையில்
பாண்டியனின் வாரிசுகள்
தண்ணீர் வார்த்து
குறி கேட்க ஆயத்தமாகினர்

காசை கையில் வச்சிக்கிட்டும்
புத்தகம் வாங்க முடியல என்றார்

மாட்டுத் தாவணி பஸ்ஸ்டாண்டில்
நல்லத் தூக்கம் வருகிறது என்றார்

கவிதாயினிகளின் போன் நம்பர்களை
அழித்து விட்டேன் என்றார்

அவன் எப்பத்தான் கவிதை எழுதுவான்
கூட்டம் கூட்டத்திற்கு அலைகிறானே என்றார்

கவிதைக்கு முழுமை வேண்டும் என்றார்
சக நண்பனின் சாதியை மறக்காது குறிப்பிட்டார்

உனக்கு எட்டாம் பாதத்தில் சனி இருக்கிறது என்றார்
பெண்ணுக்கு முன்னால் ஆபாச வார்த்தையை தவிர்த்தார்

காப்பி சுவையாக இருக்கிறது என்றார்
முட்டாள்களின் பணிவிடைகளை பகடி செய்தார்

குறி கேட்பவர்களின் ஒருவன்
குடிப்பதற்கும் குளிப்பதற்கும் வித்தியாசமிருக்கிறதா என்றான்

அன்பைக் காட்ட வேண்டிய போது கோபப்படுகிறேன்
கோபப்பட வேண்டிய போது அன்பை பொழிகிறேன் என்றார்

(கவிஞர் விக்ரிமாதித்தியனுக்கு)