Saturday, June 4, 2011

மின்விசிறி

மின்விசிறி காற்று

'உடலின் ரத்தத்தை உறிஞ்சிவிடும்`

என்று அம்மாச்சி சொல்வதுண்டு

வெளியில் வெயிலில்

அலைந்து வருபவர்களுக்கு

இதமாக இருப்பதாய்

சுழல விடுகின்றனர்

விருந்தினரை உபசரிப்பதில்

தண்ணீரின் முதலிடத்தை

பிடித்து விட்டது மின்விசிறி

ஓட்டு வீடு

காரை வீடு

கூரை வீடு

அஸ்பெஸ்டாஸ் வீடு

என்ற பேதமின்றி வீடுகள்

மின்விசிறிகளால் கட்டப்படுகின்றன.

அலுவலகம்,

பள்ளி, கல்லூரி

நூலகம், மருத்துவமனை

உணவு விடுதி, பொது தொலைபேசி நிலையம்

துணிக்கடை

என எங்கும் வியாபித்திருக்கிறது

மின்விசிறியின் ஆளுமை

காற்றை சுழற்றிவிடும் றெக்கைகளை

காற்றின் கருவறை என கற்பிக்கிறது உலகம்.

காற்றின்றி அமையாது இவ்வுலகு.

***

அமிர்தா